யாக்கோபு 3 : 1 (RCTA)
என் சகோதரர்களே, நீங்கள் எல்லோரும் போதகர்களாக விரும்பாதீர்கள். போதகர்களாகிய நாங்கள் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பது தெரியுமன்றோ?
யாக்கோபு 3 : 2 (RCTA)
ஏனெனில், நாம் அனைவரும் பலவற்றில் தவறுகிறோம். தவறான பேச்சுக்கு இடங்கொடாதவன் தன் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவன்; அவனே நிறைவு பெற்றவன்.
யாக்கோபு 3 : 3 (RCTA)
குதிரைகளைப் பாருங்கள். அவற்றை அடக்க வாயில் கடிவாளம் போட்டு முழுக் குதிரையையே கட்டுப்படுத்தி விடுகிறோம்.
யாக்கோபு 3 : 4 (RCTA)
கப்பல்களைப் பாருங்கள். அவை எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், புயல் காற்றில் அடிபட்டாலும், கப்பலோட்டி சிறியதொரு சுக்கானைக் கொண்டு தான் விரும்பும் திசையிலெல்லாம் அவற்றைச் செலுத்துகிறான்.
யாக்கோபு 3 : 5 (RCTA)
மனிதனின் நாவும் அவ்வாறே. அது உடலின் மிகச் சிறிய உறுப்பு தான். ஆயினும் பெரிய காரியங்களைச் சாதிப்பதாகப் பெருமையடிக்கிறது. சிறியதொரு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டை எரித்து விடுகிறது, பாருங்கள்.
யாக்கோபு 3 : 6 (RCTA)
நாவும் அந்த நெருப்பு போலத்தான். அக்கிரம உலகின் உருவே அது. நம் உடலின் உறுப்புக்களுள் அமைக்கப்பட்டு உடல் முழுவதையும் கறைப்படுத்தி, மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தை எரிக்கும் நெருப்பு போல் உள்ளது. அந்நெருப்போ நரகத்திலிருந்தே வருகிறது.
யாக்கோபு 3 : 7 (RCTA)
காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் நீந்துவன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதன் அடக்கிவிடலாம், அடக்கியும் உள்ளான். நாவையோ எம் மனிதனாலும் அடக்க முடிவதில்லை.
யாக்கோபு 3 : 8 (RCTA)
ஓயாமற் தொல்லைப்படுத்தும் தீமை அது; சாவு விளைக்கும் நஞ்சு நிறைந்தது அது.
யாக்கோபு 3 : 9 (RCTA)
பரம தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவதும் அந்நாவாலே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதனைத் தூற்றுவதும் அந்நாவாலே.
யாக்கோபு 3 : 10 (RCTA)
போற்றுவதும் தூற்றுவதும் ஒரே வாய்தான். என் சகோதரர்களே, இப்படி இருத்தலாகாது.
யாக்கோபு 3 : 11 (RCTA)
ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
யாக்கோபு 3 : 12 (RCTA)
என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அங்ஙனமே உப்பு நீரிலிருந்து நன்னீர் வராது.
யாக்கோபு 3 : 13 (RCTA)
உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்; அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்.
யாக்கோபு 3 : 14 (RCTA)
ஆனால், உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும் பொறாமையும் கட்சி மனப்பான்மையும் இருந்தால், அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்.
யாக்கோபு 3 : 15 (RCTA)
இத்தகைய ஞானம் விண்ணினின்று வருவதன்று; மண்ணுலகையே சார்ந்தது, கீழ் நாட்டத்தைப் பின்பற்றுவது, பேய்த்தன்மை வாய்ந்தது.
யாக்கோபு 3 : 16 (RCTA)
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எங்குள்ளதோ, அங்கே குழப்பமும் எல்லா தீச்செயல்களும் இருக்கும்.
யாக்கோபு 3 : 17 (RCTA)
விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்; பொறுமையைக் கடைப்பிடிக்கும்; இணக்கத்தை விரும்பும்; இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்; நடுநிலை தவறாது; கள்ளமறியாது.
யாக்கோபு 3 : 18 (RCTA)
சமாதானம் செய்வோர், சமாதானத்தில் விதைக்கும் விதையிலிருந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வென்னும் கனி விளைகிறது.
❮
❯