யாக்கோபு 2 : 1 (RCTA)
என் சகோதரர்களே, மாட்சிமை மிக்க நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள நீங்கள் மக்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை நடத்தாதீர்கள்.
யாக்கோபு 2 : 2 (RCTA)
நீங்கள் கூடியுள்ள இடத்தில், பொன் மோதிரமணிந்து பகட்டான உடை உடுத்திய ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அழுக்குக் கந்தையோடு ஏழை ஒருவனும் அங்கே வருகிறான்.
யாக்கோபு 2 : 3 (RCTA)
பகட்டாக உடுத்தியவனைப் பார்த்து, "ஐயா, தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று கவனித்துக் கொள்கிறீர்கள். ஏழையிடமோ, "அடே, அங்கே நில்" என்கிறீர்கள், அல்லது "தரையில் உட்கார்" என்கிறீர்கள்.
யாக்கோபு 2 : 4 (RCTA)
இப்படி உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தவறான முறையில் தீர்ப்பிடுகிறீர்கள் அல்லவா?
யாக்கோபு 2 : 5 (RCTA)
என் அன்புச் சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகினர் கண்ணுக்கு ஏழையாய் உள்ளவர்களைக் கடவுள் விசுவாசத்தில் செல்வமுடையவர்களாகவும், தம்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு வாக்களித்த அரசில் உரிமை தரவும் தேர்ந்துகொள்ளவில்லையா?
யாக்கோபு 2 : 6 (RCTA)
நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்கள் யார்?
யாக்கோபு 2 : 7 (RCTA)
உங்களை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்பவர்கள் யார்? பணக்காரர்கள் அல்லரா? யாருக்கு நீங்கள் உரியவர்களாய் இருக்கிறீர்களோ அவருடைய திருப்பெயரைப் பழித்துரைப்பவர்கள் அவர்கள் அல்லரோ?
யாக்கோபு 2 : 8 (RCTA)
"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று மறைநூல் கூறும் இறையரசின் திருச்சட்டத்தை நீங்கள் கடைப்பிடிப்பீர்களாகில் நன்று.
யாக்கோபு 2 : 9 (RCTA)
ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம். திருச்சட்டத்தை மீறுகிறவர்களென அச்சட்டமே உங்களைக் கண்டனம் செய்கிறது.
யாக்கோபு 2 : 10 (RCTA)
சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கும் ஒருவன், ஒன்றில் மட்டும் தவறினால், சட்டம் முழுவதையும் மீறிய குற்றத்திற்கு ஆளாகிறான்.
யாக்கோபு 2 : 11 (RCTA)
ஏனெனில், "விபசாரம் செய்யாதே" என்று கூறியவர், "கொலை செய்யாதே" என்றும் கூறியுள்ளார். நீ விபசாரம் செய்யாவிடினும் கொலை செய்தால் சட்டத்தை மீறியவன் ஆகிவிட்டாய்.
யாக்கோபு 2 : 12 (RCTA)
விடுதலையாக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.
யாக்கோபு 2 : 13 (RCTA)
இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற தீர்ப்புத்தான் கிடைக்கும். இரக்கம் காட்டுபவன் தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை.
யாக்கோபு 2 : 14 (RCTA)
என் சகோதரர்களே, தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை மீட்க முடியுமா?
யாக்கோபு 2 : 15 (RCTA)
போதிய உடையோ அன்றாட உணவோ இல்லாத சகோதர சகோதரி யாரேனும் இருந்தால், தேவையானது ஒன்றையும் கொடாமல்,
யாக்கோபு 2 : 16 (RCTA)
ஒருவன் அவர்களைப் பார்த்து, "சுகமாகப் போய் வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்பானாகில் பயன் என்ன?
யாக்கோபு 2 : 17 (RCTA)
விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும்.
யாக்கோபு 2 : 18 (RCTA)
ஆனால், "ஒருவனிடம் விசுவாசம் உள்ளது, இன்னொருவனிடம் செயல் உள்ளது; அதனால் என்ன?" என்று யாராவது சொல்லக்கூடும். செயல்கள் இல்லாத அந்த விசுவாசத்தை எனக்குக் காட்டு. நான் செயல்களைக் கொண்டு என் விசுவாசத்தை உனக்குக் காட்டுகிறேன்.
யாக்கோபு 2 : 19 (RCTA)
கடவுள் ஒருவரே என்று நீ விசுவசிக்கிறாய், நல்லது தான். பேய்கள் கூட அதை விசுவசிக்கின்றன; விசுவசித்து நடுங்குகின்றன.
யாக்கோபு 2 : 20 (RCTA)
அறிவிலியே, செயலற்ற விசுவாசம் பயனற்றதென நீ அறிய வேண்டுமா? நம் தந்தையாகிய ஆபிரகாமைப் பார்.
யாக்கோபு 2 : 21 (RCTA)
தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின் மேல் பலி கொடுத்த போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவரானார்?
யாக்கோபு 2 : 22 (RCTA)
விசுவாசமும் செயல்களும் ஒருங்கே செயலாற்றின என்பதும், செயல்களால் விசுவாசம் நிறைவு பெற்றது என்பதும் இதிலிருந்து புலப்படுகிறதன்றோ?
யாக்கோபு 2 : 23 (RCTA)
இவ்வாறு "ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவர் என மதித்தார்" என்ற மறைநூல் வாக்கு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பன் எனவும் அழைக்கப் பெற்றார்.
யாக்கோபு 2 : 24 (RCTA)
ஆகவே, மனிதன் விசவாசத்தினால் மட்டுமன்று, செயல்களாலும் இறைவனுக்கு ஏற்புடையவனாகிறான் என்று தெரிகிறது.
யாக்கோபு 2 : 25 (RCTA)
அவ்வாறே, ராகாப் என்ற விலைமாது தூதவர்களை வரவேற்று, வேறு வழியாய் அனுப்பிய போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவளானாள்?
யாக்கோபு 2 : 26 (RCTA)
ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே.
❮
❯