ஏசாயா 9 : 1 (RCTA)
முற்காலத்தில் ஆண்டவர் சபுலோன் நாட்டிடையும், நெப்தாலிம் நாட்டையும் அவமதிப்புக்கு உள்ளாக்கினார்; ஆனால் பிற்காலத்தில் கடல் நோக்கும் வழியையும், யோர்தான் அக்கரைப் பகுதியையும் புறவினத்தார் வாழும் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார்.
ஏசாயா 9 : 2 (RCTA)
இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்; மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்துச் சுடர் வீசிற்று.
ஏசாயா 9 : 3 (RCTA)
மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.
ஏசாயா 9 : 4 (RCTA)
ஏனெனில் மாதியான் நாட்டுப் போர்க் காலத்தில் செய்தது போல், அவர்கள் தோள் மேல் சுமத்தப்பட்ட நுகத்தையும், தோளைக் காயப்படுத்திய தடியையும், அவர்களை ஒடுக்கியவனின் கொடுங்கோலையும் நீர் ஒடித்தெறிந்தீர்.
ஏசாயா 9 : 5 (RCTA)
ஏனெனில் போர்க்களத்தில் பயன்பட்ட ஒவ்வொரு மிதியடியும், இரத்த வெள்ளத்தில் தோய்ந்த ஆடைகள் யாவும் நெருப்புக்கு விறகாகப் பயன்பட்டு எரிக்கப்படும்.
ஏசாயா 9 : 6 (RCTA)
ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது, நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, "வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை, அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.
ஏசாயா 9 : 7 (RCTA)
அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் அமைதியின் பெருக்கிற்கும் முடிவு என்பதே இராது. தாவீதின் அரியனையில் அமர்வார்; அவரது அரசை நிறுவுவார்; இன்று முதல் என்றென்றும் நீதியாலும் நியாத்தாலும் அதை நிலைபெயராது காத்திடுவார்; சேனைகளின் ஆண்டவரது ஆர்வம் இதைச் செய்யும்.
ஏசாயா 9 : 8 (RCTA)
ஆண்டவர் யாக்கோபுக்கு எதிராக ஒரு வாக்குரைத்திருக்கிறார்; அப்படியே அது இஸ்ராயேலுக்குப் பலிக்கும்.
ஏசாயா 9 : 9 (RCTA)
அப்போது எல்லா மக்களும் அறிந்து கொள்வார்கள், எப்பிராயீமும் சமாரியாவின் குடிகளும் தெரிந்து கொள்வர். செருக்கிலும் உள்ளத்தின் அகந்தையிலும் அவர்கள்,
ஏசாயா 9 : 10 (RCTA)
செங்கற் கட்டடம் தகர்ந்து வீழ்ந்தது, ஆனால் செதுக்கிய கற்களால் கட்டுவோம்; காட்டத்தி மரங்கள் வெட்டுண்டு சாய்ந்தன, ஆனால் அவற்றுக்குப் பதிலாகக் கேதுரு மரங்கள் வைப்போம்" என்று சொல்லுகிறார்கள்.
ஏசாயா 9 : 11 (RCTA)
ஆகவே இராசீனின் எதிரிகளை அவர்களுக்குகெதிராய் ஆண்டவர் எழும்பச் செய்வார், அவர்களின் பகைவர்களைத் தூண்டிவிடுவார்;
ஏசாயா 9 : 12 (RCTA)
கிழக்கிலே சீரியர்களும் மேற்கிலே பிலிஸ்தியர்களும், வாயைப் பிளந்து இஸ்ராயேலை விழுங்குவார்கள். இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை. நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 9 : 13 (RCTA)
தங்களை நொறுக்கியவரிடம் மக்கள் திரும்பவில்லை, சேனைகளின் ஆண்டவரை அவர்கள் தேடவில்லை.
ஏசாயா 9 : 14 (RCTA)
ஆதலால் ஆண்டவர் ஒரே நாளில், இஸ்ராயேலின் தலையையும் வாலையும், கிளையையும் மெல்லிய நாணலையும் தறித்து விட்டார்.
ஏசாயா 9 : 15 (RCTA)
முதியோரும் மதிப்புக்குரியவரும் தலையாவர், பொய்யுரைக்கும் தீர்க்கதரிசி வால் ஆவான்.
ஏசாயா 9 : 16 (RCTA)
ஏனெனில், இந்த மக்களை நடத்துகிறவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்லுகிறார்கள், அவர்களால் நடத்தப்படுகிற மக்களோ விழுங்கப் படுகிறார்கள்.
ஏசாயா 9 : 17 (RCTA)
ஆதலால் ஆண்டவர் அவர்களின் இளைஞரைக் குறித்து மகிழ்வதில்லை, திக்கற்றவர் மேலும் கைம்பெண்கள் மேலும் இரங்குவதில்லை. ஏனெனில் ஒவ்வொருவனும் கடவுட் பற்றில்லாதவன், கொடியவன், ஒவ்வொருவன் வாயும் பேதமையே பேசுகிறது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 9 : 18 (RCTA)
ஏனெனில் அக்கிரமம் தீயைப் போல் எரிகின்றது, முட்களையும் முட்புதர்களையும் தீய்க்கின்றது, காட்டில் அடர்ந்துள்ள செடிகளைப் பிடிக்கின்றது, தூண் போல புகைப்படலம் எழும்புகின்றது.
ஏசாயா 9 : 19 (RCTA)
சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால் நாடெல்லாம் தீப்பற்றி எரிகின்றது; மக்களோ நெருப்புக்கு விறகானார்கள், சகோதரன் சகோதரனுக்கு இரங்குவதில்லை.
ஏசாயா 9 : 20 (RCTA)
வலப்பக்கம் பிடுங்கித் தின்றும் பசி தீரவில்லை; இடப்பக்கம் எடுத்து விழுங்கியும் திருப்தியில்லை. ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்; மனாசே எப்பிராயீமைப் பிடுங்கித்தின்பான், எப்பிராயீம் மனாசேயைப் பிடுங்கித் தின்பான், இருவரும் ஒன்றாக யூதாவின் மேல் பாய்வார்கள்.
ஏசாயா 9 : 21 (RCTA)
இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21