ஏசாயா 7 : 1 (RCTA)
யூதாவின் அரசனான ஓசியாஸ் என்பவனின் மகன் யோவாத்தானின் மகன் ஆக்காஸ் அரசனுடைய நாட்களில் சீரியாவின் அரசனான இராசீன் என்பவனும், இஸ்ராயேலின் அரசனாகிய ரொமேலியின் மகன் பாசே என்பவனும் யெருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அதைப் பிடிக்கப் பார்த்தனர்; ஆயினும் அதைப் பிடிக்க முடியவில்லை.
ஏசாயா 7 : 2 (RCTA)
சீரியா எப்பிராயீமோடு சேர்ந்துகொண்டது" என்னும் செய்தி தாவீதின் வீட்டாருக்கு எட்டியதும், ஆக்காஸ் உள்ளமும், அவன் நாட்டினரின் உள்ளங்களும் காட்டு மரங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படுவது போல் அலைக்கழிக்கப் பட்டன.
ஏசாயா 7 : 3 (RCTA)
அப்போது ஆண்டவர் இசையாசை நோக்கிக் கூறினார்: "நீயும் உன் மகன் ஷூயார் யஷபூ என்பவனும் 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில், மேற்குளத்துக்குப் போகும் கட்டுக் கால்வாயின் மறுமுனைக்குப் போய் அங்கே ஆக்காசைச் சந்தித்து,
ஏசாயா 7 : 4 (RCTA)
அவனுக்கு இதைச் சொல்: 'அமைதியாய் இரு, அஞ்சாதே; சீரியாவின் அரசனான இராசீனுடையவும் ரொமேலியின் மகனுடையவும் பொங்கியெழும் கடுஞ்சினமாகிய புகையும் இரண்டு கொள்ளிகளைக் கண்டு உன் உள்ளம் கலங்காதிருக்கட்டும்.
ஏசாயா 7 : 5 (RCTA)
சீரியாவும் எப்பிராயீமும் ரொமேலியின் மகனும், உனக் கெதிராகச் சதித்திட்டம் தீட்டி,
ஏசாயா 7 : 6 (RCTA)
யூதாவுக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதனை அச்சுறுத்திப் போர் புரிந்து கைப்பற்றுவோம்; தபேயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்" என்று பேசிக் கொண்டார்கள்.
ஏசாயா 7 : 7 (RCTA)
ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: அவர்களின் திட்டம் நிலைபெறாது, அது நிறைவேறாது;
ஏசாயா 7 : 8 (RCTA)
ஏனெனில் சீரியாவுக்குத் தலைநகரம் தமஸ்குப் பட்டணம், தமஸ்குப் பட்டணத்தின் தலைவன் இராசீன் அரசன். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்பிராயீம் தவிடு பொடியாக்கப்படும்: அதன் பின் அது ஒரு மக்களினமாகவே இராது.)
ஏசாயா 7 : 9 (RCTA)
எப்பிராயீமுக்குத் தலைநகரம் சமாரியாப் பட்டணம், சமாரியாப் பட்டணத்தின் தலைவன் ரொமேலியின் மகன். உங்களிடம் விசுவாசம் இல்லாவிட்டால், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்."
ஏசாயா 7 : 10 (RCTA)
ஆண்டவர் மீண்டும் ஆக்காசிடம் பேசி,
ஏசாயா 7 : 11 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஓர் அடையாளம் காட்டும்படி கேள்; பாதாளத்தின் கீழோ, வானத்தின் மேலோ தோன்றும் படி கேட்கலாம்" என்றார்.
ஏசாயா 7 : 12 (RCTA)
அதற்கு ஆக்காஸ் மறுமொழியாக, "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரை நான் சோதிக்கமாட்டேன்" என்று சொன்னான்.
ஏசாயா 7 : 13 (RCTA)
அப்பொழுது அவர் சொன்னார்: "அப்படியானால் தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரைச் சலிப்படையச் செய்தது போதாதென்றா என் கடவுளையும் சலிப்படையச் செய்கிறீர்கள்?
ஏசாயா 7 : 14 (RCTA)
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;
ஏசாயா 7 : 15 (RCTA)
தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறியும் வரை, அவன் வெண்ணெயும் தேனும் சாப்பிடுவான்.
ஏசாயா 7 : 16 (RCTA)
குழந்தை தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறிவதற்கு முன், நீ அஞ்சி நடுங்கும் அரசர்கள் இருவரின் நாடு அழிந்து பாழாய்ப் போகும்;
ஏசாயா 7 : 17 (RCTA)
யூதாவினின்று எப்பிராயீம் பிரிந்து போன நாட்களிலிருந்து இன்று வரையில் வந்திராத நாட்களை ஆண்டவர் உன் மேலும், உன் நாட்டு மக்கள் மேலும், உன் தந்தையின் வீட்டார் மேலும் வரச் செய்வார்." (அதாவது - அசீரியா அரசன் வருவான் என்பது.)
ஏசாயா 7 : 18 (RCTA)
அந்நாளில், எகிப்து நதிகளின் ஊற்று முனையிலிருந்து கொசுக்களையும், அசீரியா நாட்டினின்று தேனீக்களையும் சீழ்க்கையொலி செய்து ஆண்டவர் கூப்பிடுவார்.
ஏசாயா 7 : 19 (RCTA)
உடனே அவை யாவும் ஓடிவந்து, கணவாய்களின் நீர்த்தாரைகளிலும், கற்பாறைகளின் பொந்துகளிளிலும் முட்புதர்கள் அனைத்தின் மேலும், எல்லா மேய்ச்சல் நிலங்களிலும், ஏராளமாய் வந்திறங்கும்.
ஏசாயா 7 : 20 (RCTA)
அந்நாளில் பேராற்றுக்கு அப்பாலிலிருந்து வாங்கிய கத்தியைக் கொண்டு, (கத்தி - அசீரிய அரசனைக் குறிக்கிறது) தலையிலும் உடலிலும் உள்ள மயிரையும், தாடி அனைத்தையும் ஆண்டவர் மழித்து விடுவார்.
ஏசாயா 7 : 21 (RCTA)
அந்நாளில் இளம்பசு ஒன்றையும் இரண்டு ஆடுகளையுமே ஒரு மனிதன் வைத்திருப்பான்;
ஏசாயா 7 : 22 (RCTA)
அவை கொடுக்கும் பாலின் மிகுதியினால் அவன் வெண்ணெய் சாப்பிடுவான்; ஏனெனில் நாட்டில் விடப்பட்டவன் ஒவ்வொருவனும் வெண்ணெயும் தேனுமே சாப்பிடுவான்.
ஏசாயா 7 : 23 (RCTA)
அந் நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு பெறுமானமுள்ள ஆயிரம் திராட்சைக் கொடிகள் இருந்த இடமெல்லாம் முட்களும் புதர்களுமே முளைத்திருக்கும்;
ஏசாயா 7 : 24 (RCTA)
வில்லோடும் அம்போடும் மனிதர்கள் அங்கே வருவார்கள், ஏனெனில் நாடெங்கும் முட்களும் முட்புதர்களுமே இருக்கும்.
ஏசாயா 7 : 25 (RCTA)
மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டுப் பயிரிடப்பட்டு வந்த மலைகளுக்கெல்லாம், முட்களுக்கும் முட்புதர்களுக்கும் அஞ்சி யாருமே வரத் துணியமாட்டார்கள்; அவை மாடுகள் மேயும் இடமாகும், ஆடுகள் நடமாடும் காடாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25