ஏசாயா 65 : 1 (RCTA)
முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம்.
ஏசாயா 65 : 2 (RCTA)
தங்களுடைய எண்ணங்களையே பின்பற்றிக் கொண்டு, தீய வழியில் நடக்கும்அவிசுவாசிகளான மக்கள்பால் நாள் முழுவதும் நம் கைகளை நீட்டி அழைத்தோம்.
ஏசாயா 65 : 3 (RCTA)
அந்த மக்கள் நமக்குக் கோப மூட்டும்படியானதையே எந்நேரமும் நம் கண்கள்முன் செய்கின்றனர்; தோட்டங்களில் பலியிடுகின்றனர்; செங்கற் பீடங்கள் மேல் பலி நிறைவேற்றுகின்றனர்.
ஏசாயா 65 : 4 (RCTA)
கல்லறைகளில் வாழ்கிறார்கள்; இருண்ட மூலைகளில் படுத்து உறங்குகிறார்கள்; பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள்; அருவருப்பான மதுவைத் தங்கள் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.
ஏசாயா 65 : 5 (RCTA)
இவ்வாறிருந்தும் மற்றவர்களைப் பார்த்து, "எட்டி நில், கிட்டே வராதே; நீ தீட்டுள்ளவன், நானோ தூய்மையானவன்" என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் நமக்கு எரிச்சலூட்டும் புகை போலும், நாள் முழுவதும் எரிகிற நெருப்புப் போலும் இருக்கிறார்கள்.
ஏசாயா 65 : 6 (RCTA)
இதோ, நமது முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது: "நாம் அமைதியாய் இருக்கப் போவதில்லை; அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், மடியில் அளந்து போடுவோம்.
ஏசாயா 65 : 7 (RCTA)
அவர்களின் அக்கிரமங்களையும், மலைகளின் மேல் பலியிட்டுக் குன்றுகளின் மேல் சிலை வழிபாடு செய்து நம்மை அவமானப்படுத்திய அவர்களுடைய தந்தையர்களின் அக்கிரமங்களையும் ஒருமிக்கத் தண்டிப்போம்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய பலனை அவர்கள் மடியில் அளந்து கொடுப்போம், என்கிறார் ஆண்டவர்."
ஏசாயா 65 : 8 (RCTA)
திராட்சைக் குலையில் இரசம் இருந்தால், 'அதை அழிக்காதே, அது ஆசீர்வாதம்" என்று மக்கள் சொல்லுகிறார்கள்; அதுபோலவே, நம் அடியார்களை முன்னிட்டும் செய்வோம்; இஸ்ராயேல் முழுவதையுமே அழித்துவிட மாட்டோம்.
ஏசாயா 65 : 9 (RCTA)
மேலும் யாக்கோபினின்று சந்ததியையும், யூதாவிலிருந்து நம் மலைகளை உடைமையாக்கிக் கொள்பவனையும் தோன்றச் செய்வோம்; நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் அந்நாட்டை உரிமைச் சொத்தாய் பெறுவார்கள்; நம் ஊழியர்கள் அங்கே வாழ்வார்கள்.
ஏசாயா 65 : 10 (RCTA)
நம்மை தேடிவந்த நம்மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆட்டு மந்தைகளின் கிடையாகவும், ஆங்கோர் பள்ளத்தாக்கு மாட்டுத் தொழுவமாகவும் இருக்கும்.
ஏசாயா 65 : 11 (RCTA)
ஆனால் ஆண்டவரை கைவிட்டு நமது பரிசுத்த மலையை மறந்தவர்களே, அதிர்ஷ்ட தேவதைக்குப் பீடம் சமர்ப்பித்து விதியின் தெய்வத்துக்குப் பானப்பலிகளை வார்க்கிறவர்களே,
ஏசாயா 65 : 12 (RCTA)
உங்களை நாம் ஒருவர் பின் ஒருவராய் வாளுக்கிரையாக்குவோம், அந்தப் படுகொலையில் நீங்கள் யாவரும் மடிவீர்கள்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், நீங்கள் பதில் தரவில்லை, நாம் பேசினோம், நீங்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தீர்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றை நீங்கள் தேர்ந்துகொண்டீர்கள்."
ஏசாயா 65 : 13 (RCTA)
ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நம் ஊழியர்கள் உண்பார்கள், நீங்களோ பசியால் வாடுவீர்கள்;
ஏசாயா 65 : 14 (RCTA)
இதோ, நம் ஊழியர்கள் பானம் அருந்துவார்கள், நீங்களோ தாகத்தால் வருந்துவீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள், நீங்களோ வெட்கத்தால் தலை கவிழ்வீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் இதய மகிழ்ச்சியால் பாடுவார்கள், நீங்களோ உள்ளத்தின் வருத்தத்தால் கூக்குரலிடுவீர்கள்; மனமொடிந்து புலம்பியழுவீர்கள்.
ஏசாயா 65 : 15 (RCTA)
நம்மால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபனைப் பெயராக விட்டுச் செல்வீர்கள்; கடவுளாகிய ஆண்டவர் உங்களைக் கொன்று போடுவார்; தம்முடைய ஊழியர்களுக்கு வேறு பெயர் சூட்டுவார்.
ஏசாயா 65 : 16 (RCTA)
இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்படுபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசீர்வதிக்கப்படுவான்; இவ்வுலகில் ஆணையிடுபவன், உண்மைக் கடவுளின் திருப்பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில் முந்திய இடையூறுகள் மறதியாய்ப் போயின; என் கண்களுக்கு மறைந்து போயின.
ஏசாயா 65 : 17 (RCTA)
இதோ, புதிய வானத்தையும் புதிய பூமியையும் நாம் படைக்கிறோம்; முன்னையவை நினைவில் இருக்கமாட்டா; எண்ணத்திலும் தோன்ற மாட்டா.
ஏசாயா 65 : 18 (RCTA)
நாம் படைக்கப் போவதைக் குறித்து நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து அக்களிப்பீர்கள்; ஏனெனில், இதோ நாம் யெருசலேமை அக்களிப்பாகவும், அதன் குடிமக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கப் போகிறோம்.
ஏசாயா 65 : 19 (RCTA)
நாமும் யெருசலேமைக் குறித்து அக்களிப்போம், நம் மக்களை நினைத்து அகமகிழ்வோம்; இனி ஆங்கே அழுகுரலோ கூக்குரலோ கேட்கப்படாது.
ஏசாயா 65 : 20 (RCTA)
அதில் சில நாட்களே வாழ்ந்த சிறுவனோ, தன் வாழ்நாளை நிறைவு செய்யாக் கிழவனோ இருக்கமாட்டார்கள்; ஏனெனில் சிறுவன் நூறு வயதினனாய் இறப்பான்; நூறு வயதுள்ள பாவியோ சபிக்கப்படுவான்.
ஏசாயா 65 : 21 (RCTA)
அவர்கள் வீடுகள் கட்டிக் குடியிருப்பார்கள்; திராட்சைச் கொடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பார்கள்.
ஏசாயா 65 : 22 (RCTA)
வேறொருவன் குடியிருக்கும்படி அவர்கள் வீடு கட்ட மாட்டார்கள்; அந்நியன் சாப்பிடும்படி திராட்சைக் கொடிகளை நடமாட்டார்கள். மரங்களின் வயதைப் போல நம்முடைய மக்களின் நாட்களும் இருக்கும்; நம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் வேலைகளின் பயனைத் துய்ப்பார்கள்.
ஏசாயா 65 : 23 (RCTA)
அவர்கள் வீணுக்கு உழைப்பதில்லை; அழிவதற்கென்று பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள்; அவர்களுடைய புதல்வர்களும் அத்தகையவர்களே.
ஏசாயா 65 : 24 (RCTA)
அவர்கள் கூக்குரலிடுவதற்கு முன்பே நாம் செவிசாய்ப்போம்; அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போதே நாம் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்போம்.
ஏசாயா 65 : 25 (RCTA)
ஓநாயும் செம்மறியும் ஒன்றாய் மேயும்; சிங்கமும் மாடும் வைக்கோலைத் தின்னும். பாம்புக்கு மண் உணவாகும்; நமது பரிசுத்த மலையெங்கும் அவை யாரையும் துன்புறுத்த மாட்டா, கொலை செய்யமாட்டா, என்கிறார் ஆண்டவர்."
❮
❯