ஏசாயா 64 : 1 (RCTA)
வானத்தைக் கிழித்து நீர் இறங்கி வரமாட்டீரா! - மலைகள் உம் திருமுன் கரைந்து போகுமே!
ஏசாயா 64 : 2 (RCTA)
அவை நெருப்பில் எரியும் விறகைப் போலவும், நெருப்பால் கொதிக்கும் தண்ணீரைப் போலவும் ஆகும். உமது பெயர் உம் பகைவர்களுக்கு விளங்கவும், புறவினத்தார் உம் திருமுன் நடுங்கவும் நீர் வரமாட்டீரா!
ஏசாயா 64 : 3 (RCTA)
நாங்கள் எதிர்பாராத அச்சத்துக்குரிய விந்தைகளை நீர் செய்த போது, நீர் இறங்கி வந்தீர், உம் திருமுன் மலைகள் உருகிப் போயின.
ஏசாயா 64 : 4 (RCTA)
தமக்காகக் காத்திருப்பவர்களுக்கென செயலாற்றும் கடவுள் உண்டோ? உம்மையன்றி வேறொருவர் உண்டென்று தொடக்கத்திலிருந்து யாரும் கேள்விப்பட்டதுமில்லை, செவியுற்றதுமில்லை, கண்ணால் கண்டதுமில்லை.
ஏசாயா 64 : 5 (RCTA)
மகிழ்ச்சியோடு நீதியைக் கடைப்பிடிப்பவனையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைவு கூர்கிறவர்களையும், நீர் எதிர்கொண்டு வந்து சந்திக்கிறீர்; இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர், நாங்களோ பாவஞ்செய்தோம்; அவற்றிலேயே நாங்கள் நெடுங்காலமாய் உழல்கிறோம், எங்களுக்கும் மீட்புக் கிடைக்குமோ?
ஏசாயா 64 : 6 (RCTA)
நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்ட மனிதனைப் போல் ஆனோம், எங்கள் நீதியின் செயல்கள் யாவும் கறைபட்ட ஆடை போலாயின; இலை போல நாங்கள் அனைவரும் உதிர்ந்து போனோம், காற்றைப் போல் எங்கள் அக்கிரமங்கள் எங்களை அடித்துப் போயின.
ஏசாயா 64 : 7 (RCTA)
உமது பெயரைக் கூவியழைப்பவன் எவனுமில்லை, எழுந்து உம்மைப் பற்றிக்கொள்பவன் ஒருவனுமில்லை; எங்களிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொண்டீர், எங்கள் அக்கிரமங்களின் கையில் எங்களை விட்டு விட்டீர்.
ஏசாயா 64 : 8 (RCTA)
ஆயினும், ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நாங்கள் களிமண், நீர் எங்களை வனைபவர்; நாங்கள் யாவரும் உம்முடைய கைவேலைப் பாடுகள்.
ஏசாயா 64 : 9 (RCTA)
ஆண்டவரே, கடுமையாய் எங்கள் மேல் சினங்கொள்ளாதீர், இனியும் எங்கள் அக்கிரமத்தை நினைவு கூராதீர்; இதோ பாரும், நாங்கள் எல்லாரும் உம் மக்கள் தானே!
ஏசாயா 64 : 10 (RCTA)
உம் பரிசுத்த பட்டணங்கள் பாலை நிலமாகி விட்டன, சீயோன் பாழடைந்து போயிற்று, யெருசலேம் பாழ்வெளியாகி விட்டது.
ஏசாயா 64 : 11 (RCTA)
பரிசுத்தமும் மகிமையும் வாய்ந்த எங்கள் கோயில், எங்கள் தந்தையர் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிய அந்த இடம் தீக்கிரையாகி அழிந்ததே; எங்கள் சிறந்த கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்த நிலையில் கிடக்கின்றனவே.
ஏசாயா 64 : 12 (RCTA)
ஆண்டவரே, இவற்றுக்குப் பின்னும் நீர் அமைந்திருப்பீரோ? மௌனங் காத்து, இன்னும் கடுமையாய் எங்களைத் துன்புறுத்துவீரோ?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: