ஏசாயா 63 : 1 (RCTA)
ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? செந்நீர் தோய்ந்த ஆடையினராய்ப் போஸ்ராவிலிருந்து வருகிற இவர் யார்; மகிமையான ஆடைகளை அணிந்தவராய் வல்லமையின் பெருமிதத்தோடு நடப்பவர் இவர் யார்? "நாம் தான்; நீதியை முழங்குகிற நாமே மீட்பளிக்கவும் வல்லவர்."
ஏசாயா 63 : 2 (RCTA)
உமது மேலாடை செந்நிறமாய் இருப்பதேன்?- உம் ஆடைகள் திராட்சைப் பழங்களை மிதிப்பவரின் ஆடை போலக் காணப்படுவதேன்?
ஏசாயா 63 : 3 (RCTA)
திராட்சைப் பழங்களை நாம் தனியாகவே மிதித்தோம், மக்களுள் யாரும் நமக்கு உதவியாய் வரவில்லை; நம் ஆத்திரத்தில் நாம் அவர்களை மிதித்தோம், நமது கோபத்தில் அவர்களைத் துவைத்தோம்; அவர்களின் செந்நீர் நம் ஆடைகளில் தெறித்தது, நம் மேலாடைகள் எல்லாம் கறைபட்டன.
ஏசாயா 63 : 4 (RCTA)
ஏனெனில் பழி வாங்கும் நாள் நம் மனத்தில் இருந்தது, நம்முடைய மீட்பின் ஆண்டு வந்து விட்டது.
ஏசாயா 63 : 5 (RCTA)
சுற்றிலும் பார்த்தோம், நமக்கு உதவி செய்பவன் எவனுமில்லை; ஆச்சரியம்! நமக்குத் துணை செய்பவன் ஒருவனுமில்லை; நம்முடைய கைப் புயமே நமக்கு வெற்றி கொணர்ந்தது, நமது சினமே நமக்குத் துணை நின்றது.
ஏசாயா 63 : 6 (RCTA)
நமது ஆத்திரத்தில் மக்களினங்களை மிதித்துத் தள்ளினோம், நம் கோபத்தைப் பருகச் செய்து அவர்களுக்குப் போதையேறச் செய்தோம்; அவர்களுடைய செந்நீரைத் தரையில் வடியச் செய்தோம்."
ஏசாயா 63 : 7 (RCTA)
ஆண்டவரின் இரக்கச் செயல்களை நினைவு கூர்வேன்; ஆண்டவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், இஸ்ராயேல் வீட்டாருக்குத் தம் கருணைக்கேற்றவாறும், வற்றா இரக்கப் பெருக்கத்திற்கேற்றவாறும் செய்த நன்மைகளுக்காகவும், ஆண்டவருக்கு புகழ் கூறுவேன்.
ஏசாயா 63 : 8 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் தம் மக்களைக் குறித்து, மெய்யாகவே அவர்கள் நம் மக்கள், நம்மை மறுதலிக்காத பிள்ளைகள் என்றும் இவ்வாறு அவர் அவர்களுக்கு மீட்பரானார்.
ஏசாயா 63 : 9 (RCTA)
அவர்களுடைய துன்பங்களைக் குறித்து அவர் கலங்கினார், அவருடைய திருமுன் இருக்கும் தூதர் அவர்களைக் காத்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை அவரே மீட்டார், தொன்று தொட்டு அவர்களை ஆதரித்தார், அவர்களை உயர்த்தினார்.
ஏசாயா 63 : 10 (RCTA)
அவர்களோ அவருக்குக் கோப மூட்டினார்கள், அவருடைய பரிசுத்தரின் ஆவிக்கு வருத்தம் தந்தனர்; ஆதலால் அவர்களுக்கே பகைவராய் அவர் மாறினார், அவரே அவர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்தார்.
ஏசாயா 63 : 11 (RCTA)
அப்போது தம் ஊழியனாகிய மோயீசனின் நாட்களை நினைவுகூர்ந்தார்: தம் மந்தையின் மேய்ப்பனைக் கடலினின்று வெளியே கூட்டி வந்தவர் எங்கே?தம் பரிசுத்த ஆவியை மக்களுக்குள் நிலைத்திருக்கச் செய்தவர் எங்கே?
ஏசாயா 63 : 12 (RCTA)
தமது மாட்சிமிக்க கைவன்மை மோயீசனின் வலக்கையோடு செல்லும்படி செய்தவர் எங்கே? தமக்கு முடிவில்லாத பேரும் புகழும் உண்டாகும்படி, அவர்கள் முன்னிலையில் தண்ணீரைப் பிரித்து,
ஏசாயா 63 : 13 (RCTA)
பாலை நிலத்தில் இடறாமல் நடக்கும் குதிரை போல், ஆழ்கடல் வழியாய் அவர்களை நடத்தி வந்தவர் யார்?
ஏசாயா 63 : 14 (RCTA)
சமவெளியில் இறங்கிப் போகும் மந்தை போல் ஆண்டவரின் ஆவி அவர்களைக் கூட்டிப் போனது. உமக்கு மகிமையான பெயர் விளங்கும்படி இவ்வாறு நீர் உம் மக்களைக் கூட்டிப் போனீர்.
ஏசாயா 63 : 15 (RCTA)
விண்ணகத்தினின்று கண்ணோக்கியருளும், உமது பரிசுத்த இடத்தினின்று, மகிமையின் அரியணையினின்று பாரும்; உம்முடைய ஆர்வமும் வல்லமையும் எங்கே? உமது உள்ளத்தின் அன்பும் இரக்கப் பெருக்கமும் எங்கே? என் மேல் அவை பொழியாமல் அடக்கப்பட்டனவே!
ஏசாயா 63 : 16 (RCTA)
ஏனெனில் நீரே எங்கள் தந்தை, ஆபிரகாம் எங்களை அறியார், இஸ்ராயேலுக்கு எங்களைத் தெரியாது; ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நீரே எங்கள் மீட்பர், தொன்று தொட்டு உமது பெயர் அதுவே.
ஏசாயா 63 : 17 (RCTA)
ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து நாங்கள் பிறழும்படி விட்டதேன்? உமக்கு அஞ்சாதபடி எங்கள் உள்ளத்தைக் கடினமாக்கியதேன்? உம்முடைய ஊழியர்களை முன்னிட்டும் உம் உரிமைச் சொத்தாகிய கோத்திரங்களை முன்னிட்டும் எங்கள் பக்கமாய்த் திரும்பியருளும்.
ஏசாயா 63 : 18 (RCTA)
பொல்லாதவர் உம் பரிசுத்த இடத்தில் கால் வைத்தது ஏன்? எங்கள் எதிரிகள் உமது பரிசுத்த இடத்தைக் காலால் மிதித்தது ஏன்?
ஏசாயா 63 : 19 (RCTA)
நீர் எங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்பும், எங்கள் மேல் உமது திருப்பெயர் வழங்கப்படுவதற்கு முன்பும், தொடக்கத்தில் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே இப்பொழுது ஆகிவிட்டோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19