ஏசாயா 60 : 1 (RCTA)
யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.
ஏசாயா 60 : 2 (RCTA)
இதோ, காரிருள் பூமியை மூடிக்கொள்ளுகிறது; அடர்ந்த இருள் மக்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது; ஆனால் ஆண்டவர் உன் மேல் எழுந்தருள்வார், அவரது மகிமை உன் மீது உதயமாகும்.
ஏசாயா 60 : 3 (RCTA)
மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.
ஏசாயா 60 : 4 (RCTA)
கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி உன்னிடம் வருகின்றனர்; உன் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகின்றனர். உன் புதல்வியர் இடுப்பில் தூக்கி வரப்படுகின்றனர்.
ஏசாயா 60 : 5 (RCTA)
நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும்; ஏனெனில், கடல் வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.
ஏசாயா 60 : 6 (RCTA)
ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும், மாதியான், எப்பா நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும்; சாபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ் பாடிக் கொண்டு வருவார்கள்.
ஏசாயா 60 : 7 (RCTA)
கேதாரின் மந்தைகள் யாவும் உன்னிடம் சேர்க்கப்படும், நாபாயோத்தின் செம்மறிகள் உனக்குப் பயன்படும்; நமக்கு ஏற்புடைய பீடத்தின் மேல் அவை ஒப்புக் கொடுக்கப்படும், நமது மாட்சிமையின் கோயிலை மகிமைப்படுத்துவோம்.
ஏசாயா 60 : 8 (RCTA)
மேகங்கள் போலும், கூட்டுக்குப் பறந்தோடும் காட்டுப் புறாக்கள் போலும் விரைந்து பறந்து போகும் இவர்கள் யார்?
ஏசாயா 60 : 9 (RCTA)
தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன; உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.
ஏசாயா 60 : 10 (RCTA)
அந்நியரின் மக்கள் உன் சுவர்களைக் கட்டுவர், அவர்களின் அரசர்கள் உனக்குப் பணிபுரிவர்; கோபத்தில் நாம் உன்னை அடித்து நொறுக்கினோம், இப்போது சமாதானமாகி உன் மேல் இரக்கம் காட்டினோம்.
ஏசாயா 60 : 11 (RCTA)
உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும், இரவிலும் பகலிலும் அவை மூடப்படா; மக்களினங்களின் செல்வங்கள் கொண்டு வரப்படும், அவர்களின் அரசர்கள் கூட்டி வரப்படவும் அவை திறந்தே இருக்கும்.
ஏசாயா 60 : 12 (RCTA)
உனக்கு அடிபணியாத மக்களினமோ அரசோ அழிந்து போகும், அவை அனைத்தும் முற்றிலும் பாழாக்கப்படும்;
ஏசாயா 60 : 13 (RCTA)
லீபானின் மகிமை உன்னை நாடி வரும், தேவதாரு, புன்னைமரம், ஊசியிலைமரம் ஆகியவை நமது பரிசுத்த இடத்தை அழகுபடுத்தக் கொண்டு வரப்படும்; நம் கால்மணையின் இருப்பிடத்தை நாம் மகிமைப்படுத்துவோம்.
ஏசாயா 60 : 14 (RCTA)
உன்னை தாழ்த்தியவர்களின் மக்கள் உன்னிடம் தலை வணங்கி வருவர்; உன்னை நிந்தித்தவர் அனைவரும் உன் அடிச்சுவடுகளை வணங்குவர்; ஆண்டவரின் நகரம் என உன்னை அழைப்பர், உன்னை இஸ்ராயேலின் பரிசுத்தருடைய சீயோன் என்பர்.
ஏசாயா 60 : 15 (RCTA)
கைவிடப்பட்டு, மனிதரால் நீ வெறுக்கபட்டாய், உன் வழியாய்க் கடந்து செல்ல எவனும் கருதினானல்லன்; அப்படிப்பட்ட உன்னை முடிவில்லாத மாட்சிமையும், தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும் மகிழ்ச்சியுமாக்குவோம்.
ஏசாயா 60 : 16 (RCTA)
மக்களினங்களின் பாலை நீ பருகுவாய், அரசர்களின் முலைப்பாலைக் குடிப்பாய்; உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவரே என்பதையும் அறிவாய்.
ஏசாயா 60 : 17 (RCTA)
செம்புக்குப் பதிலாக பொன்னும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியும், மரத்துக்குப் பதிலாய்ச் செம்பும், கற்களுக்குப் பதிலாய் இரும்பும் கொணர்வோம்; சமாதானம் உன்னை மேற்பார்வை பார்க்கவும், நீதி உனக்குத் தலைமை தாங்கவும் செய்வோம்.
ஏசாயா 60 : 18 (RCTA)
இனி மேல் கொடுமை என்னும் சொல்லே உன் நாட்டில் கேட்கப்படாது; உன் எல்லைப் புறங்களில் அழிவு, துன்பம் என்னும் கூக்குரல் இருக்காது. உன் மதில்களுக்கு 'மீட்பு' என்றும், உன் வாயில்களுக்குப் 'போற்றி' என்றும் பெயரிடுவாய்.
ஏசாயா 60 : 19 (RCTA)
பகலில் வெளிச்சந்தர உனக்குத் கதிரவன் தேவையில்லை, இரவில் உனக்கு ஒளி வீச வெண்ணிலவும் தேவையில்லை; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கடவுளே உனக்கு மகிமையாய் விளங்குவார்.
ஏசாயா 60 : 20 (RCTA)
உன்னுடைய கதிரவன் இனி மறைய மாட்டான், உன்னுடைய வெண்ணிலவு இனித் தேய்ந்து போகாது; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கண்ணீரின் நாட்களும் முடிந்து போகும்.
ஏசாயா 60 : 21 (RCTA)
உன் இனம் நீதிமான்களை மட்டுமே கொண்டிருக்கும், மண்ணுலகு என்றென்றும் அவர்களது உரிமையாகும்; நாம் நட்ட பசுந்தளிராய் உன் மக்கள் இருப்பர், நமக்கு மகிமை தரும் நம் கைவேலையாய் இருப்பர்.
ஏசாயா 60 : 22 (RCTA)
உன்னில் சிறியவன் ஆயிரமாய்ப் பலுகுவான், அற்பனாய் இருப்பவனும் வலியதோர் இனமாவான்; ஆண்டவராகிய நாமே இந்த வித்தையைத் தக்க காலத்தில் திடீரெனச் செய்வோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22