ஏசாயா 6 : 1 (RCTA)
ஓசியாஸ் அரசன் இறந்த ஆண்டில், மிகவும் உயரமான ஓர் அரியணையின் மேல் ஆண்டவர் வீற்றிருப்பதைக் கண்டேன்; அவருடைய தொங்கலாடை திருக்கோயிலை நிரப்பி நின்றது.
ஏசாயா 6 : 2 (RCTA)
அவருக்கு மேலே உயரத்தில் சேராபீன்கள் நின்றனர். ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; இரண்டு இறக்கைகளால் முகத்தை மூடிக்கொண்டனர்; இன்னும் இரண்டினால் கால்களை மறைத்துக் கொண்டனர்; மற்ற இரண்டினால் பறந்தனர்.
ஏசாயா 6 : 3 (RCTA)
ஒருவரை ஒருவர் உரத்த குரலில் கூப்பிட்டு, "சேனைகளின் ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரித்தர்; உலக முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்துள்ளது" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
ஏசாயா 6 : 4 (RCTA)
கூறியவரின் குரலொலியால் வாயில் நிலைகளெல்லாம் அதிர்ந்தன; கோயில் முழுவதும் புகை நிறைந்தது.
ஏசாயா 6 : 5 (RCTA)
அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன்; ஏனெனில் அசுத்த உதடுகள் கொண்டவன் நான்; அசுத்த உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்கிற நான், சேனைகளின் ஆண்டவராகிய அரசரை, என் கண்களால் கண்டேனே!" என்றேன்.
ஏசாயா 6 : 6 (RCTA)
அப்பொழுது, சேராபீன்களுள் ஒருவர் பீடத்திலிருந்து எரி நெருப்புப் பொறியொன்றைக் குறட்டினால் எடுத்துக் கொண்டு என்னிடம் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு,
ஏசாயா 6 : 7 (RCTA)
இதோ, இந் நெருப்புத் தழல் உன் இதழ்களைத் தொட்டது; ஆதலின் உன் குற்றம் நீக்கப்பட்டது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார்.
ஏசாயா 6 : 8 (RCTA)
மேலும் ஆண்டவருடைய குரலைக் கேட்டேன்; அவர், "யாரை அனுப்புவோம்? நமக்காக எவன் போவான்?" என்றார். உடனே நான், "இதோ, அடியேன் என்னை அனுப்பும்" என்றேன்.
ஏசாயா 6 : 9 (RCTA)
அப்பொழுது அவர், "நீ போய் இந்த மக்களுக்கு, 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணராதீர்கள், பார்த்துப் பார்த்தும் நீங்கள் அறியாதீர்கள்' என்று சொல்.
ஏசாயா 6 : 10 (RCTA)
அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உள்ளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பிக் குணமாகாமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளத்தை மழுங்கச் செய்; காதுகளை மந்தமாக்கு; கண்களை மூடு" என்றார்.
ஏசாயா 6 : 11 (RCTA)
அதற்கு நான், "எவ்வளவு காலத்திற்கு, ஆண்டவரே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "பட்டணங்கள் பாழாகிக் குடியிருப்பாரற்று, வீடுகளில் மனிதர்களின்றி, நாடு முற்றிலும் பாழடைந்து
ஏசாயா 6 : 12 (RCTA)
ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டுக்குக் கொண்டு போனபின், கைவிடப்பட்ட இடங்கள் நாட்டில் பலவாகும் வரையில்!
ஏசாயா 6 : 13 (RCTA)
பத்தில் ஒரு பகுதி அதில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும், தேவதாரு மரமோ கருவாலி மரமோ வெட்டி வீழ்த்தப்பட்டபின் அதில் அடித் தண்டு எஞ்சியிருப்பது போலவே அதுவும் இருக்கும்" என்றார். அந்த அடித் தண்டு பரிசுத்த வித்தாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13