ஏசாயா 59 : 1 (RCTA)
இதோ, உங்களை மீட்க முடியாத அளவுக்கு ஆண்டவருடைய கை குறுகிவிடவில்லை; உங்கள் கூக்குரலைக் கேட்க முடியாத அளவுக்கு அவருடைய செவி மந்தமாகி விடவில்லை.
ஏசாயா 59 : 2 (RCTA)
ஆனால் உங்கள் அக்கிரமங்கள் தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன.
ஏசாயா 59 : 3 (RCTA)
ஏனெனில் உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைப்பட்டுள்ளன. உங்கள் விரல்களில் அக்கிரமம் நிறைந்துள்ளது; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசின, உங்கள் நாக்கு அக்கிரமத்தை முணுமுணுத்தது.
ஏசாயா 59 : 4 (RCTA)
நீதியாய் வழக்காடுபவன் உங்களுள் எவனுமில்லை, உண்மையாகத் தீர்ப்பிடுபவன் ஒருவனுமில்லை; இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், பொய்யான சொற்களையே பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
ஏசாயா 59 : 5 (RCTA)
நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள், சிலந்திப் பூச்சி வலைகளையும் நெய்கிறார்கள்; அவைகளின் முட்டையைச் சாப்பிடுகிறவன் செத்துப் போவான், உடைபடும் முட்டையிலிருந்து விரியன் பாம்பு வெளிப்படும்.
ஏசாயா 59 : 6 (RCTA)
அவர்களுடைய வலைகள் உடுக்க உதவமாட்டா, அவர்கள் பின்னியவற்றை யாரும் போர்த்துக் கொள்ள முடியாது, அவர்கள் பின்னியவையெல்லாம் அக்கிரமச் செயல்களே. அவர்கள் கை செய்பவையெல்லாம் வன்முறைச் செயல்களே.
ஏசாயா 59 : 7 (RCTA)
அவர்களுடைய கால்கள் தீமை செய்ய ஓடுகின்றன, குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் விரைகிறார்கள்; அவர்கள் நினைவுகளோ அநீதியான நினைவுகளே, அவர்களுடைய வழிகளில் அழிவும் துன்பமுந்தான் உள்ளன.
ஏசாயா 59 : 8 (RCTA)
சமாதான வழியினை அவர்கள் அறிந்தாரல்லர், அவர்களுடைய தடங்களில் நேர்மையில்லை; அவர்கள் போகும் நெறிகள் கோணலானவை, அவற்றில் நடப்பவன் சமாதானம் அறியான்.
ஏசாயா 59 : 9 (RCTA)
ஆதலால், நீதி எங்களை விட்டு விலகிப் போனது. நேர்மையும் எங்களை நெருங்கவில்லை; ஒளியை எதிர்பார்த்தோம், காரிருள் தான் காணப்பட்டது, வெளிச்சத்தைத் தேடினோம், இருட்டிலேயே நடக்கிறோம்.
ஏசாயா 59 : 10 (RCTA)
குருடரைப் போலச் சுவரைப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாதவரைப் போல நாங்கள் வழியைத் தடவுகிறோம். இருளில் நடப்பது போலப் பகலிலும் இடறுகிறோம், வாழ்பவர்கள் நடுவில் செத்தவர் போலக் கிடக்கிறோம்.
ஏசாயா 59 : 11 (RCTA)
கரடிகளைப் போல நாங்களனைவரும் உறுமுகிறோம், புறாக்களைப் போலப் புலம்பி விம்முகிறோம்; நீதிக்குக் காத்திருக்கிறோம், அது கிடைக்கவில்லை; மீட்பைப் பார்த்திருக்கிறோம், அது தொலைவில் நிற்கிறது.
ஏசாயா 59 : 12 (RCTA)
உம் கண் முன்னால் எங்கள் அக்கிரமங்கள் பெருகிப்போயின, எங்கள் பாவங்களும் எங்களுக்கு எதிராய்ச் சாட்சி கூறுகின்றன; எங்கள் அக்கிரமங்கள் எங்களோடு இருக்கின்றன, எங்கள் அநீதிகளை நாங்களே அறிந்திருக்கிறோம்.
ஏசாயா 59 : 13 (RCTA)
ஆண்டவருக்கு எதிராக எழும்பித் துரோகம் செய்தோம், எம் கடவுளைப் பின்பற்றாமல் திரும்பி விட்டோம்; புறணியையும் அக்கிரமத்தையும் பேசினோம், பொய்களை உள்ளத்தில் சிந்தித்துப் பேசினோம்.
ஏசாயா 59 : 14 (RCTA)
நீதி எங்களை விட்டு அகன்று போயிற்று, நேர்மையும் எங்களுக்குத் தொலைவில் நின்றது; பொதுவிடங்களில் உண்மையானது வீழ்ச்சியடைந்தது, நியாயத்திற்கு அங்கெல்லாம் இடமே இல்லை.
ஏசாயா 59 : 15 (RCTA)
வாய்மை மறக்கப்பட்டு விட்டது, தீமையை விட்டு விலகினவன் கொடியவர்க்கு இரையானான்; உலகில் நீதியில்லாததை ஆண்டவர் கண்டார், அவர் கண்களில் கோபத் தீ மூண்டது.
ஏசாயா 59 : 16 (RCTA)
முன்வருபவன் யாருமில்லை என ஆண்டவர் கண்டார், சீர்திருத்த முன்வருபவன் இல்லாததால் திகைப்புக்கொண்டார்; அவருடைய கைப் புயமே அவருக்கு வெற்றி கொணர்ந்தது, அவருடைய நீதியே அவருக்குத் துணை நின்றது.
ஏசாயா 59 : 17 (RCTA)
மார்க் கவசமாய் நீதியையும், தலைச் சீராவாய் மீட்பையும் அணிந்து கொண்டார்; பழி தீர்க்கும் சினத்தை உடையாய் அணிந்து, ஆத்திரத்தை மேலாடையாய்ப் போர்த்துக் கொண்டார்.
ஏசாயா 59 : 18 (RCTA)
செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார்.
ஏசாயா 59 : 19 (RCTA)
மேற்றிசையினர் ஆண்டவர் பெயருக்கு அஞ்சுவார்கள், கீழ்த்திசையினர் அவர் மகிமையைப் போற்றுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் ஆவியால் உந்தித் தள்ளப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் அவர் வருவார்.
ஏசாயா 59 : 20 (RCTA)
ஆனால் சீயோனுக்கும், யாக்கோபின் வீட்டாருள் தீமையை விலக்கித் திரும்புகிறவர்களுக்கும் மீட்பராய் வருவார், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 59 : 21 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21