ஏசாயா 58 : 1 (RCTA)
உரத்த குரலில் கத்திப் பேசு, நிறுத்தி விடாதே, எக்காளத்தைப் போல் உன் குரலை உயர்த்து; நம் மக்களுக்கு அவர்களுடைய அக்கிரமத்தை அறிவி, யாக்கோபின் வீட்டார்க்கு அவர்கள் பாவத்தைத் தெரிவி.
ஏசாயா 58 : 2 (RCTA)
நீதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் போலவும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிடாதவர்கள் போலவும் நடித்து, நாடோறும் நம்மைத் தேடுகிறார்கள், நீதியான முறைமைகளைப் பற்றி நம்மிடம் கேட்கிறார்கள், கடவுளை அணுகி வர விழைகிறார்கள்.
ஏசாயா 58 : 3 (RCTA)
நாங்கள் உண்ணா நோன்பிருந்தோம், நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஒடுக்கினோம், நீர் அதை அறியாததேன்?' என்கிறார்கள். இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்; உங்கள் கூலியாட்களை வாட்டி வதைக்கிறீர்கள்.
ஏசாயா 58 : 4 (RCTA)
இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் போது, சண்டை சச்சரவுகள் போட்டுப் பிறரை அநியாயமாய் அடிக்கிறீர்கள். இன்று வரை நீங்கள் நோன்பிருந்தது போல் இருந்தால், உங்கள் கூக்குரல் உன்னதத்திற்கு எட்டாது.
ஏசாயா 58 : 5 (RCTA)
மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா? நாணலைப் போலத் தலை குணிவதும், கோணி ஆடையை உடுப்பதும், சாம்பலில் உட்காருவதுந்தான் நமக்கேற்ற நோன்பா? இதைத் தான் நோன்பென்றும், ஆண்டவருக்குகந்த நாளென்றும் சொல்லுகிறாயோ?
ஏசாயா 58 : 6 (RCTA)
அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்துவிடு, அழுத்தியிறுத்தும் நுகத்தடிகளை இறக்கு; ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் விடுதலை செய், சுமையானதையெல்லாம் உடைத்தெறி;
ஏசாயா 58 : 7 (RCTA)
பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு, ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு; ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து; உன் இனத்தானை அவமதிக்காதே; இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?
ஏசாயா 58 : 8 (RCTA)
அப்போது, உன் ஒளி காலைக் கதிரவன் போலத் தோன்றும், விரைவில் உனக்கு நலம் கிடைக்கும்; உன் நீதி உனக்கு முன் நடக்கும், ஆண்டவருடைய மகிமை உன்னைப் பின்தொடரும்.
ஏசாயா 58 : 9 (RCTA)
அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்; அவரை நோக்கிக் கூக்குரலிடுவாய், அவரும், 'இதோ இருக்கிறோம்' என்பார். "உன் நடுவிலிருந்து நுகத்தடியைத் தள்ளிவிட்டு, உன் அயலானுக்கு எதிராய்க் கையோங்காமல், அடாததொன்றையும் சொல்லாமல் இருந்தால்,
ஏசாயா 58 : 10 (RCTA)
பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து, துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால், உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும், உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும்.
ஏசாயா 58 : 11 (RCTA)
ஆண்டவர் என்றென்றும் உன்னை வழி நடத்துவார், பாலை நிலத்தில் உன் உள்ளம் நிறைவு பெறச் செய்வார்; உன் எலும்புகளை உறுதிப்படுத்துவார், நீர் வளமிக்க தோட்டம் போலும் வற்றாத நீரூற்றுப் போலும் விளங்கச் செய்வார்.
ஏசாயா 58 : 12 (RCTA)
பல்லாண்டுகளாய்ப் பாழடைந்து கிடந்த உன் இடங்கள் கட்டப்படும்; தலைமுறை தலைமுறையாய்க் கிடந்த அடிப்படைகளை நீ கட்டியெழுப்புவாய்; மதிற்சுவர் உடைப்புகளைக் கட்டுகிறவன் என்றும், மக்கள் குடியேறும்படி தெருக்களை அமைக்கிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
ஏசாயா 58 : 13 (RCTA)
ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்; ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்; அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால்,
ஏசாயா 58 : 14 (RCTA)
அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்; உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்; ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14