ஏசாயா 57 : 1 (RCTA)
நீதிமான் மடிந்து போகிறான், அதை எவனும் உள்ளத்தில் எண்ணிப் பார்ப்பதில்லை; இறையடியார்கள் இவ்வுலகினின்று எடுக்கப்படுகிறார்கள், அதை எவனும் கவனிக்கிறதில்லை; தீமை பெருகியிருப்பதால் நீதிமான் இவ்வுலகினின்று எடுக்கப்படுகிறான்;
ஏசாயா 57 : 2 (RCTA)
சமாதானத்திற்குள் இடம் பெறுகிறான்; நேர்மையான நெறியில் நடக்கிறவர்கள் படுக்கையில் இளைப்பாறுகிறார்கள்.
ஏசாயா 57 : 3 (RCTA)
மந்திரக்காரியின் மக்களே, வேசியின் சந்ததியே, விலைமகளின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்;
ஏசாயா 57 : 4 (RCTA)
யாரை நீங்கள் ஏளனம் செய்தீர்கள்? நாக்கை நீட்டி யாரை நையாண்டி செய்தீர்கள்? நீங்கள் துரோகத்தின் மக்கள் அல்லரோ? பொய்யில் முளைத்த சந்ததியல்லவா?
ஏசாயா 57 : 5 (RCTA)
கருவாலிமரத் தோப்பினுள்ளும், தழையடர்ந்த மரம் ஒவ்வொன்றின் கீழும், காமத் தீயால் எரிகிறீர்கள்; மலையிடுக்குகளிலும், கற்பாறைகளின் பிளவுகளிலும், உங்கள் குழந்தைகளைக் கொன்று பலியிடுகிறீர்கள்.
ஏசாயா 57 : 6 (RCTA)
நீரோடையின் கூழாங்கற்கள் நடுவில் தான் உன் பங்குள்ளது, அவையே உன் பாகம்; அவற்றுக்குத் தான் பானப் பலியை ஊற்றினாய், பலியையும் ஒப்புக் கொடுத்தாய்; இவற்றால் நமக்குக் கோபம் மூளாதோ?
ஏசாயா 57 : 7 (RCTA)
உயர்ந்தெழுந்த மலையின் மேல் உன் மஞ்சத்தை விரித்தாய், அங்கும் பலிகளை ஒப்புக்கொடுக்க ஏறிப்போனாய்.
ஏசாயா 57 : 8 (RCTA)
கதவுக்கும் கதவு நிலைக்குப் பின்னும் உன் நினைவுச் சிலையை வைத்தாய், நம்மைக் கைவிட்டு விட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்; விபசாரிகளுக்கு நீ நல்வரவு தந்தாய், உன் படுக்கையை விரிவுபடுத்தினாய்; அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டாய், அவர்கள் அவமானத்தை நோக்கினாய்.
ஏசாயா 57 : 9 (RCTA)
மோலெக் தெய்வத்துக்காக உன்னை எண்ணெய் தடவி அழகுபடுத்தினாய், நறுமணத் தைலங்களை நிரம்பப் பூசிக்கொண்டாய்; தொலை நாடுகளுக்கு உன் தூதுவர்களை அனுப்பினாய், பாதாளம் வரையில் அவர்களை அனுப்பினாய்.
ஏசாயா 57 : 10 (RCTA)
நெடுந்தொலைவுப் பயணம் செய்து களைத்திருந்தும், "போதும், ஓய்வெடுப்போம்" என்று நீ சொல்லவில்லை; உன் வலிமை புத்துயிர் பெற்றுவிட்டது, ஆகவே நீ சோர்ந்து போகவில்லை.
ஏசாயா 57 : 11 (RCTA)
யாருக்காக நீ பயந்து நடுங்கிக் கொண்டு, நம்மைப் பொய் சொல்லி ஏமாற்றினாய்? நம்மைக் கொஞ்சமும் நினைவு கூரவில்லை? உன்னைப் பார்க்காதது போல நாம் மௌனமாயிருந்தால், நீ நமக்கு அஞ்சவில்லை!
ஏசாயா 57 : 12 (RCTA)
உன் நீதி யாதென விளக்கிக் காட்டுவோம், உன்னுடைய செயல்கள் உனக்குப் பயன்படமாட்டா.
ஏசாயா 57 : 13 (RCTA)
நீ கூவியழைக்கும் போது, நீ சேர்த்து வைத்திருக்கும் சிலைகள் உன்னை மீட்கட்டும்! அவற்றையெல்லாம் காற்று அடித்துப் போகும், மூச்சும் அவற்றை வாரிச் செல்லும், ஆனால் நம்மட்டில் நம்பிக்கை கொள்பவனோ பூமியை உரிமைச் சொத்தாய்ப் பெறுவான், நம் பரிசுத்த மலையை உடைமையாய்க் கொள்வான்.
ஏசாயா 57 : 14 (RCTA)
அப்போது நாம்: "வழி விடுங்கள், பாதையைத் திறந்து விடுங்கள், நம் மக்களின் வழியிலிருக்கும் தடைகளையெல்லாம். அப்புறப்படுத்துங்கள், எடுத்து விடுங்கள்" என்போம்.
ஏசாயா 57 : 15 (RCTA)
காலந்கடந்திருப்பவரும், மேன்மை தங்கிய உன்னதரும், பரிசுத்தர் என்னும் பெயரினருமானவர் கூறுகிறார்: "உயர்ந்ததும், பரிசுத்தமுமான இடமே நம் உறைவிடம்; ஆனால் பாவத்திற்காக வருந்தும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரோடும் நாம் குடிகொண்டிருக்கிறோம்; தாழ்மையுள்ளோரின் இதயத்தை ஊக்குவிக்கவும், மனஸ்தாபமுள்ளோரின் இதயத்தைத் திடப்படுத்தவுமே அவர்களோடு குடிகொண்டிருக்கிறோம்.
ஏசாயா 57 : 16 (RCTA)
ஏனெனில் என்றென்றைக்கும் நாம் வழக்காட மாட்டோம், கடைசி வரையில் நாம் கோபமாய் இருக்க மாட்டோம்; இருப்போமாகில், ஆவியும் நாம் படைத்த ஆன்மாக்களும் நம் முன்னிலையில் மறைந்து போகுமே!
ஏசாயா 57 : 17 (RCTA)
பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்; அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்; ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.
ஏசாயா 57 : 18 (RCTA)
அவர்களின் நடத்தையைக் கண்டோம், ஆயினும் அவர்களைக் குணப்படுத்துவோம்; திரும்பக் கூட்டி வந்து அவர்களுக்கும், அவர்களுக்காக அழுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்போம்.
ஏசாயா 57 : 19 (RCTA)
அவர்கள் உதடுகளிலிருந்து புகழ் மொழிகள் உதிரச் செய்வோம்; சமாதானம்! தொலைவிலிருப்பவனுக்கும் அருகிலிருப்பவனுக்கும் சமாதானம்! அவர்களைக் குணமாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 57 : 20 (RCTA)
தீயவர்களோ பொங்கியெழும் கடல் போல் இருக்கிறார்கள்; அந்தக் கடல் அடங்கியிருக்காது, அதன் அலைகள் கரையில் அடித்து மோதிச் சேற்று நுரையைக் கக்குகிறது.
ஏசாயா 57 : 21 (RCTA)
பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை, என்கிறார் என் கடவுள்."
❮
❯