ஏசாயா 55 : 1 (RCTA)
தாகமாயிருப்பவர்களே, அனைவரும் நீரருகில் வாருங்கள், கையில் பணமில்லாதவர்களே, விரைந்து வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சை இரசமும் பாலும் வாங்கிப் பருகுங்கள்!
ஏசாயா 55 : 2 (RCTA)
அப்பமல்லாத ஒன்றுக்காகப் பணஞ் செலவிடுவானேன்? உங்களுக்கு நிறைவு தராத ஒன்றுக்காக உழைப்பானேன்? நாம் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்; அப்போது சுவையானதை உண்பீர்கள், கொழுப்புள்ளதைப் புசித்து மகிழ்வீர்கள்.
ஏசாயா 55 : 3 (RCTA)
செவிசாயுங்கள், நம்மிடம் வாருங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்; "தாவீதுக்கு நாம் வாக்களித்த அருள் வரங்களை நிலைப்பிக்க, உங்களோடு முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வோம்.
ஏசாயா 55 : 4 (RCTA)
இதோ, மக்களுக்கு அவரைச் சாட்சியாகவும், புறவினத்தார்க்குத் தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினோம்.
ஏசாயா 55 : 5 (RCTA)
யெருசலேமே, இதோ, நீ அறியாத மக்களைக் கூப்பிடுவாய், உன்னை அறிந்திராத இனத்தார், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன் கடவுளுமாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னிடம் ஓடி வாருவார்கள்.
ஏசாயா 55 : 6 (RCTA)
ஆண்டவர் அருகிலும் தொலைவிலும் இருக்கிறார்: "ஆண்டவரைக் கண்டடையக் கூடிய போதே, அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே, அவரைக் கூவியழையுங்கள்
ஏசாயா 55 : 7 (RCTA)
தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.
ஏசாயா 55 : 8 (RCTA)
நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல, நம்முடைய வழிகள் உங்கள் வழிகளல்ல, என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 55 : 9 (RCTA)
மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல் உங்கள் வழிகளை விட நம்முடைய வழிகளும், உங்கள் எண்ணங்களை விட நம்முடைய எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
ஏசாயா 55 : 10 (RCTA)
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல், நிலத்தை நனைத்து, செழிப்பாக்கி, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகிறது.
ஏசாயா 55 : 11 (RCTA)
அவ்வாறே, நம் வாயினின்று புறப்படும் வார்த்தையும் இருக்கும்; அது பயன் தராமல் நம்மிடம் திரும்பாது; நாம் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கும்; எதற்காக நாம் அதை அனுப்பினோமோ, அதை நிறைவேற்றும்.
ஏசாயா 55 : 12 (RCTA)
நீங்கள் மகிழ்ச்சியோடு புறப்படுவீர்கள், சமாதானத்தில் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் புகழ்பாடும், காட்டு மரங்களெல்லாம் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.
ஏசாயா 55 : 13 (RCTA)
முட்செடிக்குப் பதிலாய்த் தேவதாரு முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாய் நறுமணச்செடி கிளம்பும்; இச்செயல் ஆண்டவர்க்குப் புகழ் தேடிக் கொடுக்கும், முடிவில்லா அடையாளமாய் என்றென்றும் நிலைக்கும்."
❮
❯