ஏசாயா 54 : 1 (RCTA)
பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு! பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி! ஏனெனில் கைவிடப்பட்டவளின் மக்கள் கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 54 : 2 (RCTA)
உன் கூடாரத்தின் இடத்தை அகலப்படுத்து, உன் கூடாரத் துணிகளைத் தாராளமாய் விரித்து விடு; இன்னும் கயிறுகளை நீளமாக்கு, கயிறு கட்டும் முளைகளை உறுதிப்படுத்து.
ஏசாயா 54 : 3 (RCTA)
நீ வலப்புறம் இடப்புறமாய்ப் பெருகி விரிவாய், உன் சந்ததியார் மக்களினங்களை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்த நகரங்களில் குடியேறி வாழ்வர்.
ஏசாயா 54 : 4 (RCTA)
அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்;
ஏசாயா 54 : 5 (RCTA)
ஏனெனில் உன்னைப் படைத்தவரே உனக்குக் கணவன், சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்; இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர், உலகுக்கெல்லாம் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
ஏசாயா 54 : 6 (RCTA)
ஏனெனில், கைவிடப்பட்டு மனம் நொந்தவளான மனைவியை அழைப்பது போலும், இளமை முதலே துணைவியாய் இருந்த ஒருத்தியை மணமுறிவுக்குப் பின் அழைப்பது போலும் ஆண்டவர் உன்னை அழைக்கிறார், என்கிறார் உன்னுடைய கடவுள்.
ஏசாயா 54 : 7 (RCTA)
குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம்.
ஏசாயா 54 : 8 (RCTA)
பொங்கிய கோபத்தில் ஒரு நொடிப் பொழுது உன்னிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்; ஆயினும், முடிவில்லாத அன்போடு உன் மேல் இரக்கம் கொள்வோம், என்கிறார் உன் மீட்பராகிய ஆண்டவர்.
ஏசாயா 54 : 9 (RCTA)
நோவே நாட்களில் நாம் செய்தது போல் இன்றும் செய்வோம்; நோவே காலத்துப் பெருவெள்ளம் இனி மேல் மண்ணுலகை மூழ்கடிக்காது என்று ஆணையிட்டுச் சொன்னது போல், உன் மேல் சினங்கொள்ளவே மாட்டோம் என்றும், உன்னைக் கண்டனம் செய்யமாட்டோம் என்றும் ஆணையிட்டு உனக்கும் சொல்லியுள்ளோம்.
ஏசாயா 54 : 10 (RCTA)
மலைகள் நிலைபெயரலாம், குன்றுகள் அசைந்து போகலாம், ஆனால் உன்மீது நாம் கொண்ட அன்பு நிலை பெயராதிருக்கும்; நம் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாதிருக்கும், என்கிறார் உன் மேல் இரக்கம் கொள்ளும் ஆண்டவர்.
ஏசாயா 54 : 11 (RCTA)
புயலால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும், ஏழைப் பெண்ணான யெருசலேமே, இதோ நாமே உன் கற்களை மாணிக்கங்கள் மேல் அடுக்குவோம்; உனக்கு நீலக் கற்களால் அடிப்படை இடுவோம்.
ஏசாயா 54 : 12 (RCTA)
உன் கோட்டைச் சுவரின் முகடுகளைச் சலவைக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும், உன் சுவர்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவோம்.
ஏசாயா 54 : 13 (RCTA)
உன் மக்கள் அனைவருக்கும் ஆண்டவரே போதிப்பார், உன் புதல்வர்களுக்கு நிரம்பச் சமாதானம் இருக்கும்.
ஏசாயா 54 : 14 (RCTA)
நீதியில் நீ நிலைநாட்டப் படுவாய், கொடுமை அகன்று போம், நீ அஞ்சமாட்டாய், பயம் ஒழிந்திருப்பாய், அது உன்னை அணுகாது.
ஏசாயா 54 : 15 (RCTA)
எவனாவது போர்புரிய வந்தால், அவன் நம்மால் தூண்டப்பட்டு வரமாட்டான்; உன்னோடு எவனெவன் போர் தொடுப்பானோ அவனெல்லாம் உன் பொருட்டு வீழ்ச்சியடைவான்.
ஏசாயா 54 : 16 (RCTA)
இதோ, தீயில் கரிகளைப் போட்டு ஊதி வேலை செய்து, போர்க்கருவி செய்யும் கொல்லனை நாமே படைத்தோம்; பாழாக்க வரும் கொலைகாரணையும் நாமே உண்டாக்கினோம்.
ஏசாயா 54 : 17 (RCTA)
உனக்கு விரோதமாய்த் தயாரிக்கப்பட்ட படைக்கலம் உன்மேல் பயன்படுத்தப்படாது; உனக்குத் தண்டனை விதிக்க வழக்காடும் நாவை நீயே கண்டனம் செய்து அடக்கி விடுவாய். ஆண்டவருடைய ஊழியர்களின் உரிமைச் சொத்தும் அவர்களுக்கு எம்மிடம் கிடைக்கும் நீதியும் இதுவே, என்றார் ஆண்டவர்.
❮
❯