ஏசாயா 53 : 1 (RCTA)
நாம் கேள்விப்பட்டதை யார் நம்பியிருக்கக் கூடும்? ஆண்டவரின் கைவன்மை யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
ஏசாயா 53 : 2 (RCTA)
இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வறண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்; அவரைப் பார்த்தோம், அவரிடம் அழகோ அமைப்போ இல்லை; கவர்ச்சியான தோற்றமும் இல்லை.
ஏசாயா 53 : 3 (RCTA)
இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய் துயரத்திலாழ்ந்தவராய் இருந்தார்; கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை.
ஏசாயா 53 : 4 (RCTA)
மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்; ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.
ஏசாயா 53 : 5 (RCTA)
ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.
ஏசாயா 53 : 6 (RCTA)
ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம், கால் போன வழியே ஒவ்வொருவரும் போனோம்; நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர் மேல் சுமத்தினார்.
ஏசாயா 53 : 7 (RCTA)
அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக்கொண்டார்; அவர் வாய்கூடத் திறக்கவில்லை; கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோலும், மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர் வாய் திறக்கவில்லை.
ஏசாயா 53 : 8 (RCTA)
கொடிய தீர்ப்புக்குப் பின் அவர் கொண்டு செல்லப்பட்டார், அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவன் யார்? ஆம், அவர் வாழ்வோர் உலகினின்று எடுக்கப்பட்டார், தம் இனத்தாரின் அக்கிரமங்களுக்காகவே அவர் வதைக்கப்பட்டார்.
ஏசாயா 53 : 9 (RCTA)
பொல்லாதவர்களோடு அவருக்குக் கல்லறை தந்தார்கள், சாகும் போது அவர் தீமை செய்கிறவர்களோடு இருந்தார்; ஆயினும் வன்முறைச் செயல் ஏதும் அவர் செய்தவர் அல்லர், அவருடைய வாயில் பொய்யே வந்ததில்லை.
ஏசாயா 53 : 10 (RCTA)
அவரை வேதனையிலாழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார். தம்மையே பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக் கண்டு நீடுவாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையால் நிறைவேறும்.
ஏசாயா 53 : 11 (RCTA)
தம் ஆன்மா பட்ட வேதனையின் பலனை அவர் கண்டு நிறைவு கொள்வார்; நம் ஊழியனாகிய அந்த நீதிமான் தமது அறிவினால் பலரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்.
ஏசாயா 53 : 12 (RCTA)
ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12