ஏசாயா 52 : 1 (RCTA)
எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.
ஏசாயா 52 : 2 (RCTA)
அடிமையாய் அமர்ந்திருக்கும் யெருசலேமே, தூசியைத் தட்டி விட்டுத் துள்ளியெழு; கைதியாய்க் கிடக்கும் சீயோன் மகளே, உன் கழுத்துச் சங்கிலியை அறுத்து விடு.
ஏசாயா 52 : 3 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றியே மீட்கப்படுவீர்கள்.
ஏசாயா 52 : 4 (RCTA)
ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: முன்னாளில் நம் மக்கள் அந்நியராய்க் குடியேறி வாழ்வதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள்; அசீரியன் காரணம் ஏதுமில்லாமலே அவர்களை வதைத்தான்;
ஏசாயா 52 : 5 (RCTA)
இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 52 : 6 (RCTA)
ஆகையால் நம் மக்கள் ஒரு நாள் நம் திருப்பெயரை அறிந்து கொள்வார்கள்; அப்போது அவர்கள், இதோ இருக்கிறோம் என்று சொன்னவர் நாமே என்பதைக் கண்டுபிடிப்பார்கள்."
ஏசாயா 52 : 7 (RCTA)
நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
ஏசாயா 52 : 8 (RCTA)
இதோ, உன் சாமக்காவலர் குரல் கேட்கிறது, அவர்கள் தம் குரலை உயர்த்தி மகிழ்ச்சியோடு ஆர்பரிக்கிறார்கள்; ஏனெனில் ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை நேருக்கு நேராய்க் காண்கிறார்கள்.
ஏசாயா 52 : 9 (RCTA)
யெருசலேமின் பாழடைந்த இடங்களே, நீங்கள் அனைவரும் அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் தந்தார், யெருசலேமை அவர் மீட்டருளினார்.
ஏசாயா 52 : 10 (RCTA)
மக்களினங்கள் அனைத்தின் கண்களுக்கும், ஆண்டவர் தம் பரிசுத்த கைவன்மையைக் காட்டினார். உலகின் கடைக் கோடி நாடுகள் எல்லாம், நம் கடவுள் தரும் மீட்பைக் காணப்போகின்றன.
ஏசாயா 52 : 11 (RCTA)
வெளியேறுங்கள், வெளியேறுங்கள், பபிலோனிலிருந்து புறப்படுங்கள், தீட்டானதொன்றையும் தொடாதீர்கள்; அந்நாட்டினின்று புறப்பட்டு வெளியேறுங்கள், ஆண்டவருடைய பாத்திரங்களைத் தாங்கி நிற்பவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏசாயா 52 : 12 (RCTA)
நீங்கள் விழுந்தடித்து அவசரமாய்ப் புறப்பட மாட்டீர்கள், ஓட்டம் ஓட்டமாய் ஓடவும் மாட்டீர்கள்; ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு முன்னால் நடப்பார், இஸ்ராயேலின் கடவுள் காவற்படை போல் உங்களைப் பின்தொடர்வார்.
ஏசாயா 52 : 13 (RCTA)
இதோ, நம் ஊழியன் சிறப்படைவார், உயர்த்தப்படுவார், மேலோங்குவார், மிக உன்னதராவார்;
ஏசாயா 52 : 14 (RCTA)
பலபேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்- அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது, மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்களின் வடிவே அவரிடம் காணப்படவில்லை.
ஏசாயா 52 : 15 (RCTA)
அதே அளவுக்கு மக்களினங்கள் பல திடுக்கிடும், அரசர்களும் அவரைப் பார்த்து, வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் சொல்லப்படாத ஒன்றைக் காண்பார்கள், இதுவரை கேட்டிராத ஒன்றைப் பார்ப்பார்கள்.
❮
❯