ஏசாயா 51 : 1 (RCTA)
நீதியைக் கடைப்பிடித்து ஆண்டவரைத் தேடுகிறவர்களே, நமக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று வெட்டியெடுக்கப் பட்டீர்களோ, அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஏசாயா 51 : 2 (RCTA)
உங்கள் தந்தை ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராவையும் கருதுங்கள்; தனியனாய் அவனை அழைத்தோம், ஆனால் ஆசிர்வதித்துப் பலுகச் செய்தோம்.
ஏசாயா 51 : 3 (RCTA)
ஆம், ஆண்டவர் சீயோனுக்கு ஆறுதல் தருவார், பாழடைந்த அந்நகரத்துக்கு ஆறுதல் தருவார்; அதனுடைய பாழ்வெளியை இன்பமான இடமாக்குவார், அதன் பாலை நிலத்தை ஆண்டவரின் சோலையாய் மாற்றுவார்; அக்களிப்பும் மகிழ்ச்சியும் எப்பக்கமும் காணப்படும், நன்றியறிதல் பாடலும் புகழொலியும் கேட்கப்படும்.
ஏசாயா 51 : 4 (RCTA)
நம் மக்களே, நமக்குச் செவிசாயுங்கள், நம் இனத்தாரே, நமது வார்த்தையைக் கேளுங்கள்; ஏனெனில் திருச்சட்டம் நம்மிடமிருந்தே புறப்படும், நமது நீதி மக்களினங்களுக்கு ஒளியாய் விளங்கும்.
ஏசாயா 51 : 5 (RCTA)
நாம் தரும் விடுதலை அருகில் இருக்கிறது, நாம் அளிக்கும் மீட்பு வந்துகொண்டிருக்கிறது; நம்முடைய கைவன்மை மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்கும், தீவுகள் நம்மை எதிர்பார்த்திருக்கின்றன, நம்முடைய வல்லமைக்காகக் காத்திருக்கின்றன.
ஏசாயா 51 : 6 (RCTA)
வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்திப் பாருங்கள், பூமியை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துங்கள்; ஏனெனில் வானம் புகை போல மறைந்து போகும், பூமி பழந்துணிபோல நைந்து போகும்; அதன் குடிகளும் இவற்றைப்போல் அழிந்து போவர், நாம் அளிக்கும் மீட்போ என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் வழங்கும் விடுதலைக்கு முடிவே இராது.
ஏசாயா 51 : 7 (RCTA)
நீதியை உணர்ந்திருக்கும் மக்களே, நம் திருச்சட்டம் எழுதப்பட்ட இதயத்தைக் கொண்டவர்களே, நாம் சொல்வதைக் கேளுங்கள்: மனிதர்களின் நிந்தைக்கு அஞ்சவேண்டா, அவர்களுடைய பழிப்புரைக்குக் கலங்க வேண்டா.
ஏசாயா 51 : 8 (RCTA)
ஏனெனில், ஆடையைப் போல் அவர்களைப் பூச்சிகள் தின்னும், ஆட்டு மயிரைப் போல் அவர்களை அரி புழுக்கள் தின்று விடும். நாம் அளிக்கும் விடுதலை என்றென்றைக்கும் இருக்கும், நாம் தரும் மீட்பு தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும்."
ஏசாயா 51 : 9 (RCTA)
ஆண்டவரின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, ஆற்றலை அணிந்துகொள்: பண்டை நாட்களில் கிளம்பியது போல முந்தின தலைமுறைகளில் எழுந்தது போல விழித்தெழு. ராகாபை முன்னாளில் சிதைத்து வாட்டியதும், பறவை நாகத்தை ஊடுருவக் குத்தியதும் நீ தானன்றோ?
ஏசாயா 51 : 10 (RCTA)
பாதாளம் வரை ஆழமான கடல்நீரை வற்றச் செய்து, மீட்கப்பட்டவர்கள் கடக்கும்படி கடலின் ஆழத்தில் வழியமைத்ததும் நீ தானன்றோ?
ஏசாயா 51 : 11 (RCTA)
அவ்வாறே இப்பொழுதும் ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாய்ப் பாடிக்கொண்டு சீயோனுக்குத் திரும்புவார்கள்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்களுக்கு மணிமுடியாகச் சூட்டப்படும், அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவார்கள்; துன்பமும் அழுகையும் ஒழிந்துபோம்.
ஏசாயா 51 : 12 (RCTA)
நாமே, நாமே உங்களைத் தேற்றுவோம், சாகக்கூடிய மனிதனுக்கு நீ அஞ்சுவானேன்? புல்லைப் போல் உலர்ந்து போகும் மனிதனுக்குப் பயப்படுவானேன்?
ஏசாயா 51 : 13 (RCTA)
வானத்தை விரித்து மண்ணுலகை நிலைநாட்டி, உன்னையும் படைத்த ஆண்டவரை நீ மறந்தாயோ? உன்னைத் துன்புறுத்தி, உன்னை அழிக்கத் தேடியவனின் கோபத்தின் முன் நாள் முழுதும் இடை விடாது நடுங்கினாயே; இப்போது அந்தக் கொடியவனின் கோபம் எங்கே?
ஏசாயா 51 : 14 (RCTA)
சிறைப்பட்டவர்களை மீட்க வருகிறவர் காலந்தாழ்த்தாமல் விரைந்து வருகிறார்; ஆகவே அவர்கள் செத்துப் படுகுழிக்குப் போகமாட்டார்கள்; அவர்களுக்கு உணவு இல்லாமற் போகாது.
ஏசாயா 51 : 15 (RCTA)
ஆனால் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; கடலைக் கலக்கி அலைகள் எழச் செய்பவர் நாமே; சேனைகளின் ஆண்டவர் என்பது நமது பெயர்.
ஏசாயா 51 : 16 (RCTA)
உன் வாயில் நம் வார்த்தைகளை ஊட்டினோம்; வான்வெளியை விரித்து, மண்ணுலகை நிலைநாட்டிய போதும், சீயோனை நோக்கி 'நீங்கள் நம் மக்கள்' என்று சொன்ன போதும் நமதுகையின் நிழலில் உன்னைப் பாதுகாத்தோம்."
ஏசாயா 51 : 17 (RCTA)
எழுந்திரு, எழுந்திரு, ஆண்டவரின் கையிலிருந்து அவரது கோபத்தின் கிண்ணத்தைக் குடித்த யெருசலேமே, எழுந்து நில்; மயங்கி விழச் செய்யும் கிண்ணத்தின் அடிவரையில், கடைசித்துளி வரையில் குடித்தாய்.
ஏசாயா 51 : 18 (RCTA)
அவள் பெற்ற பிள்ளைகள் அனைவருள்ளும் அவளைத் தாங்குபவன் எவனுமில்லை; அவள் வளர்த்த புதல்வர்கள் அனைவருள்ளும் அவளைக் கைதூக்கி விடுபவன் எவனுமில்லை.
ஏசாயா 51 : 19 (RCTA)
இரண்டு தீமைகள் உனக்கு வந்து நேர்ந்தன: உன் மேல் அனுதாபம் கொள்பவன் யார்? கொடுமையும் அழிவும், பஞ்சமும் வாளும் வாட்டின; உனக்கு ஆறுதல் கொடுப்பவன் யார்?
ஏசாயா 51 : 20 (RCTA)
உன் பிள்ளைகள் தரையில் வீழ்ந்தனர், வலையில் பட்ட கலைமான் போல் எல்லாத் தெருக்களின் முனைகளிலும் மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள்; ஆண்டவருடைய கோபத்திற்கும், உன் கடவுளின் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகிக் கிடக்கிறார்கள்.
ஏசாயா 51 : 21 (RCTA)
ஏழ்மையானவளே, இரசத்தாலன்றித் துன்பத்தால் போதை வெறி கொண்டவளே, இதைக்கேள்.
ஏசாயா 51 : 22 (RCTA)
தம் மக்களைப் பாதுகாக்கும் உன் இறைவனாகிய ஆண்டவர்- உன் கடவுள் கூறுகிறார்: "இதோ, உன்னை மயங்கி விழச்செய்யும் கிண்ணத்தை உன் கையினின்று எடுத்து விட்டோம்; நமது கோபத்தை அடிவரையில் குடித்த உன் கையினின்று அதை அகற்றி விட்டோம்; இனி நீ அதைக் குடிக்கும்படி நேராது.
ஏசாயா 51 : 23 (RCTA)
நாங்கள் கடந்து போகும்படி நீ குப்புற விழுந்து கிட' என்று உன்னிடம் யார் சொன்னார்களோ, நீயும் உன் உடலைத் தரையாகவும், கடந்து செல்லும் வழியாகவும் யாருக்காக ஆக்கினாயோ, அவர்கள் கையில் - அவ்வாறு உன்ணைக் கொடுமைப் படுத்தியர்வர்கள் கையில், அந்தக் கிண்ணத்தைக் கொடுப்போம்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23