ஏசாயா 5 : 1 (RCTA)
என்னுடைய நண்பருக்கொரு கவிதை பாடுவேன், அவரது திராட்சைத் தோட்டத்தைக் குறித்துக் காதல் பாட்டொன்று இசைப்பேன். வளம் நிறைந்த குன்று ஒன்றின் மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
ஏசாயா 5 : 2 (RCTA)
அவர் நன்றாக அதைக் கொத்தி விட்டுக் கற்களை அகற்றி, தேர்ந்தெடுத்த திராட்சைக் கொடிகளை அதில் நட்டு வைத்தார்; அதன் நடுவில் கோபுரம் ஒன்றையும் கட்டினார், அதில் திராட்சை பிழியும் ஆலையையும் அமைத்தார்; நற் திராட்சைக் குலைகள் காய்க்குமெனக் காத்திருந்தார், காட்டுத் திராட்சைக் குலைகளே காய்த்தன.
ஏசாயா 5 : 3 (RCTA)
இப்பொழுது யெருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, நமக்கும் நம் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையில் நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஏசாயா 5 : 4 (RCTA)
நமது திராட்சைத் தோட்டத்திற்கு இன்னும் என்ன செய்யாமல் விட்டோம்? நற் கனிகளைத் தருமென்று நாம் காத்திருக்க, நமக்குக் காட்டுக் கனிகளை அது தந்தது ஏன்?
ஏசாயா 5 : 5 (RCTA)
இனி நமது திராட்சைத் தோட்டத்திற்கு நாம் செய்யப்போவதைக் கேளுங்கள்: நாமே அதன் வேலியைப் பிடுங்கியெறிவோம், அதுவோ பிறரால் சூறையாடப்படும்; அதன் சுற்றுச் சுவரை நாம் தகர்த்திடுவோம், அதுவோ மனிதர் கால்களில் மிதிபடும்.
ஏசாயா 5 : 6 (RCTA)
நாம் அதனைப் பாழாக்குவோம், கிளைகள் கழிக்கப்படா, பூமி கொத்தப்படாது; முட்களும் முட்புதர்களுமே அதில் வளரும்; அதன் மீது மழை பெய்யாதிருக்கும்படி மழை மேகங்களுக்கு நாம் கட்டளை தருவோம்.
ஏசாயா 5 : 7 (RCTA)
சேனைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ராயேல் வீட்டாரே. அவருக்கு விருப்பமான நாற்று யூதாவின் மனிதர்களே. அறம் விளையுமெனக் காத்திருந்தார், விளைந்ததோ மறம்! முறைமை தழைக்குமெனப் பார்த்திருந்தார், எழுந்ததோ முறைப்பாடு!
ஏசாயா 5 : 8 (RCTA)
வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, பிறருக்கெனக் கொஞ்சமும் இடமில்லாதபடி எல்லை வரை வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பரந்த இந்த நாட்டின் நடுவிலே நீங்கள் மட்டுமே வாழ இருப்பதாய் எண்ணமோ?
ஏசாயா 5 : 9 (RCTA)
என் காதுகளில் கேட்கும்படிக்குச் சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்: "மெய்யாகவே பெருந்தொகையான வீடுகள் பாழாகிக் கிடக்கும், பெரியவையும் அழகியவையுமான வீடுகள் குடியிருக்க ஆளின்றிக் கிடக்கும்.
ஏசாயா 5 : 10 (RCTA)
ஏனெனில் பத்துக் காணி திராட்சைத் தோட்டம் ஒரே குடம் இரசந்தான் கொடுக்கும்; ஒரு கலம் விதை நிலத்தில் போட்டால், ஒரே மரக்கால் விளைபலனே கிடைக்கும்."
ஏசாயா 5 : 11 (RCTA)
விடியற் காலையிலேயே விழித்தெழுந்து போதை தரும் பானத்தைத் தேடியலைந்து, நள்ளிரவு வரை குடிவெறியில் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 12 (RCTA)
அவர்களுடைய விருந்துகளில் கிண்ணாரம், வீணை, தம்புரு, குழல், திராட்சை இரசம் எல்லாமுண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைப்பதுமில்லை, அவருடைய கைவேலைகளை அவர்கள் காண்பதுமில்லை.
ஏசாயா 5 : 13 (RCTA)
ஆகவே நம் மக்கள் அறிவின்மையால் அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டார்கள்; மதிப்பிற்குரிய மனிதர்கள் பசியால் வாடினார்கள், பொதுமக்கள் தாகத்தால் தவித்தார்கள்.
ஏசாயா 5 : 14 (RCTA)
ஆதலால் பாதாளக் குழி தன் பசியை வளர்த்துக் கொண்டது, அளவு கடந்து தன் வாயைப் பிளந்துள்ளது; அதற்குள் வலிமையுடையவர்களும் பொது மக்களும் உயர்ந்தோரும் பெரியோரும் ஒருங்கே இறங்குகிறார்கள்.
ஏசாயா 5 : 15 (RCTA)
மனிதர்கள் தலை நாணினர், அவர்கள் குன்றிப் போனார்கள்; இறுமாப்புக் கொண்டவர்களின் கண்கள் தாழ்த்தப்பட்டன.
ஏசாயா 5 : 16 (RCTA)
ஆனால் சேனைகளின் ஆண்டவர் நீதியினால் உயர்த்தப்பட்டார், பரிசுத்த கடவுள் நீதியால் தம்மைப் பரிசுத்தரெனக் காட்டினார்.
ஏசாயா 5 : 17 (RCTA)
அப்போது ஆட்டுக்குட்டிகள் தங்கள் சொந்த மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல மேயும்; கொழுத்தவையும் வெள்ளாட்டுக் குட்டிகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.
ஏசாயா 5 : 18 (RCTA)
அவர் விரைந்து வரட்டும், நாம் பார்க்கும்படி தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய நோக்கம் நிறைவேறட்டும், அதுவும் நடக்கட்டும், நாம் அறிந்துகொள்வோம்" என்று சிலர் சொல்லுகிறார்கள்;
ஏசாயா 5 : 19 (RCTA)
சொல்லி, பொய்மை என்னும் கயிற்றால் தண்டனையைத் தங்கள் மேல் இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பதுபோல பாவத்தை இழுக்கிற அவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 20 (RCTA)
தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமாக்கி, வெளிச்சத்தை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 21 (RCTA)
தங்கள் கண்களுக்கு மட்டும் தாங்கள் ஞானிகளாகவும், தங்கள் பார்வைக்கு மட்டும் தாங்கள் விவேகிகளாகவும் இருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 22 (RCTA)
திராட்சை இரசம் குடிப்பதில் வீரர்களாயும், மதுபானம் கலப்பதில் வல்லவர்களாயும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 23 (RCTA)
அவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு குற்றவாளியை நீதிமானாகத் தீர்ப்பிடுகிறார்கள், நீதிமானின் நீதியைப் பறிக்கிறார்கள்.
ஏசாயா 5 : 24 (RCTA)
ஆதலால் நெருப்புத் தணல் வைக்கோலை விழுங்குவது போலவும், காய்ந்த புல் தீக்கிரையாவது போலவும், அவர்களுடைய ஆணிவேர் தீய்ந்து சாம்பலாகும், அவர்களின் சந்ததி துரும்பு போல பறந்துபோம்; ஏனெனில் சேனைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை வெறுத்துத் தள்ளிப் போட்டனர்.
ஏசாயா 5 : 25 (RCTA)
ஆதலால் ஆண்டவரின் சினம் அவருடைய மக்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார்; மலைகள் நடுங்கின; அவர்களுடைய உயிரற்ற உடல்கள் குப்பை போல தெருக்களின் நடுவில் கிடந்தன; இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை; நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 5 : 26 (RCTA)
தொலை நாட்டு மக்களுக்கு அவர் அடையாளக்கொடி காட்டுவார், உலகின் எல்லையிலிருந்து சீழ்க்கை யொலியால் கூப்பிடுவார்; இதோ, காற்றாய்ப் பறந்து வருகிறார்கள்.
ஏசாயா 5 : 27 (RCTA)
அவர்களுள் எவனும் களைக்கவில்லை, இடறவில்லை, தூங்கவில்லை, உறக்கம் கொள்ளவில்லை, இடைக் கச்சை தளரவில்லை, மிதியடிகளின் வாரொன்றும் அறுந்து போகவில்லை.
ஏசாயா 5 : 28 (RCTA)
அவர்களுடைய அம்புகள் கூராயுள்ளன, விற்கள் நாணேறியே இருக்கின்றன. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கல் போல கெட்டியானவை; அவர்களுடைய தேர்களின் சக்கரங்கள் புயற் காற்றைப் போல வேகமானவை.
ஏசாயா 5 : 29 (RCTA)
அவர்களுடைய கர்ச்சிப்பு சிங்கம் சீறுவது போலிருக்கிறது, இளஞ்சிங்கங்களைப் போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக் கொண்டு பாய்ந்து தங்கள் இரையைப் பிடிப்பார்கள்; இரை தூக்கிப் போய்விடுவர், யாரும் அதை மீட்க முடியாது.
ஏசாயா 5 : 30 (RCTA)
கடலின் பேரிரைச்சல் போல் அந்நாளில் அவர்கள் கர்ச்சித்து உறுமுவார்கள்; இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்த்தாலோ, இதோ, எங்கும் இருளும் துன்பமுமே நிறைந்திருக்கும். மேகங்கள் ஒளியை இருளச் செய்யும்.
❮
❯