ஏசாயா 49 : 1 (RCTA)
தீவுகளே, செவிகொடுத்துக் கேளுங்கள், தொலை நாட்டவரே, கூர்ந்து கவனியுங்கள்: கருப்பையிலேயே ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார், என் தாய் வயிற்றிலேயே எனக்குப் பெயரிட்டிருக்கிறார்.
ஏசாயா 49 : 2 (RCTA)
என் நாவைக் கூரிய வாளாக்கினார், தமது கையின் நிழலில் என்னைக் காத்தருளினார்; தீட்டிய அம்பாக என்னைச் செய்து, தமது அம்பறாத் தூணியில் ஒளித்து வைத்தார்.
ஏசாயா 49 : 3 (RCTA)
என்னைப் பார்த்து: "இஸ்ராயேலே, நீ நம் ஊழியன், உன்னில் நாம் மகிமை யடைவோம்" என்றார்.
ஏசாயா 49 : 4 (RCTA)
அதற்கு நான்: "பயனின்றி வீணாக உழைத்துச் சோர்ந்தேன், என் ஆற்றலைப் பயனின்றிச் செலவழித்தேன்; ஆயினும் என் நியாயம் ஆண்டவரின் பொறுப்பு, எனக்குரிய கைம்மாறு கடவுளிடம் உள்ளது" என்றேன்.
ஏசாயா 49 : 5 (RCTA)
யாக்கோபைத் தம்மிடம் அழைத்து வர, இஸ்ராயேலைத் தம்மிடம் கூட்டி வர, என்னைத் தம் ஊழியனாய் என் தாய் வயிற்றில், உருவாக்கிய ஆண்டவர் கூறுகிறர்; ஏனெனில் ஆண்டவர் திரு முன் நான் மகிமையடைந்தேன், என் கடவுள் என்னுடைய வலிமை ஆனார்.
ஏசாயா 49 : 6 (RCTA)
அவர் சொன்னார்: "யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ராயேலில் எஞ்சினோரைத் திருப்பிக் கொணரவும், நமக்கு நீ ஊழியனாய் இருத்தல் பெரிதன்று. உலகத்தின் எல்லை வரையில் நமது மீட்பு எட்டும் படி, புறவினத்தார்க்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினோம்."
ஏசாயா 49 : 7 (RCTA)
மனிதரால் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டுப் புறவினத்தாரால் அருவருத்துத் தள்ளப்பட்டவனும், மன்னர்களுக்கு ஊழியனுமானவனுக்கு இஸ்ராயேலின் மீட்பரும், அதன் பரிசுத்தருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "பிரமாணிக்கமுள்ள ஆண்டவரை" முன்னிட்டும், உன்னைத் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பரிசுத்தரை முன்னிட்டும், அரசர்கள் உன்னைக் கண்டு எழுந்திருப்பார்கள், தலைவர்கள் உன் முன் விழுந்து வணங்குவார்கள்."
ஏசாயா 49 : 8 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "உகந்த காலத்தில் உன் மன்றாட்டைக் கேட்டருள்வோம், மீட்பின் நாளில் உனக்கு உதவி புரிவோம்; உன்னைக் காத்தோம், மக்களுக்கு உடன்படிக்கையாய் உன்னை ஏற்படுத்தினோம்; உலகத்திற்குப் புத்துயிர் தரவும், சிதறுண்ட உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும்,
ஏசாயா 49 : 9 (RCTA)
விலங்கிடப்பட்டவர்களைப் பார்த்து, 'வெளியே வாருங்கள்' என்று சொல்லவும், இருளில் இருப்பவர்களை நோக்கி, 'வெளிச்சத்திற்கு வாருங்கள்' என்று சொல்லவும் ஏற்படுத்துவோம். அப்போது வழிகளில் தாராளமாய் நம் ஆடுகள் மேயும், எல்லாச் சமவெளிகளிலும் அவை மேய்ச்சலைக் காணும்.
ஏசாயா 49 : 10 (RCTA)
பசி தாகத்தால் அவை வருந்தமாட்டா, வெப்பமும் வெயிலும் அவற்றைத் தாக்கமாட்டா; ஏனெனில் அவற்றின் மேல் இரக்கமுள்ளவர் அவற்றைக் கண்காணித்து நடத்துவார்; நீரூற்றுகளுக்கு அவற்றைக் கூட்டிச் செல்வார்.
ஏசாயா 49 : 11 (RCTA)
நம்முடைய மலைகளை யெல்லாம் சமபாதையாக்குவோம், நம்முடைய வழிகள் யாவும் உயர்த்தப்படும்.
ஏசாயா 49 : 12 (RCTA)
இதோ, இவர்கள் தொலைவிலிருந்து வருவர், இதோ, அவர்கள் வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், மற்றவர்கள் தென் திசையினின்றும் வருவார்கள்."
ஏசாயா 49 : 13 (RCTA)
வானமே அக்களித்து ஆர்ப்பரி, மண்ணுலகே மகிழ்ந்து துள்ளு; மலைகளே, மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் தம் மக்களைத் தேற்றினார், தம் எளியார் மட்டில் இரக்கங் கொள்வார்.
ஏசாயா 49 : 14 (RCTA)
சீயோன் மகளோ, "ஆண்டவர் என்னைக் கைவிட்டு விட்டார், ஆண்டவர் என்னை மறந்து போய் விட்டார்" என்றாள்.
ஏசாயா 49 : 15 (RCTA)
பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!
ஏசாயா 49 : 16 (RCTA)
இதோ, நம்கைகளில் உன்னைப் பொறித்துள்ளோம், உன் பட்டணத்து மதில்கள் நம் கண் முன் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
ஏசாயா 49 : 17 (RCTA)
உன்னை மறுபடியும் கட்டுகிறவர்கள் விரைந்து வருகிறார்கள், உன்னை நாசஞ் செய்து சிதறடித்தோர் உன்னை விட்டுப் போகிறார்கள்.
ஏசாயா 49 : 18 (RCTA)
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; - நம் உயிர் மேல் ஆணை! என்கிறார் ஆண்டவர் - இவர்களெல்லாம் உனக்கு அணிகலனாய் இருப்பார்கள், மணப்பெண் போல் இவர்களால் உன்னை அழகு செய்வாய்.
ஏசாயா 49 : 19 (RCTA)
உன்னில் கைவிடப்பட்ட இடங்களும், உன்னுடைய பாழடைந்த நிலங்களும், உன்னுடைய இடிந்து போன மனைகளும் குடியிருக்க வரும் கும்பலுக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர் தொலைவாகத் துரத்தப்படுவர்.
ஏசாயா 49 : 20 (RCTA)
கைவிடப்பட்டவளாய் நீ இருந்த போது உனக்குப் பிறந்தவர்கள் உன்னிடத்தில் காதோடு காதாய் 'எனக்கு இடம் நெருக்கமாய் இருக்கிறது, குடியிருக்க எனக்கு இட வசதி செய்' என்பார்கள்.
ஏசாயா 49 : 21 (RCTA)
அப்போது நீ உன் இதயத்தில் சொல்வாய்: 'எனக்கு இந்தப் பிள்ளைகளைப் பெற்று கொடுத்தது யார்? நான் மலடியாயும் பிள்ளை பெறாதவளாயும் இருந்தேன், நாடு கடத்தப்பட்டு அடிமையாய் இருந்தேன், இவர்களை வளர்த்து வந்தது யார்? நானோ திக்கற்றவளாயும் தனியளாயும் இருந்தேன், இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்"
ஏசாயா 49 : 22 (RCTA)
கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, புறவினத்தாரை நோக்கி நமது கையை நீட்டுவோம், மக்களினங்களுக்கு நம் கொடியை உயர்த்திக் காட்டுவோம்; அவர்கள் உன் புதல்வர்களைக் கைகளிலேந்திக் கொணர்வார்கள், உன் புதல்வியரைத் தோளின் மேல் தூக்கி வருவார்கள்.
ஏசாயா 49 : 23 (RCTA)
அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர்களாயும், அரசிகள் உன் செவிலித் தாயாராகவும் இருப்பர்; முகம் தரையில் படிய உன்னை விழுந்து வணங்குவர், அவர்கள் உன் காலடியில் கிடப்பார்கள். அப்போது, நாமே ஆண்டவர் என்பதையும், நமக்காகக் காத்திருப்போர் அவமானமடையார் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்."
ஏசாயா 49 : 24 (RCTA)
வல்லவனிடமிருந்து கொள்ளைப் பொருளைப் பறித்தல் இயலுமோ? வெற்றிவீரனிடம் சிறைப்பட்டவர்களைத் தப்புவிக்கக் கூடுமோ?
ஏசாயா 49 : 25 (RCTA)
ஆனால் ஆண்டவர் கூறுகிறார்: "வல்லவனிடம் சிறைப்பட்டவர்கள் கூடப் பறிக்கப்படுவர், வெற்றி வீரனிடமிருந்து கொள்ளைப்பொருள் தப்புவிக்கப்படும். ஏனெனில் உன்னுடன் போராடுகிறவர்களோடு நாமும் போராடுவோம், உன்னுடைய மக்களை நாம் திண்ணமாய் மீட்போம்.
ஏசாயா 49 : 26 (RCTA)
உன் எதிரிகள் தங்கள் சதையையே பிடுங்கித் தின்னும்படி செய்வோம்; சொந்த இரத்தத்தையே புது இரசம் போலக் குடித்து வெறியேறும்படி செய்வோம்; அப்போது, எல்லா மனிதர்களும் உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவர் என்பதையும் அறிந்து கொள்வர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26