ஏசாயா 48 : 1 (RCTA)
இஸ்ராயேல் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு, யூதாவின் வித்திலிருந்து புறப்பட்டு, ஆண்டவர் திருப்பெயரால் ஆணையிடுகிறவர்களும், உண்மையிலும் நீதியிலும் இஸ்ராயேலின் கடவுளை நினைவு கூராதவர்களுமான யாக்கோபின் வீட்டாரே, இவற்றைக் கேளுங்கள்;
ஏசாயா 48 : 2 (RCTA)
ஏனெனில் பரிசுத்த நகரத்தினர் என்னும் பெயரால் அவர்கள் குறிக்கப்பட்டு வருகின்றனர்; இஸ்ராயேலின் கடவுள்மேல் ஊன்றியுள்ளனர்; சேனைகளின் ஆண்டவர் என்பது அவருடைய பெயர்.
ஏசாயா 48 : 3 (RCTA)
முற்காலத்து நிகழ்ச்சிகளை அப்பொழுதிலிருந்தே அறிவித்தோம், நம் வாயினின்று அவை வெளிப்பட்டன; அவற்றை உங்கள் செவிகளில் புகுத்தினோம்; பின்பு, திடீரென நாம் அவற்றைச் செயல்படுத்தினோம், அவை நிகழ்ந்ததையும் கண்டீர்கள்.
ஏசாயா 48 : 4 (RCTA)
நீ கடுமையானவன் என்றும், உன் கழுத்து இருப்புக் கம்பி என்றும், நெற்றி வெண்கலம் என்றும், நாம் முன்னமே அறிவோம்.
ஏசாயா 48 : 5 (RCTA)
ஆகவே, நீ, 'என் சிலைகளே இவற்றைச் செய்தன, செதுக்கப்பட்ட உருவங்களும், வார்க்கப்பட்ட படிமங்களுமே இவற்றைத் திட்டம் செய்தன' என்று சொல்லாதபடி, முதலிலிருந்தே உனக்கு முன்னறிவித்தோம், நிகழா முன்பே அவற்றை உனக்குக் குறிப்பிட்டோம்.
ஏசாயா 48 : 6 (RCTA)
நீ கேள்வியுற்றவை அனைத்தும், நிகழ்ந்தனவா இல்லையா என்று பார்; ஆனால் நீங்கள் அவற்றை அறிவிக்கிறீர்களா? நீ அறியாதவையும், நமக்குரியனவாய் வைக்கப் பட்டிருந்தவையுமான புதியனவற்றை இனி மேல் முன்னறிவிப்போம்.
ஏசாயா 48 : 7 (RCTA)
இவை இப்பொழுது தான் படைக்கப்பட்டன, முற்காலத்து நிகழ்ச்சிகள் அல்ல; 'இதோ, முன்பே இவற்றை நான் அறிவேன்' என்று ஒரு வேளை நீ சொல்லாதவாறு, இன்று வரை இவற்றை நீ கேட்டதே இல்லை.
ஏசாயா 48 : 8 (RCTA)
ஆம், இவற்றை நீ கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை; அன்று முதல் உன் செவி திறக்கப்படவுமில்லை; ஏனெனில் நீ கண்டிப்பாய்க் கட்டளையை மீறுவாய் எனத் தெரியும், தாய் வயிற்றிலிருந்தே உன்னைக் கலகக்காரன் என்றழைத்தோம்.
ஏசாயா 48 : 9 (RCTA)
ஆயினும் நமது திருப்பெயரை முன்னிட்டு நமது கோபத்தைத் தொலைவில் தள்ளுவோம்; நமது மகிமைக்காகவே உனக்குக் கடிவாளமிட்டு, நீ அழியாதபடி உன்னை நிறுத்துவோம்.
ஏசாயா 48 : 10 (RCTA)
இதோ, உன்னைச் சுத்தமாக்கினோம், ஆனால் வெள்ளியைக் காய்ச்சுவது போலன்று; துன்பம் என்னும் உலையில் சுத்தம் செய்து, உன்னை நாம் தேர்ந்து கொண்டோம்.
ஏசாயா 48 : 11 (RCTA)
நம்மை முன்னிட்டே, நம்மை யாரும் பழித்துரைக்காதபடி - நம்மை முன்னிட்டே இதைச் செய்வோம்; நமது மகிமையைப் பிறனொருவனுக்கு விட்டுக் கொடோம்.
ஏசாயா 48 : 12 (RCTA)
யாக்கோபே, நாம் அழைத்திருக்கிற இஸ்ராயேலே, நமக்குச் செவிகொடு; நாமே அவர், முதலும் நாமே, முடிவும் நாமே.
ஏசாயா 48 : 13 (RCTA)
நமது கை தான் பூமியை நிலைநிறுத்தினது, நமது வலக்கையே வான்வெளியை அளந்தது; நாம் அவற்றை அழைக்கும் போது, அவை யாவும் ஒருமிக்க வந்து நிற்கும்.
ஏசாயா 48 : 14 (RCTA)
நீங்கள் யாவரும் ஒன்றுகூடி நாம் சொல்வதைக் கேளுங்கள்: அந்தத் தெய்வங்களுள் எது இவற்றை அறிவித்தது? ஆண்டவர் சீருசுக்கு அன்பு செய்தார், அவனும் அவருடைய விருப்பத்தைப் பபிலோனில் செயலாற்றுவான், அவருடைய கை வன்மையைக் கல்தேயரிடம் காட்டுவான்.
ஏசாயா 48 : 15 (RCTA)
நாமே, சொன்னவர் நாமே; நாமே அவனை அழைத்து வந்தோம்; நாமே அவனை நடத்திக் கொண்டு வந்தோம், அவனது பாதையைச் செவ்வையாக்கினோம்.
ஏசாயா 48 : 16 (RCTA)
நம்மிடம் அணுகி வந்து வந்து இதைக் கேளுங்கள்; முதலிலிருந்தே நாம் மறை பொருளாய்ப் பேசினதில்லை; இவை நிகழத்தொடங்கிய காலத்திலிருந்தே நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்." இப்பொழுது கடவுளாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகின்றனர்.
ஏசாயா 48 : 17 (RCTA)
இஸ்ராயேலைக் குறித்து ஆண்டவர் திட்டமிட்டது: இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன்னுடைய மீட்பருமான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உனக்குப் பயனுள்ளவற்றைப் போதித்து நீ நடக்க வேண்டிய நெறியில் உன்னை நடத்துகின்ற உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
ஏசாயா 48 : 18 (RCTA)
நம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நீ மாத்திரம் முயற்சி எடுத்திருந்தால், உன் சமாதானம் ஆறு போலப் பெருக்கெடுத்திருக்கும், உன் நீதி கடலலைகள் போலப் பொங்கியிருக்கும்;
ஏசாயா 48 : 19 (RCTA)
உன் வித்து கடற்கரை மணல்கள் போலும், உன் சந்ததி கரையோரத்துக் கற்கள் போலும் இருந்திருப்பர். அதனுடைய பெயர் நம் திருமுன்னிருந்து அழிந்திருக்காது, மறைந்திருக்காது."
ஏசாயா 48 : 20 (RCTA)
பபிலோனிலிருந்து புறப்படுங்கள், கல்தேயாவை விட்டு வெளியேற்றுங்கள். உங்கள் விடுதலையை அக்களிப்பின் ஆரவாரத்தோடு அறிவியுங்கள், உலகின் எல்லைகள் வரை இச் செய்தியைப் பரப்புங்கள்; "தம் ஊழியனாகிய யாக்கோபை ஆண்டவர் மீட்டுக்கொண்டார்" என்று சொல்லுங்கள்.
ஏசாயா 48 : 21 (RCTA)
அவர்களை அவர் பாலைநிலத்தின் வழியாய்க் கூட்டி வந்த போது அவர்கள் தாகத்தால் வருந்தவில்லை; அவர்களுக்கெனப் பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தார், கற்பாறையைப் பிளந்தார், நீர்த்தாரைகள் பீறிட்டன.
ஏசாயா 48 : 22 (RCTA)
பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை" என்கிறார் ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: