ஏசாயா 42 : 1 (RCTA)
இதோ தம் ஊழியன், அவரை நாம் ஆதரிக்கிறோம், அவர் நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், அவரிடத்தில் நம் உள்ளம் பூரிப்படைகின்றது, அவர் மேல் நம்முடைய ஆவியைத் தங்கச் செய்தோம், அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
ஏசாயா 42 : 2 (RCTA)
அவர் சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; அவர் குரல் தெருவிலே கேட்காது.
ஏசாயா 42 : 3 (RCTA)
அவர் நெறிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார். உண்மையுள்ளவராய் அறத்தைக் கொணர்வார்.
ஏசாயா 42 : 4 (RCTA)
உலகில் அறத்தை நிலைநாட்டும் வரை, அவர் மனந்தளர மாட்டார், ஊக்கங்குறைய மாட்டார்; அவருடைய சட்டத்திற்காகத் தீவுகளும் காத்திருக்கின்றன.
ஏசாயா 42 : 5 (RCTA)
வான்வெளியைப் படைத்து அதை விரித்தவரும், மண்ணுலகை நிலைநிறுத்தி, அதில் செடிகளை முளைப்பித்தவரும், அதன் மேல் இருப்பவர்களுக்கு மூச்சைக் கொடுத்து, நடமாடுகிறவர்களுக்கு ஆவியைத் தந்தவருமான ஆண்டவராகிய கடவுள் கூறுகிறார்:
ஏசாயா 42 : 6 (RCTA)
ஆண்டவராகிய நாமே அறத்தை நிலை நாட்ட உன்னை அழைத்திருக்கிறோம், உன் கையைப் பிடித்து உன்னைக் காத்தோம்;
ஏசாயா 42 : 7 (RCTA)
குருடர்களுக்குக் கண்களைத் திறக்கவும், கட்டுண்டவரைத் தளையினின்று விடுவிக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும், உன்னை மக்களுக்கு உடன்படிக்கையாகவும், புறவினத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்தினோம்.
ஏசாயா 42 : 8 (RCTA)
ஆண்டவர் நாமே' இதுவே நமது பெயர்; நமது மகிமையைப் பிறருக்கோ நமது புகழைச் சிலைகளுக்கோ விடவே மாட்டோம்.
ஏசாயா 42 : 9 (RCTA)
முன்பே அறிவிக்கப்பட்டவை இதோ நிகழ்ந்துவிட்டன, இப்பொழுது புதியனவும் நாம் அறிவிக்கிறோம், அவை நடைபெறுவதற்கு முன்னமேயே உங்களுக்கு நாம் சொல்லி வைக்கிறோம்."
ஏசாயா 42 : 10 (RCTA)
கடலே, கடல் வாழ் உயிரினங்களே, தீவுகளே, அவற்றில் வாழும் மனிதர்களே, ஆண்டவருக்குப் புதிய பாட்டைப் பாடுங்கள், பூமியின் எல்லைகளிலிருந்து அவர் புகழைக் கூறுங்கள்.
ஏசாயா 42 : 11 (RCTA)
பாலை நிலமும் அதன் நகரங்களும், கேதார் மக்கள் வாழும் ஊர்களும் குரலை உயர்த்தட்டும்; சேலாவில் வாழ்பவர்களே, மகிழ்ச்சியால் பாடுங்கள், மலைகளின் உச்சியினின்று ஆர்ப்பரியுங்கள்.
ஏசாயா 42 : 12 (RCTA)
ஆண்டவருக்கு மகிமை செலுத்துவார்கள், தீவுகளில் அவர் புகழை அறிவிப்பார்கள்.
ஏசாயா 42 : 13 (RCTA)
வல்லவனைப் போல் ஆண்டவர் கிளம்பிடுவார், போர் வீரனைப் போலச் சினங் கொண்டெழுவார்; உரத்த குரலில் அதட்டுவார், முழக்கம் செய்வார், தம் எதிரிகள் மீது வல்லமையை வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42 : 14 (RCTA)
நெடுங்காலமாய்ப் பேசாமலிருந்தோம், மௌனம் காத்துப் பொறுமையாய் இருந்தோம்; பிள்ளை பெறுகிற பெண்ணைப் போலக் கூக்குரலிடுகிறோம், வேதனையால் மூச்சுத் திணறுகிறோம்.
ஏசாயா 42 : 15 (RCTA)
மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவோம், அவற்றின் பசும்புல் அனைத்தையும் உலரச் செய்வோம்; நதிகளை மணல் திட்டுகளாக மாற்றுவோம், நீர் நிலைகளை வறண்டு போகச் செய்வோம்.
ஏசாயா 42 : 16 (RCTA)
குருடர்களை அவர்கள் அறியாப் பாதையில் நடத்திச் செல்வோம், அவர்களுக்குத் தெரியாத வழிகளில் அவர்களை நடக்கச் செய்வோம்; அவர்கள் முன் இருளை ஒளியாக்குவோம், கோணலான வழிகளை நேராக்குவோம்; ஆம், இதெல்லாம் அவர்களுக்காகச் செய்வோம், அவர்களை நாம் கைவிட மாட்டோம்.
ஏசாயா 42 : 17 (RCTA)
செதுக்கப்பட்ட சிலைகள் மேல் நம்பிக்கை வைப்போரும், வார்த்துச் செய்த உருவங்களிடம், "எங்கள் தெய்வங்கள் நீங்களே" என்போரும், பின்னடைந்து போவார்கள், வெட்கி நாணமடைவார்கள்.
ஏசாயா 42 : 18 (RCTA)
செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, பார்ப்பதற்குக் கண்ணைத் திறங்கள்;
ஏசாயா 42 : 19 (RCTA)
யார் அந்தக் குருடன்? நம் ஊழியன் தான். யார் அந்தச் செவிடன்? நாம் அனுப்பும் தூதன் தான். நம்மால் அனுப்பப்பட்டவனைப் போலக் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியனைப் போலச் செவிடன் யார்?
ஏசாயா 42 : 20 (RCTA)
பல காரியங்களைப் பார்க்கிறாய், ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கிறதில்லை; உன் செவிகள் திறந்திருக்கின்றன, ஆனால் நீ கேட்கிறதில்லை.
ஏசாயா 42 : 21 (RCTA)
தம்முடைய நீதியை முன்னிட்டு ஆண்டவர், திருச்சட்டத்தை மகிமைப்படுத்தி உயர்த்த ஆவலுற்றார்.
ஏசாயா 42 : 22 (RCTA)
ஆனால் இந்த மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர், பொருட்களைப் பறிகொடுத்தனர்; அவர்கள் அனைவரும் படுகுழிகளில் அகப்பட்டனர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்; அவர்களும் கொள்ளைப் பொருளாயினர், அவர்களை விடுவிப்பவன் எவனுமில்லை; அவர்கள் சூறையாடப்பட்டனர், "திருப்பிக் கொடு" என்று சொல்பவர் யாருமில்லை.
ஏசாயா 42 : 23 (RCTA)
உங்களில் இதைக் கேட்கிறவன் யார்? வரப்போகின்றவற்றைக் கவனித்துக் கேட்பவன் எவன்?
ஏசாயா 42 : 24 (RCTA)
யாக்கோபைச் சின்னா பின்னமாக்கும்படியும், இஸ்ராயேலைக் கொள்ளையடிக்கும்படியும், எதிரிகளுக்குக் கையளித்தவர் யார்? யாருக்கு விரோதமாய் நாம் பாவஞ் செய்தோமோ அந்த ஆண்டவரன்றோ கையளித்தார்? அவருடைய வழிகளில் நடக்க மறுத்தார்கள், அவரது சட்டத்தை அவர்கள் கேட்கவில்லை.
ஏசாயா 42 : 25 (RCTA)
ஆகவே இஸ்ராயேல் மீது தம் சினத்தையும் ஆத்திரத்தையும் கொட்டினார், போரின் கொடுமையைக் காட்டினார்; அதைச் சுற்றிலும் அது தீ மூட்டிற்று, இஸ்ராயேலோ அதை உணரவில்லை; தீ இஸ்ராயேலைச் சுட்டெரித்தது, ஆயினும் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.
❮
❯