ஏசாயா 40 : 1 (RCTA)
ஆறுதல் கொடுங்கள், நம் மக்களைத் தேற்றுங்கள், என்கிறார் உங்கள் கடவுள்.
ஏசாயா 40 : 2 (RCTA)
யெருசலேமின் இதயத்தோடு உரையாடி உரத்த குரலில் அதற்குச் சொல்லுங்கள்: அதனுடைய அடிமை வேலை முடிந்து போயிற்று. அதன் அக்கிரமம் மன்னிக்கப்பட்டது; ஆண்டவரின் கையிலிருந்து தன் பாவங்கள் அனைத்திற்காகவும் இரு மடங்கு தண்டனை அது பெற்றுக் கொண்டது.
ஏசாயா 40 : 3 (RCTA)
கூக்குரல் ஒன்று ஒலிக்கிறது: "பாலை நிலத்தில் ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாழ்வெளியில் நம் கடவுளின் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்.
ஏசாயா 40 : 4 (RCTA)
பள்ளத் தாக்குகள் எல்லாம் நிரவப்படுக! மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுக! கோணலானவை நேராக்கப் படுக! கரடு முரடானவை சமமான வழிகள் ஆகுக!
ஏசாயா 40 : 5 (RCTA)
அப்போது ஆண்டவரின் மகிமை வெளிப்படுத்தப்படும், மனிதர் அனைவரும் ஒருங்கே அதைக் காண்பர்; ஏனெனில், ஆண்டவர் தாமே திருவாய் மலர்ந்தார்"
ஏசாயா 40 : 6 (RCTA)
உரக்கக் கூவிச் சொல்" என்றது ஒரு குரலொலி; "உரக்கக் கூவி எதைச் சொல்வேன்?" என்றேன் நான். மனிதர் அனைவரும் புல்லுக்குச் சமம், அவர்களின் மகிமையெல்லாம் வயல் வெளிப்பூவேயாகும்.
ஏசாயா 40 : 7 (RCTA)
ஆண்டவரின் ஆவி அதன் மேல் அடிக்கும் போது, புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது; உண்மையாகவே மக்கள் புல்லைப் போன்றவர்கள் தான்.
ஏசாயா 40 : 8 (RCTA)
புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது, நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஏசாயா 40 : 9 (RCTA)
சீயோனுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உயர்ந்த மலைமேல் நீ ஏறிப்போய் நில்; யெருசலேமுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உன் குரலையெழுப்பி முழங்கு; அஞ்சாமல் உன் குரலையுயர்த்தி, யூதாவின் பட்டணங்களுக்கு, "இதோ, உங்கள் கடவுள்" என்று சொல்லி அறிவி.
ஏசாயா 40 : 10 (RCTA)
இதோ, ஆண்டவராகிய கடவுள் வல்லமையோடு வரப்போகிறார், அவருடைய கை செங்கோல் செலுத்தும்; இதோ, அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது, அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன.
ஏசாயா 40 : 11 (RCTA)
ஆயனைப் போல் அவர் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக் குட்டிகளை தம் கையால் கூட்டிச் சேர்ப்பார்; சினையாடுகளை இளைப்பாறுமிடத்திற்குக் கூட்டிச் செல்வார்.
ஏசாயா 40 : 12 (RCTA)
கடல் நீரை உள்ளங்கையால் அளந்தவர் யார்? வானத்தின் நீள அகலங்களைக் கணித்தவர் யார்? மரக்காலால் மண்ணுலகை முகர்ந்தவர் யார்? மலைகளை எடைக்கல்லால் நிறுத்துக் குன்றுகளைத் துலாக்கோலால் தூக்கியவர் யார்?
ஏசாயா 40 : 13 (RCTA)
ஆண்டவரின் ஆவிக்கு உதவி செய்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
ஏசாயா 40 : 14 (RCTA)
யாரிடம் அவர் ஆலோசனை கேட்டார்? எவன் அவருக்குப் படிப்பித்தான்? நீதி நெறியை அவருக்குக் கற்பித்தவன் எவன்? அறிவு புகட்டி, அவருக்கு விவேக நெறியைக் காட்டினவன் எவன்?
ஏசாயா 40 : 15 (RCTA)
இதோ மக்களினங்கள் வாளியிலிருந்து சொட்டும் நீர்த்துளி போலும், தராசில் ஒட்டியுள்ள தூசு போலவும் கருதப்படுகின்றன; இதோ தீவுகள் அவர் முன்னால் சிறிய அணுவாகக் காணப்படுகின்றன.
ஏசாயா 40 : 16 (RCTA)
லீபானின் மரங்கள் நெருப்பு வளர்க்கப் போதா, அதன் மிருகங்கள் தகனப் பலிக்குப் பற்றா.
ஏசாயா 40 : 17 (RCTA)
மக்களினங்கள் யாவும் அவர் முன் இல்லாதவை போலும், ஒன்றுமில்லாமை போலும் விழலாகவும் கருதப்படுகின்றன.
ஏசாயா 40 : 18 (RCTA)
அப்படியிருக்க, யாருடைய சாயலாய் ஆண்டவரை ஆக்குவீர்கள்? எந்த உருவத்தை அவருக்கு அமைப்பீர்கள்?
ஏசாயா 40 : 19 (RCTA)
சிலை வடிவத்தையோ? சிலையைச் சிற்பி வார்க்கிறான், பொற்கொல்லன் அதைப் பொன் தகட்டால் வேய்கிறான். வெள்ளிச் சங்கிலிகள் அதற்குச் செய்து போடுகிறான்.
ஏசாயா 40 : 20 (RCTA)
திறமையுள்ள தச்சன் உளுத்துப் போகாத வைரமேறிய மரத்தைத் தேர்ந்து கொள்ளுகிறான்; அசைக்க முடியாதபடி சிலையொன்றைச் செய்து, நிலை நாட்டுவதெப்படி எனத் தேடுகிறான்.
ஏசாயா 40 : 21 (RCTA)
உங்களுக்கு இது தெரியாதா? நீங்கள் கேட்டதில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா?
ஏசாயா 40 : 22 (RCTA)
அவர் பூமியுருண்டைக்கு மேல் வீற்றிருக்கிறார். அதில் வாழ்வோர் அவர்முன் வெட்டுக் கிளிகளைப் போல்வர்; வான் வெளியை ஆடை போல விரிக்கிறவர் அவரே, தங்கியிருக்கும்படி கூடாரம் போல அதை அமைக்கிறவர் அவரே.
ஏசாயா 40 : 23 (RCTA)
இரகசியங்களின் ஆள்வோரை இல்லாதவர் போல் ஆக்குகிறார், உலகத்தின் தலைவர்களை வீணர்களாகச் செய்கிறார்.
ஏசாயா 40 : 24 (RCTA)
நடப்பட்டு, விதைக்கப்பட்டு, வேரூன்றினார்களோ இல்லையோ, உடனே அவர்கள் மேல் தம் ஆவியை ஊதினார்; ஊதியதும் அவர்கள் உலர்ந்து போயினர், புயலில் சிக்கிய துரும்பென அவர்களை வாரிச் சென்றது.
ஏசாயா 40 : 25 (RCTA)
யாருக்கு நம்மை நீங்கள் ஒப்பிடுவீர்கள்? யாருக்குச் சமமாக்குவீர்கள் என்கிறார் பரிசுத்தர்.
ஏசாயா 40 : 26 (RCTA)
உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள் இவற்றைப் படைத்தவர் யார்? இவற்றின் படைகளை ஒன்றன் பின் ஒன்றாய் வெளி நடத்தி, இவையனைத்தையும் பெயரிட்டழைக்கிறவரே அன்றோ? தம்முடைய பலத்தின் மகத்துவத்தாலும் ஆற்றலின் வல்லமையாலும், ஒன்றேனும் குறைவுறாதபடி பார்த்துக் கொள்ளுகிறார்.
ஏசாயா 40 : 27 (RCTA)
என் நடத்தை ஆண்டவருக்கு மறைவாயுள்ளது, எனக்கு நீதி செலுத்தாமல் என் கடவுள் விட்டு விட்டார்" என்று யாக்கோபே, நீ சொல்வதெப்படி? இஸ்ராயேலே, நீ பேசுவதெப்படி?
ஏசாயா 40 : 28 (RCTA)
உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையோ? ஆண்டவர் தான் முடிவில்லாத கடவுள்; பூமியின் எல்லைகளைப் படைத்தவர் அவரே, அவர் சோர்ந்து போவாரல்லர், களைப்படைவாரல்லர்; அவருடைய ஞானமோ புத்திக்கு எட்டாதது.
ஏசாயா 40 : 29 (RCTA)
அவரே களைத்தவனுக்குப் பலம் தருகிறார், வலிமையும் சக்தியும் அற்றவர்க்கு அவற்றை ஊட்டுகிறார்.
ஏசாயா 40 : 30 (RCTA)
இளைஞரும் சோர்ந்து போவார்கள், களைப்படைவார்கள்; வாலிபர்கள் நோய்வாய்ப்பட்டு விழுவார்கள்.
ஏசாயா 40 : 31 (RCTA)
ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: