ஏசாயா 39 : 1 (RCTA)
அக்காலத்தில், பபிலோன் பட்டணத்து அரசனான பலாதான் என்பவனின் மகன் மேரோதாக் பலாதான் என்பவன், எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டதையும், நோயினின்று குணமானதையும் கேள்விப்பட்டு அவனிடம் கடிதங்களும் அன்பளிப்புகளும் கொடுத்தனுப்பினான்.
ஏசாயா 39 : 2 (RCTA)
அந்தத் தூதுவர்களை எசேக்கியாஸ் அன்போடு வரவேற்றான்; மேலும் அவர்களுக்குத் தன் கருவூல அறையையும், வெள்ளி, பொன், நறுமணப் பொருட்கள், பரிமளத் தைலம் இவற்றையும், படைக்கலங்களின் கொட்டிலையும், தன் கிடங்குகளில் இருந்த எல்லாவற்றையும் காட்டினான். எசேக்கியாஸ் தன் அரண்மனையிலோ தன் ஆதீனத்திலோ அவர்களுக்குக் காட்டாதது ஒன்றுமே இல்லை.
ஏசாயா 39 : 3 (RCTA)
அப்போது இசையாஸ் இறைவாக்கினர் எசேக்கியாஸ் அரசனிடம் வந்து, "இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று கேட்டார். எசேக்கியாஸ், மிகத் தொலைவிலுள்ள நாடாகிய பபிலோனிலிருந்து என்னைக் காண வந்தனர்" என்று மறுமொழி சொன்னான்.
ஏசாயா 39 : 4 (RCTA)
உன் அரண்மணையில் அவர்கள் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் கேட்க, எசேக்கியாஸ், "என் வீட்டிலுள்ள யாவற்றையும் பார்த்தார்கள்; அவர்களுக்கு நான் காட்டாதது என் கிடங்குகளில் ஒன்றுமே இல்லை" என விடை கொடுத்தான்.
ஏசாயா 39 : 5 (RCTA)
அப்போது, இசையாஸ் எசேக்கியாசைப் பார்த்து, "சேனைகளின் ஆண்டவரது வாக்கைக் கேள்:
ஏசாயா 39 : 6 (RCTA)
இதோ நாட்கள் வருகின்றன; அப்போது உன் வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களும், உன் தந்தையர் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; ஒன்றும் விடப்படாது என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 39 : 7 (RCTA)
உனக்குப் பிறக்கும் உன் சொந்த மக்களுள் சிலரும் கொண்டுபோகப்படுவர்; அவர்கள் பபிலோன் அரசருடைய அரண்மனையில் அண்ணகராய் இருப்பார்கள்" என்று சொன்னார்.
ஏசாயா 39 : 8 (RCTA)
எசேக்கியாஸ் இசையாசை நோக்கி, "நீர் கூறிய ஆண்டவருடைய வாக்கு நல்லது தான்" என்றான். மேலும், "என்னுடைய வாழ்நாட்களில் சமாதானமும் உண்மையும் நிலவினால் போதும்" என்று நினைத்துக் கொண்டான்.

1 2 3 4 5 6 7 8