ஏசாயா 37 : 1 (RCTA)
எசேக்கியாஸ் அரசன் இவற்றைக் கேட்டதும், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி ஆடை உடுத்தி ஆண்டவரின் கோயிலுக்குள் போனான்.
ஏசாயா 37 : 2 (RCTA)
மேலும் அரண்மனைக் காரியக்காரனான எலியாசிமையும், செயலாளனான சொப்னாவையும், அர்ச்சகர்களுள் மூப்பரையும் கோணி ஆடை போர்த்தியவர்களாய், ஆமோசின் மகனான இசையாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பினான்.
ஏசாயா 37 : 3 (RCTA)
அவர்கள் போய் அவரைப் பார்த்து, "எசேக்கியாஸ் கூறுகிறார்: 'இந்த நாள் வேதனையும் கண்டிப்பும் பழிச் சொல்லும் நிறைந்த நாளாக இருக்கிறது. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது, பெறுவதற்கோ பலமில்லை.
ஏசாயா 37 : 4 (RCTA)
உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி அசீரியாவின் அரசனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாசேஸ் கூறிய வார்த்தைகளை உம் கடவுளாகிய ஆண்டவர் ஒரு வேளை கேட்டிருப்பார்; உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்ட அந்த வார்த்தைகளைக் கண்டித்தாலும் கண்டிப்பார்; ஆதலால் இன்னும் மீதியாய் விடப்பட்ட எஞ்சினோருக்காக உமது மன்றாட்டை உயர எழுப்பியருளும்" என்றார்கள்.
ஏசாயா 37 : 5 (RCTA)
எசேக்கியாஸ் அரசனின் ஊழியர்கள் இசையாசிடம் வந்து இவ்வாறு சொன்னதும்,
ஏசாயா 37 : 6 (RCTA)
இசையாஸ் அவர்களை நோக்கி, "உங்கள் தலைவனிடம் போய் நீங்கள் சொல்ல வேண்டியது இதுவே: 'ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனுடைய ஊழியர்கள் நம்மைப் பழித்துரைத்த வார்த்தைகளைக் கேட்டு நீ அஞ்சாதே.
ஏசாயா 37 : 7 (RCTA)
இதோ, நாம் அவனுக்குள் ஓர் ஆவியை அனுப்புவோம்; அவனும் வதந்தி ஒன்றைக் கேள்விப்பட்டுத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விடுவான். அவனுடைய சொந்த நாட்டில் அவன் வாளுக்கிரையாகி மடியச் செய்வோம்" என்றார்.
ஏசாயா 37 : 8 (RCTA)
அவ்வாறே, அசீரியாவின் அரசன் லாக்கீசினின்று புறப்பட்டுப் போய் விட்டான் என்று இரப்சாசேஸ் கேள்விப்பட்டுத் திரும்பிப் போய், லொப்னாவுக்கு விரோதமாகப் போர் செய்து கொண்டிருந்த அரசனைக் கண்டான்.
ஏசாயா 37 : 9 (RCTA)
அப்போது, "உனக்கு விரோதமாய்ப் போர் புரியக் கிளம்பி விட்டான்" என்னும் செய்தியை எத்தியோப்பாவின் அரசனான தராக்கா என்பவனைக் குறித்து அரசன் கேள்வியுற்றான்; உடனே அவன் எசேக்கியாஸ் அரசனிடம் தன் தூதுவர்களை அனுப்பி,
ஏசாயா 37 : 10 (RCTA)
அவர்களிடம், "யூதாவின் அரசனான எசேக்கியாசிடம் நீங்கள் போய், 'நீ நம்பிக்கை வைத்திருக்கும் உன் கடவுள், யெருசலேம் அசீரிய அரசன் கையில் விடப்படாது என்று உனக்கு வாக்குறுதி செய்து உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்.
ஏசாயா 37 : 11 (RCTA)
இதோ அசீரியாவின் அரசர்கள் தாங்கள் அழித்த நாடுகளுக்கெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்று நீ கேட்டிருப்பாய்; அப்படியிருக்க நீ மட்டும் தப்பித்துக் கொள்ளக் கூடுமோ?
ஏசாயா 37 : 12 (RCTA)
என் தந்தையர்கள் அழித்த கோசாம், ஆராம், இரசேப் முதலிய நாட்டு மக்களையும் தாலாசாரிலிருந்த ஏதோம் மக்களையும் அந்த மக்களின் தெய்வங்கள் காப்பாற்றினவோ?
ஏசாயா 37 : 13 (RCTA)
ஏமாத்தின் அரசன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வாரும், ஆனா, ஏவா பட்டணங்களின் அரசர்கள் எங்கே?' என்று சொல்லுங்கள்" எனச் சொல்லியனுப்பினான்.
ஏசாயா 37 : 14 (RCTA)
எசேக்கியாஸ் தூதர்கள் கையிலிருந்து கடிதத்தை வாங்கிப் படித்தான்; அதன் பிறகு, எசேக்கியாஸ் ஆண்டவரின் கோயிலுக்குள் அதை எடுத்துச் சென்று ஆண்டவர் முன்னால் அதை விரித்து வைத்தான்.
ஏசாயா 37 : 15 (RCTA)
வைத்து எசேக்கியாஸ் ஆண்டவரைப் பார்த்து மன்றாடினான்:
ஏசாயா 37 : 16 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரே, கெரூபீம்களுக்குமேல் வீற்றிருப்பவரே, உலகத்தின் அரசர்களுக்கெல்லாம் ஒரே கடவுளாய் இருப்பவர் நீரே; விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினவர் நீரே.
ஏசாயா 37 : 17 (RCTA)
ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும், ஆண்டவரே, கண் திறந்து பாரும், உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி சென்னாக்கெரிப் சொல்லியனுப்பியுள்ள வார்த்தைகளையெல்லாம் காதால் கேளும்.
ஏசாயா 37 : 18 (RCTA)
ஆண்டவரே, அசீரிய அரசர்கள் மக்களினங்களை அழித்து அவர்களுடைய நாடுகளைப் பாழாக்கியது உண்மையே.
ஏசாயா 37 : 19 (RCTA)
அவர்களுடைய தெய்வங்களை நெருப்பில் எறிந்தார்கள்; ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதரால் செய்யப்பட்ட கைவேலைப்பாடுகள்; ஆகவே அவை தவிடு பொடியாக்கப்பட்டன.
ஏசாயா 37 : 20 (RCTA)
இப்போது, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உலகத்தின் அரசுகள் யாவும் நீர் ஒருவரே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும்படியாக, அவனுடைய கையிலிருந்து எங்களை மீட்டருளும்."
ஏசாயா 37 : 21 (RCTA)
அப்போது ஆமோஸ் மகனான இசையாஸ் எசேக்கியாசுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனான சென்னாக்கெரிபின் காரணமாய் நீ நம்மிடம் மன்றாடினதைக் கேட்டோம்;
ஏசாயா 37 : 22 (RCTA)
அவனைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: 'கன்னிப் பெண்ணாகிய சீயோன் மகள் உன்னை அவமதித்தாள், உன்னைப் பழித்தாள்; யெருசலேம் என்னும் புதல்வி உன் பின்னால் தலையசைத்தாள்.
ஏசாயா 37 : 23 (RCTA)
யாரை நீ ஏளனம் செய்தாய்? யாரைப் பழித்துரைத்தாய்? யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்? இறுமாப்பாக உன் கண்களை உயர்த்திப் பார்த்தாய்? இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராய்த் தானே!
ஏசாயா 37 : 24 (RCTA)
உன் ஊழியர்கள் வழியாய் நீ ஆண்டவரைப் பழித்தாய், நீ சொன்னாய்: திரளான என் தேர்ப்படைகளோடு மலைகளின் உச்சிகளுக்கும் லீபான் குன்றின் கொடு முடிக்கும் நான் ஏறிப் போனேன்; அதன் மிக உயரமான கேதுரு மரங்களை வீழ்த்தினேன், அதன் மிகச் சிறந்த தேவதாரு மரங்களை வெட்டினேன்; மிகத் தொலைவான அதன் உச்சியையும் அடைந்தேன், அடர்ந்த அதன் காடுகளையும் அழித்தேன்.
ஏசாயா 37 : 25 (RCTA)
கிணறுகள் வெட்டினேன், அவற்றின் தண்ணீரைப் பருகினேன்; என் காலடிகளின் சுவடுகளாலேயே எகிப்தின் நீரோடைகளையெல்லாம் உலரச் செய்தேன், என்றாய்.
ஏசாயா 37 : 26 (RCTA)
முற்காலத்திலேயே நாம் அதைத் திட்டமிட்டோம் என்பதை நீ கேட்டதில்லையோ? பண்டை நாள் முதல் திட்டமிட்டிருந்ததையே இன்று நாம் செயல் படுத்துகின்றோம்: அரண் சூழ்ந்த பட்டணங்களை நீ மண்மேடாக்குவது உனக்கு நாம் வகுத்த திட்டம் தான்.
ஏசாயா 37 : 27 (RCTA)
அவற்றின் குடிமக்கள் கை சோர்ந்து, விடவிடத்து வெட்கிப்போயினர்; அவர்கள் வயல்வெளிச் செடிகள் போலும், மேய்ச்சல் நிலத்து அறுகு போலும், கூரை மீது முளைத்து முற்றுவதற்குள் உலர்ந்துபோகும் புற்கள் போலும் ஆயினர்.
ஏசாயா 37 : 28 (RCTA)
உன் இருப்பிடத்தையும், உன் புறப்பாட்டையும், உன் வருகையையும், நமக்கெதிராய் நீ கொண்ட கோப வெறியையும் அறிந்துள்ளோம்.
ஏசாயா 37 : 29 (RCTA)
நீ நமக்கெதிராய் ஆத்திரங்கொண்டு பொங்கினாய், உன் ஆணவச் சொற்கள் நம் செவிக்கெட்டின; ஆதலால் நாம் உன் மூக்கில் வளையம் போட்டு, உன் வாயில் கடிவாளம் மாட்டி, நீ வந்த வழியே திரும்பிச் செல்லும்படி, உன்னைக் கூட்டிப் போய் விடுவோம்.'
ஏசாயா 37 : 30 (RCTA)
உனக்கு ஓர் அடையாளம் இருப்பது இதுவே: அறுவடையில் சிதறியதை இவ்வாண்டில் சாப்பிடுவாய், அடிக்கட்டையில் கிளைப்பதன் பலன் தான் அடுத்த ஆண்டிற்குக் கிடைக்கும். மூன்றாம் ஆண்டிலோ விதைத்து, அறுவடை செய்தும், திராட்சை நட்டுக் கனிகளைப் பறித்தும் சாப்பிடுவாய்.
ஏசாயா 37 : 31 (RCTA)
யூதாவின் வீட்டில் விடுவிக்கப்பட்டு எஞ்சியிருப்பது மீண்டும் கீழே வேர் விட்டு மேலே கனி கொடுக்கும்.
ஏசாயா 37 : 32 (RCTA)
ஏனெனில் எஞ்சியிருப்போர் யெருசலேமிலிருந்து புறப்படுவர், தப்பியவர்கள் கூட்டம் சீயோன் மலையிலிருந்து வெளியே போகும், சேனைகளின் ஆண்டவரது வைராக்கியம் இதைச் செய்து முடிக்கும்.
ஏசாயா 37 : 33 (RCTA)
ஆதலால் அசீரியாவின் அரசனைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணத்தில் அவன் நுழைய மாட்டான், அதற்குள்ளே அம்பு எய்ய மாட்டான்; கேடயம் தாங்கி அதன் முன் வரமாட்டான், அதைச் சுற்றி முற்றுகையும் இடமாட்டான்;
ஏசாயா 37 : 34 (RCTA)
தான் வந்த வழியே அவன் திரும்பி விடுவான், இந்த நகரத்தினுள் நுழைய மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 37 : 35 (RCTA)
நம்மை முன்னிட்டும், நம் ஊழியன் தாவீதை முன்னிட்டும் இந்த நகரத்தை நாமே காப்போம், மீட்போம்."
ஏசாயா 37 : 36 (RCTA)
ஆண்டவரின் தூதரோ அசீரியர்களின் பாளையங்களுக்குப் போய் நூற்றெண்பத்தையாயிரம் பேரைக் கொன்று போட்டார்; மறுநாட் காலையில் மற்றவர்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் செத்துக் கிடந்தார்கள்.
ஏசாயா 37 : 37 (RCTA)
பிறகு அசீரிய அரசனான சென்னாக்கெரிப் தன் நாட்டுக்குத் திரும்பிப் போய் நினீவேயில் வாழ்ந்து வந்தான்.
ஏசாயா 37 : 38 (RCTA)
ஒரு நாள் அவன் தன் குல தெய்வமான நெஸ்ரோக்கின் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கையில், அவனுடைய சொந்த மக்களான அதிராமெலக், சாராசார் என்பவர்கள் அவனை வாளால் வெட்டிக் கொன்று விட்டு, ஆரராத் நாட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்; அவன் மகனாகிய அசாராதோன் என்பவன் அவனுடைய இடத்தில் அரசாளத் தொடங்கினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38