ஏசாயா 35 : 1 (RCTA)
பாழ்வெளியும் வறண்ட நிலமும் அகமகிழும், பாலை நிலம் அக்களிப்பால் பூரித்து லீலி போல மலரும்.
ஏசாயா 35 : 2 (RCTA)
வளமாக முளை கிளம்பித் தளிர் கொள்ளும், மகிழ்ச்சி பொங்கப் புகழ் கூறி நடனமாடும்; லீபானின் மகிமை பாலைக்குக் கிடைக்கும், கர்மேல், சாரோன் அழகு அதனில் ஒளிரும், ஆண்டவருடைய மகிமை அங்கே விளங்கும், நம் கடவுளின் அழகொளி அங்கே புலனாகும்.
ஏசாயா 35 : 3 (RCTA)
தளர்ந்துபோன கைகளை வலிமைப் படுத்துங்கள், நடுக்கமுற்ற முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.
ஏசாயா 35 : 4 (RCTA)
உள்ளத்தில் உரமில்லாதவர்களை நோக்கி, "உறுதியாய் இருங்கள், அஞ்சவேண்டா; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைம்மாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்ளை மீட்பார்" என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35 : 5 (RCTA)
அப்போது குருடருடைய கண்கள் திறக்கப்படும், செவிடரின் காதுகள் கேட்கும் ஆற்றல் பெறும்;
ஏசாயா 35 : 6 (RCTA)
அப்போது முடவன் மான் கன்று போலத் துள்ளுவான், ஊமைகளின் நாக்கு மகிழ்ச்சியால் பாடும்; பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலை நிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும்.
ஏசாயா 35 : 7 (RCTA)
கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்; குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும்.
ஏசாயா 35 : 8 (RCTA)
நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். 'திருப்பாதை' என்று அது பெயர் பெறும்; அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது.
ஏசாயா 35 : 9 (RCTA)
சிங்கம் அங்கே இருக்காது, கொடிய மிருகம் அவ்வழியாய் ஏறிப் போகாது; அப்படிப் பட்டது எதுவும் அங்குத் தென்படாது, மீட்படைந்தவர்களே அவ்வழியாய் நடந்து போவார்கள்.
ஏசாயா 35 : 10 (RCTA)
ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவர், வாழ்த்திக் கொண்டு சீயோனுக்கு வந்து சேருவர்; அவர்கள் தலை மேல் அகமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பெற்றுக் கொள்வர், துன்பமும் அழுகையும் பறந்து போய்விடும்.

1 2 3 4 5 6 7 8 9 10