ஏசாயா 34 : 1 (RCTA)
மக்களினங்களே, நெருங்கி வந்து கேளுங்கள், பல நாட்டு மக்களே, காது கொடுத்துக் கவனியுங்கள்; பூமியும் அதில் நிறை யாவும் கேட்கட்டும், நிலமும் அதில் முளைக்கும் அனைத்தும் செவி சாய்க்கட்டும்.
ஏசாயா 34 : 2 (RCTA)
ஏனெனில் ஆண்டவரின் கோபம் எல்லா மக்களினங்கள் மேலும் விழும், அவருடைய ஆத்திரம் அவர்களுடைய படைகள் அனைத்தின் மேலும் விழும். அவர்களை அவர் கொன்று போடுவார், அவர்களைப் படுகொலைக்குக் கையளிப்பார்.
ஏசாயா 34 : 3 (RCTA)
கொல்லப்பட்டவர்கள் ஆங்காங்கு எறியப்படுவர், அவர்களுடைய பிணங்களினின்று நாற்றம் எழும்; அவர்களுடைய இரத்தம் மலைகள் மேலும் வழிந்தோடும்.
ஏசாயா 34 : 4 (RCTA)
வானத்தின் படைகள் யாவும் சோர்வடையும், வான்வெளி ஏட்டுச் சுருள் போல் சுருட்டப்படும்; திராட்சைச் செடியின் இலைகளும் அத்திமரத்தின் இலைகளும் உதிர்வது போல வான் படைகள் யாவும் வீழும்.
ஏசாயா 34 : 5 (RCTA)
ஏனெனில் வானகத்தில் நமது வாள் குடிவெறி கொண்டுள்ளது, இதோ, நீதி விளங்கும்படியாக இதுமேயா மேலும், படுகொலைக்கென நாம் தீர்மானித்த மக்கள் மேலும் இறங்கப் போகிறது.
ஏசாயா 34 : 6 (RCTA)
ஆண்டவருடைய வாள் செந்நீர் நிறைந்துள்ளது, கொழுப்பால் அது தழும்பேறியுள்ளது; செம்மறிகள், வெள்ளாடுகள் இவற்றின் இரத்தத்தாலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பினாலும் நிறைந்துள்ளது. போஸ்ராவில் ஆண்டவருக்குப் பலி கிடைக்கப் போகிறது, இதுமேயாவில் படுகொலை நடக்கப் போகிறது.
ஏசாயா 34 : 7 (RCTA)
அவற்றுடன் காட்டெருதுகளும் விழும், வலிய எருதுகளுடன் இளைய காளைகளும் வந்து மடியும்; அவற்றின் இரத்தத்தால் பூமி நிரம்பி வெறி கொள்ளும், மண் தரையில் அவற்றின் கொழுப்பு ஏறியிருக்கும்.
ஏசாயா 34 : 8 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் பழிவாங்கும் நாளிதுவே, சீயோனுக்காக நீதி வழங்கிப் பலனளிக்கும் காலமாகும்.
ஏசாயா 34 : 9 (RCTA)
ஏதோமின் நீரோடைகள் கீலாக மாறும், அதனுடைய நிலத்தின் மண் எரியும் கந்தகமாகும்; அதன் நிலம் தணல் பறக்கும் குங்கிலியமாகும்.
ஏசாயா 34 : 10 (RCTA)
இரவும் பகலும் அது அணையாமல் எரியும், அதிலிருந்து புகை இடைவிடாது எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தலைமுறைக்கும் அது பாழாய்க் கிடக்கும், என்றென்றைக்கும் அவ்வழியாய் எவனும் செல்லமாட்டான்.
ஏசாயா 34 : 11 (RCTA)
நாரையும் முள்ளம் பன்றியும் அதை உரிமையாக்கிக் கொள்ளும்; ஆந்தையும் காதமும் அங்கே குடிகொள்ளும்; ஒன்றுமில்லாமையாய் அதைப் பாழாக்கத் தண்டனைக் கோல் நீட்டப்படும், அதை முற்றிலும் அழிக்கும்படி தூக்கு நூல் இடப்படும்.
ஏசாயா 34 : 12 (RCTA)
கூளிகள் அவ்விடத்தில் குடிகொள்ளும், பெருங்குடி மக்கள் அங்கிருக்க மாட்டார்கள்; அரசனுக்கு முடிசூட்டும் விழா அங்கே நடைபெறாது, அதன் தலைவர்கள் யாவரும் ஒன்றுமில்லாமை ஆவார்கள்.
ஏசாயா 34 : 13 (RCTA)
அதன் வீடுகளில் முட்களும் காஞ்சொறிப் பூண்டுகளும் முளைக்கும், அதன் கோட்டைகள் மீது நெருஞ்சில்கள் கிளம்பும்; குள்ள நரிகள் அங்கே குடிகொள்ளும், தீக் கோழிகளுக்கு அது மேய்ச்சலிடாமகும்.
ஏசாயா 34 : 14 (RCTA)
காட்டு மிருகங்களும் கழுதைப்புலிகளும் அங்கே கூடிவரும், கூளிகள் ஒன்றை ஒன்று கூப்பிடும். பெண் பேய் அங்கே வந்து தங்கியிருக்கும், அவ்விடத்தில் வந்து இளைப்பாறும்.
ஏசாயா 34 : 15 (RCTA)
விரியன் பாம்பு அங்கே வளை பறித்து அதில் குட்டிகள் போட்டு வளர்க்கும்; சுற்றிக் குடைந்து, அவற்றை தன் நிழலில் காக்கும், பருந்துகள் தங்கள் துணைகளோடு கூடிவரும்.
ஏசாயா 34 : 16 (RCTA)
ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவி தான் அவற்றை ஒன்று சேர்த்தது.
ஏசாயா 34 : 17 (RCTA)
அவரே அவற்றுக்குச் சீட்டுப் போட்டுப் பங்கு பிரித்தார், அவரது கையே அளவுக்கேற்பப் பகிர்ந்து கொடுத்தது. அவை அதனை என்றென்றைக்கும் உடைமையாக்கிக் கொள்ளும், தலைமுறை தலைமுறையாய் அங்கே குடியிருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17