ஏசாயா 33 : 1 (RCTA)
கொள்ளையடிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீயும் கொள்ளையடிக்கப்பட மாட்டாயோ! மற்றவர்களுக்குத் துரோகம் செய்கிறவனே, உனக்கும் துரோகம் செய்ய மாட்டார்களோ! நீ கொள்ளையடித்து முடிந்ததும் பிறர் உன்னைக் கொள்ளையடிப்பர், துரோகம் செய்த உனக்கும் துரோகம் செய்வர்.
ஏசாயா 33 : 2 (RCTA)
ஆண்டவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும், ஏனெனில் உமக்காகவே காத்திருந்தோம்; காலை தோறும் எங்கள் புய பலமாகவும், துன்ப காலத்தில் எங்கள் மீட்பாகவும் இரும்.
ஏசாயா 33 : 3 (RCTA)
பேரிரைச்சல் கேட்டு வேற்று நாட்டினர் ஓட்டமெடுக்கிறார்கள், நீர் எழுந்து வரும் பொழுது மக்களினங்கள் சிதறிப் போகின்றன.
ஏசாயா 33 : 4 (RCTA)
தத்துக் கிளி சேர்ப்பது போல நம் மக்கள் கொள்ளைப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். வெட்டுக் கிளிகள் பாய்வது போல் அவற்றின் மேல் பாய்கிறார்கள்.
ஏசாயா 33 : 5 (RCTA)
ஆண்டவர் மேன்மையுள்ளவர், ஏனெனில் அவர் உன்னதத்தில் வாழ்கிறார்; சீயோனை நீதியாலும் நேர்மையாலும் அவர் நிரப்புகிறார்.
ஏசாயா 33 : 6 (RCTA)
நீ என்றென்றும் நிலைப்பாய் என்பது உறுதியாயிற்று, ஞானமும் அறிவுமே மீட்பு தரும் செல்வங்களாம்; ஆண்டவரைப் பற்றிய அச்சமே அவர்கள் கருவூலம்.
ஏசாயா 33 : 7 (RCTA)
இதோ, வலிமை மிக்க வீரர்கள் வீதியில் ஓலமிடுகிறார்கள், சமாதானத்தின் தூதுவர் கதறி அழுகிறார்கள்.
ஏசாயா 33 : 8 (RCTA)
நெடுங்சாலைகள் பாழாகிக் கிடக்கின்றன, வழிப் போக்கர்களும் இல்லாமற் போயினர்; உடன்படிக்கைகள் முறிக்கப்படுகின்றன, சாட்சிகள் அவமதிக்கப்படுகின்றனர், மனிதனுக்கு மதிப்பே கிடையாது.
ஏசாயா 33 : 9 (RCTA)
நாடு கதறியழுது சோர்வடைகிறது, லீபான் கலங்கித் தளர்ச்சியடைகிறது; சாரோன் பாலைநிலம் போல் இருக்கிறது, பாசானும் கார்மேலும் இலைகளையுதிர்க்கின்றன.
ஏசாயா 33 : 10 (RCTA)
ஆண்டவர் சொல்லுகிறார்: "இப்பொழுது நாம் எழுந்திடுவோம், இப்பொழுது நாம் நம்மை உயர்த்துவோம், இப்பொழுது நாம் நம்மை மகிமைப்படுத்துவோம்.
ஏசாயா 33 : 11 (RCTA)
நீங்கள் செத்தையைக் கருத்தரித்து வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; உங்கள் மூச்சு தீயைப் போல் உங்களையே விழுங்கும்.
ஏசாயா 33 : 12 (RCTA)
மக்களினங்கள், எரித்து பூத்த சாம்பல் போலும், வெட்டுண்டு நெருப்புக்கிரையான முட்கள் போலும் இருப்பர்."
ஏசாயா 33 : 13 (RCTA)
தொலைவில் இருப்பவர்களே, நாம் செய்தவற்றைக் கேளுங்கள், அருகில் உள்ளவர்களே, நமது வல்லமையை அறிந்து கொள்ளுங்கள்.
ஏசாயா 33 : 14 (RCTA)
சீயோனில் உள்ள பாவிகள் அச்சங் கொண்டனர், இறைப்பற்றற்றோரைத் திகில் ஆட்கொண்டது. "உங்களில் எவன் விழுங்கும் நெருப்போடு வாழக் கூடும்? என்றென்றும் எரியும் தழலோடு குடியிருக்கக் கூடும்?"
ஏசாயா 33 : 15 (RCTA)
நீதி நெறியில் நடப்பவனும் நேர்மையைப் பேசுபவனும், புறணியால் கிடைக்கும் பணத்தின் ஆசையை வெறுப்பவனும், கையூட்டு வாங்காமல் கையை உதறி விடுபவனும், இரத்தப் பழியின் செய்தியைக் கேட்காமல் காதை மூடுபவனும், தீமையைப் பார்க்காமல் கண்ணைப் பொத்திக் கொள்பவனும்,
ஏசாயா 33 : 16 (RCTA)
உன்னதத்தில் குடியிருப்பான்; அவனது காவலரண் பாறைகளின் கோட்டைகளாகும், அவனுக்குத் தவறாமல் உணவு தரப்படும், தண்ணீரும் அவனுக்குக் குறைபடாது.
ஏசாயா 33 : 17 (RCTA)
உன்னுடைய கண்கள் அரசனை அவனது மகிமையில் அழகில் பார்க்கும்; மிகுந்த பரப்பும் நீளமும் உடைய நாட்டை அந்தக் கண்கள் நோக்கும்.
ஏசாயா 33 : 18 (RCTA)
உன்னுடைய உள்ளம் பண்டைய திகிலையே இன்னும் நினைத்து, "நாம் செலுத்தும் திறையைக் கணக்குப் பார்ப்பவன் எங்கே? திறைப் பொருளை நிறுத்துப் பார்ப்பவன் எங்கே? நகைகளைச் சோதித்து வாங்குபவன் எங்கே?" என்று வியக்கும்.
ஏசாயா 33 : 19 (RCTA)
இனித் திமிர்பிடித்த மக்களைக் காணமாட்டாய்; விளங்காத மொழி பேசுகிறவர்களையும், புரிந்து கொள்ள முடியாதபடி தெற்றித் தெற்றிப் பேசுகிறவர்களையும் நீ பார்க்க மாட்டாய்.
ஏசாயா 33 : 20 (RCTA)
நாம் திருவிழாக்கள் கொண்டாடும் நகரமாகிய சீயோனைப் பார்! உன் கண்கள் யெருசலேமைப் பார்க்கும், அது அமைதியான இருப்பிடம், அசைக்க முடியாத கூடாரம்; அதனுடைய முளைகள் எக்காலத்தும் பிடுங்கப்பட மாட்டா, அவற்றில் பிணைத்துள்ள கயிறுகள் அறுந்து போகவு மாட்டா.
ஏசாயா 33 : 21 (RCTA)
ஏனெனில் அங்கு தான் நம் ஆண்டவர் மகிமையோடு விளங்குவார்; அகலமான ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைத்தான இடம் அது; துடுப்புகளால் செலுத்தப்படும் படகு அங்கே போகாது, போர்க்கப்பல் அவ்விடத்தில் நுழையாது.
ஏசாயா 33 : 22 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் நம்முடைய நீதிபதி, ஆண்டவர் நமக்குச் சட்டம் இயற்றுகிறவர், ஆண்டவர் நம்முடைய அரசர், அவரே நம்முடைய மீட்பர்.
ஏசாயா 33 : 23 (RCTA)
உன்னுடைய கப்பற் கயிறுகள் தளர்ந்து போயின, பாய் மரத்தைக் கெட்டியாய் அவை பிடித்திருக்கவில்லை, அதில் உங்களால் பாயைப் பரப்பவும் முடியாது. உன் திரளான கொள்ளைப் பொருட்கள் பங்கிடப்படும், முடவர்களும் அதில் பாகம் பெறுவார்கள்.
ஏசாயா 33 : 24 (RCTA)
நான் நோய்வாய்ப் பட்டிருக்கிறேன்" என்று எவனும் சொல்ல மாட்டான், அங்கு வாழ்கிற மக்களின் அக்கிரமம் அகற்றப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24