ஏசாயா 32 : 1 (RCTA)
இதோ நீதியோடு ஓர் அரசர் ஆட்சி செய்வார், அவருடைய தலைவர்கள் அனைத்தையும் நேர்மையாய் நடத்துவர்.
ஏசாயா 32 : 2 (RCTA)
ஒவ்வொருவரும் காற்றிலிருந்து காப்பாற்றும் ஒதுக்கிடமாகவும், புயலுக்கு மறைந்து கொள்ளும் புகலிடமாகவும், வறட்சியான இடத்திலே நீரோடை போலவும், பாலை நிலத்தில் கற்குகையின் நிழல் போலவும் இருப்பர்.
ஏசாயா 32 : 3 (RCTA)
காட்சி காண்போரின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கா; கேட்பவர்களின் செவிகள் கூர்ந்து கவனமாய்க் கேட்கும்.
ஏசாயா 32 : 4 (RCTA)
பேதைகளின் உள்ளம் அறிவைக் கண்டுணரும், தெற்று வாயர்களின் நாக்கு விரைவாயும் தெளிவாயும் பேசும்.
ஏசாயா 32 : 5 (RCTA)
அறிவிலி இனி மேல் பெருந்தலைவர் என்று பெயர்பெற மாட்டான். கயவன் இனி மேல் பெரிய மனிதன் என்று சொல்லப்படான்.
ஏசாயா 32 : 6 (RCTA)
ஏனெனில் அறிவிலி மடமையானவற்றைப் பேசுவான், அவன் உள்ளம் அக்கிரமத்தைச் சிந்திக்கும்: அவனுடைய சிந்தனையெல்லாம் அக்கிரமம் செய்வதும், ஆண்டவரைக் குறித்துக் கபடமாய்ச் பேசுவதும், பசியுற்றவனின் ஆவலை நிறைவு செய்யாமலே விடுவதும், தாகமுற்றவனுக்கு நீர் தராமல் மறுத்து விடுவதுமே.
ஏசாயா 32 : 7 (RCTA)
கயவனின் கயமைச் செயல்கள் பொல்லாதவை; ஏனெனில் எளியவனின் வழக்கு நீதியானதாலும், இவன் அந்த ஏழையைப் பொய் வார்த்தைகளால் கெடுக்கும்படி வஞ்சகத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுகிறான்.
ஏசாயா 32 : 8 (RCTA)
ஆனால் சான்றோன் சான்றோனுக்குத் தகுதியானவற்றையே சிந்திப்பான், சான்றாண்மையினின்று நிலை பெயரான்.
ஏசாயா 32 : 9 (RCTA)
சோம்பிக் கிடக்கும் பெண்களே, எழுந்திருங்கள்; நான் சொல்வதைக் கேளுங்கள். மிஞ்சின நம்பிக்கை கொண்ட மங்கையரே, என் சொற்களுக்குச் செவிசாயுங்கள்.
ஏசாயா 32 : 10 (RCTA)
ஓராண்டும் சில நாட்களும் கடந்த பின்னர், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நீங்கள் கலக்க மடைவீர்கள்; ஏனெனில் திராட்சை அறுவடை முடிந்து விட்டது, கனி கொய்தலும் இனி வராது.
ஏசாயா 32 : 11 (RCTA)
சோம்பிக் கிடக்கிறவர்களே, அஞ்சி நடுங்குங்கள், மிஞ்சின நம்பிக்கையுள்ளவர்களே, பயந்து கலங்குங்கள்; உடைகளை உரித்து விடுங்கள், ஆடைகளை அகற்றி விடுங்கள்; இடையில் மயிராடையை வரிந்து கட்டுங்கள்;
ஏசாயா 32 : 12 (RCTA)
செழிப்பான நாட்டைக் குறித்தும், வளமான திராட்சைத் தோட்டத்தைக் குறித்தும் மாரடித்துக் கொண்டு புலம்புங்கள்.
ஏசாயா 32 : 13 (RCTA)
முட்களும் முட்புதர்களும் கிளம்புகின்ற நம் மக்களின் நிலத்தைப் பற்றியும், மகிழ்ச்சி பொங்கிய நகரத்தின் இன்பம் நிறைந்த வீடுகள் அனைத்தைப் பற்றியும் புலம்புங்கள்.
ஏசாயா 32 : 14 (RCTA)
ஏனெனில் அதன் அரண்மனை கைவிடப்படும், மக்கள் மலிந்த நகரம் வெறுமையாய் விடப்படும்; ஒப்பெல் குன்றும் காவல் கோட்டைகளும் என்றென்றைக்கும் குகைகளாய் மாறி விடும்; காட்டுக் கழுதைகளுக்கு உல்லாச இடமாகவும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாகவும் ஆகிவிடும்.
ஏசாயா 32 : 15 (RCTA)
உன்னதத்திலிருந்து மீண்டும் ஆவியானது நம் மேல் பொழியப்படும், பாலை நிலம் வளமான வயலாகவும், வளமான வயல் காடாகவும் மாறும்.
ஏசாயா 32 : 16 (RCTA)
நேர்மை பாழ்வெளியில் குடிகொள்ளும், நீதியானது செழிப்பான வயல் வெளியில் வீற்றிருக்கும்.
ஏசாயா 32 : 17 (RCTA)
நீதியால் விளையும் பயன் சமாதானம், நீதியின் பலன் அமைதியும், என்றென்றும் நீடிக்கும் அச்சமில்லா வாழ்வுமே.
ஏசாயா 32 : 18 (RCTA)
சமாதானமான இருப்பிடத்திலும், அச்சமறியாத கூடாரங்களிலும், அமைதி நிறைந்த இல்லங்களிலும் நம் மக்கள் குடியிருப்பார்கள்.
ஏசாயா 32 : 19 (RCTA)
காடு அழிக்கப்படும், பட்டணம் தாழ்த்தப்படும்.
ஏசாயா 32 : 20 (RCTA)
நீங்கள் பேறு பெற்றவர்களாய் இருப்பீர்கள், நீரருகிலெல்லாம் விதைப்பீர்கள், மாடுகளையும் கழுதைகளும் தாராளமாய் மேய விடுவீர்கள்.
❮
❯