ஏசாயா 30 : 1 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "எதிர்த்துக் கலகம் செய்யும் மக்களுக்கு ஐயோ கேடு! நாம் கொடுக்காத ஆலோசனையை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்; நம் உள்ளத்திற்கு ஒவ்வாத ஒப்பந்தத்தைச் செய்கிறார்கள், இவ்வாறு பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
ஏசாயா 30 : 2 (RCTA)
நம்மிடம் ஒரு வார்த்தை கேட்காமலே எகிப்துக்குப் போவதற்குப் புறப்படுகிறார்கள்; பார்வோனின் பாதுகாப்பில் அடைக்கலம் புகவும், எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகிறார்கள்!
ஏசாயா 30 : 3 (RCTA)
ஆதலால் நீங்கள் நம்பிய பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு வெட்கக்கேடாக மாறும்; எகிப்து நாட்டு நிழலின் புகலிடமானது உங்களுக்கு அவமானதாக இருக்கும்.
ஏசாயா 30 : 4 (RCTA)
தானி என்னுமிடத்தில் உன் தலைவர்கள் இருந்தார்கள், ஆனேஸ் வரையில் உன் தூதர்கள் போயிருந்தார்கள்.
ஏசாயா 30 : 5 (RCTA)
அவர்களுக்கு உதவிபுரிய இயலாத மக்களைக் குறித்து அனைவரும் வெட்கப் படுவார்கள்; அவர்களால் யாதொரு பயனோ உதவியோ கிடையாது. ஆனால் அவமானமும் அவமதிப்புமே கிடைக்கும்."
ஏசாயா 30 : 6 (RCTA)
தெற்கு நோக்கிப் போகும் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: துன்பமும் நெருக்கடியும் நிறைந்திருக்கும் நாட்டின் வழியாய், ஆண்சிங்கமும் பெண்சிங்கமும், விரியனும் பறவை நாகமும், வெளிவந்து நடமாடும் நாட்டின் வழியாய்ப் பொதி மிருகங்களின் மேல் தங்கள் கருவூலங்களையும், ஒருவகையிலும் பயன் தராத மக்களுக்குக் கொண்டு போகிறார்கள்.
ஏசாயா 30 : 7 (RCTA)
ஏனெனில் எகிப்து செய்யும் உதவியானது வீண் முயற்சி, பயனற்றது; ஆதலால் தான் அதை "செயலிழந்த ராகாப்" என்கிறேன்.
ஏசாயா 30 : 8 (RCTA)
இப்பொழுது நீ போய் அவர்கள் முன்னிலையில் ஒரு பலகையில் எழுதி வை; புத்தகமொன்றில் குறித்து வை. இறுதிக் காலத்தில் அது என்றென்றைக்கும் ஒரு சாட்சியாக விளங்கட்டும்.
ஏசாயா 30 : 9 (RCTA)
ஏனெனில் இம் மக்கள் கலகக்காரர்கள், இவர்கள் பொய் சொல்லுகிற பிள்ளைகள்; ஆண்டவர் கொடுக்கின்ற படிப்பினையைக் காது கொடுத்துக் கேட்காத முரட்டுப் பிள்ளைகள்.
ஏசாயா 30 : 10 (RCTA)
அவர்கள் காட்சி காண்பவர்களை நோக்கி, "நீங்கள் காட்சி காணவேண்டா" என்கிறார்கள்; தீர்க்கதரிசிகளிடம், "நேர்மையானவற்றை எங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூற வேண்டா; எங்கள் ஆசைக்கு உகந்தவற்றைப் பேசுங்கள், கற்பனைக் காட்சிகளைப் பார்த்துச் சொல்லுங்கள்.
ஏசாயா 30 : 11 (RCTA)
வழியை விட்டு விடுங்கள், பாதையை விட்டு ஒதுங்குங்கள், இஸ்ராயேலின் பரிசுத்தர் எங்கள் கண்ணில் படாதிருக்கட்டும்" என்கிறார்கள்.
ஏசாயா 30 : 12 (RCTA)
ஆதலால் இஸ்ராயேலின் பரிசுத்தர் கூறுகிறார்: "நீங்கள் இவ்வாக்கியத்தை இகழ்ந்தீர்கள், அபாண்டத்திலும் கலகத்திலும் நம்பிக்கை வைத்து, அவற்றிலேயே ஊன்றியிருக்கிறீர்கள்.
ஏசாயா 30 : 13 (RCTA)
ஆகவே, உயர்ந்த மதிற் சுவரில் நாசம் விளைவிக்கும் பிளவு திடீரென எதிர்பாராமல் இடிந்து விழுவது போல், இந்த அக்கிரமச் செயல் உங்கள் மேல் விழும்.
ஏசாயா 30 : 14 (RCTA)
அதனுடைய உடைப்பு, குயவனின் மண் பாத்திரம் சுக்கு நூறாய் உடைந்து அடுப்பிலிருந்து நெருப்பெடுக்கவோ பள்ளத்திலிருந்து கொஞ்சம் நீர் எடுக்கவோ பயன்படாததற்கு ஒப்ப, நீங்களும் நொறுக்கப்படுவீர்கள்."
ஏசாயா 30 : 15 (RCTA)
ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தரும் கடவுளுமான ஆண்டவர் கூறுகிறார்: "நீங்கள் திரும்பி வந்து அமைதியாய் இருந்தால் மீட்கப்படுவீர்கள்; அமரிக்கையிலும் நம்பிக்கையிலும் உங்கள் வலிமை இருக்கும்." ஆனால் உங்களுக்கு மனமில்லாமற் போயிற்று.
ஏசாயா 30 : 16 (RCTA)
நீங்கள் "ஒருக்காலும் முடியாது, நாங்கள் குதிரை மேல் ஏறி ஓடிப்போவோம்" என்கிறீர்கள். அவ்வாறே ஓடிப்போங்கள். "விரைந்து செல்லும் வாகனங்களில் ஏறிச் செல்வோம்" என்கிறீர்கள். ஆகவே, உங்களைத் துரத்தி வருகிறவர்களும் உங்களை விட விரைவாக வருவார்கள்.
ஏசாயா 30 : 17 (RCTA)
உங்களுள் ஆயிரம் பேர் ஒருவனுக்குப் பயந்தோடுவர்; ஐந்து பேருக்குப் பயந்து கொண்டு மலையுச்சியில் நிற்கும் கொடி மரம் போலும் குன்றின் மேலிருக்கும் அடையாள மரம் போலும் விடப்படும் வரை நீங்கள் ஓடுவீர்கள்.
ஏசாயா 30 : 18 (RCTA)
ஆதலால் உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்; அவ்வாறு உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதால் அவர் மகிமைப்படுத்தப் பெறுவார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள், அவருக்குக் காத்திருப்பவர்கள் பேறு பெற்றோர்.
ஏசாயா 30 : 19 (RCTA)
யெருசலேமில் குடியிருக்கும் சீயோன் குடிகளே, இனிமேல் நீங்கள் எப்பொழுதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள் மேல் திண்ணமாய் இரக்கம் காட்டுவார்; உங்கள் கூக்குரலுக்கு உடனே செவிசாய்த்து அருள் செய்வார்.
ஏசாயா 30 : 20 (RCTA)
ஆண்டவர் உங்களுக்குத் துன்பம் என்கிற அப்பத்தையும் வேதனை என்கிற நீரையும் கொடுத்தாலும், உங்களுடைய போதகர் இனி உங்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டார்; உங்கள் கண் முன்னாலேயே உங்கள் போதகர் இருப்பார்.
ஏசாயா 30 : 21 (RCTA)
நீங்கள் எப்பக்கம் போனாலும், உங்களுக்குப் பின்னாலிருந்து, "இதுதான் வழி, இதிலேயே நடந்து போங்கள்" என்னும் வார்த்தையைக் கேட்பீர்கள்.
ஏசாயா 30 : 22 (RCTA)
அப்போது, வெள்ளி முலாம் பூசிய படிமங்களையும், தங்க முலாம் பூசிய சிலைகளையும் வெறுத்து ஒதுக்குவீர்கள்; அசுத்தமானவை என்று சொல்லி அவற்றை வாரி வீசி, "தொலைந்து போங்கள்" என்பீர்கள்.
ஏசாயா 30 : 23 (RCTA)
நீங்கள் நிலத்தில் விதை தெளித்துள்ள இடங்களிலெல்லாம், ஆண்டவர் உங்கள் விதைகளுக்கு மழை தருவார்; நிலம் மிகுதியான விளைவைத் தரச் செய்வார்; உணவுக்குப் பஞ்சமே இராது; அந்நாளில் ஆடுகள் உங்கள் மேய்ச்சல் நிலத்தில் தாராளமாய் மேயும்;
ஏசாயா 30 : 24 (RCTA)
உங்கள் நிலத்தை உழுகின்ற காளைகளும் கழுதைகளும் களத்தில் தூற்றப்பட்டாற் போலக் கலந்து கிடக்கும் தானியங்களையெல்லாம் சாப்பிடும்.
ஏசாயா 30 : 25 (RCTA)
கோட்டைகள் இடிந்து விழுந்த பின்னர், பகைவர்கள் மாய்ந்து விழும் அந்த நாளில், உயர்ந்த மலை ஒவ்வொன்றிலும், ஓங்கிய குன்றுகள் அனைத்திலும் நீரோடைகள் வழிந்தோடும்.
ஏசாயா 30 : 26 (RCTA)
ஆண்டவர் தம் மக்களின் காயங்களைக் கட்டி, அடிகளால் உண்டான புண்களை ஆற்றும் போது, நிலாவின் ஒளி கதிரவனின் ஒளியைப் போலும், கதிரவனின் ஒளி ஏழு நாட்களின் ஒளியெல்லாம் ஒன்று திரண்டாற் போல் ஏழு மடங்காகவும் இருக்கும்.
ஏசாயா 30 : 27 (RCTA)
இதோ, தொலைவிலிருந்து ஆண்டவரின் பெயர் வருகின்றது; பொங்கியெழும் கோபத்தோடும் தாங்க முடியாத வேகத்தோடும் வருகிறது. சினத்தால் அவருடைய உதடுகள் துடிக்கின்றன, நாக்கில் கோபக் கனல் பறக்கின்றது.
ஏசாயா 30 : 28 (RCTA)
கழுத்து வரையில் உயர்ந்து எழும் வெள்ளம் போல் அவருடைய மூச்சானது எழுந்து வருகிறது; மக்களினங்களை ஒன்றுமில்லாமையாய் அழிக்கவும், பொய்யான வழியில் இட்டுச் செல்லும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்டவும் வருகிறது.
ஏசாயா 30 : 29 (RCTA)
அப்போது ஆரவாரமான கொண்டாட்டத்தின் இரவு காலத்திய இசை போலப் பாட்டு பாடுவீர்கள்; உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியானது, இஸ்ராயேலின் கற்பாறையாகிய ஆண்டவரின் மலைக்குத் தொழுகைக்குச் செல்பவன் கொண்டு போகும் இசைக் குழல் முழக்கத்தை ஒத்திருக்கும்.
ஏசாயா 30 : 30 (RCTA)
ஆண்டவர் தமது வல்லமை மிக்க குரல் எங்கும் ஒலிக்கும்படி செய்வார்; அடிப்பதற்கு ஓங்கிய கையைக் கடுங்கோப மிரட்டலிலும், விழுங்கும் நெருப்புத் தழலிலும் காண்பிப்பார்; அப்போது பெருமழையும் சுழற்காற்றும் கல்மழையும் இருக்கும்.
ஏசாயா 30 : 31 (RCTA)
அசூர் என்பவன் ஆண்டவர் குரலுக்கு நடுங்குவான்; கசையால் அடிக்கப்படுவான்.
ஏசாயா 30 : 32 (RCTA)
அந்தக் கசை ஓயாமல் அடிக்கும், உங்களுடைய வீணையோசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப ஆண்டவர் அவர்கள் மேல் கசையால் அடிப்பார். ஓங்கிய கரங்களுடன் அவர்களோடு போர் புரிவார்.
ஏசாயா 30 : 33 (RCTA)
ஏனெனில் ஏற்கனவே அவர்களுக்காக வேள்விக் குண்டம் ஏற்பாடாகியுள்ளது; அதுவே அரசனுக்கும் தயாராக்கப்பட்டுள்ளது; ஆழ்ந்து அகன்ற அக்குழியில் விறகும் வைக்கோலும் நிறைந்துள்ளன; ஆண்டவரின் கோபக் கனல் வீசும் மூச்சு கந்தக மழை போல் அவற்றை பற்ற வைக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33