ஏசாயா 27 : 1 (RCTA)
அந் நாளில் ஆண்டவர் தம்முடைய கெட்டியான, பெரிய, உறுதியான வாளினால் லெவியாத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை, நெளிந்தோடும் லெவியாத்தான் என்னும் பாம்பைத் தண்டிக்க வருவார்; வந்து கடலில் வாழும் பெரும் பாம்பைக் கொன்று போடுவார்.
ஏசாயா 27 : 2 (RCTA)
அந் நாளில் மக்கள் இவ்வாறு பாடுவர்: "இன்ப இரசம் தரும் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுங்கள்!
ஏசாயா 27 : 3 (RCTA)
ஆண்டவராகிய நாமே அதைக் கண்காணிப்பவர், இடைவிடாமல் அதற்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம்; ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, இரவும் பகலும் நாம் காவல் காக்கிறோம்.
ஏசாயா 27 : 4 (RCTA)
நமக்கு அதன் மேல் கோபமில்லை; முட்களும் முட்செடிகளும் கிளம்புமானால், அவற்றுக்கு எதிராக நாம் போர் தொடுப்போம், அவற்றைச் சேர்த்துக் கொளுத்தி விடுவோம்.
ஏசாயா 27 : 5 (RCTA)
அதை விட அவர்கள் நம்மிடம் புகலிடம் தேடட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும்."
ஏசாயா 27 : 6 (RCTA)
யாக்கோபுக்கு மன்னிப்பு; கொடியவனுக்குத் தண்டனை: எதிர் காலத்தில் யாக்கோபு வேர்கள் விடும், இஸ்ராயேல் தளிர்த்துப் பூக்கும்; உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்பும்.
ஏசாயா 27 : 7 (RCTA)
கொடுங்கோலரைத் தண்டித்தது போல் ஆண்டவர் இஸ்ராயேலைத் தண்டித்தது உண்டோ? அவர்களின் கொலைகாரரைக் கொன்றது போல் அவர்களை அவர் கொன்றாரோ?
ஏசாயா 27 : 8 (RCTA)
இஸ்ராயேலை நாட்டை விட்டு விரட்டி, அதை நீர் அளவோடே தண்டித்தீர்; கீழ்க்காற்று அடிக்கும் நாளில் தம் கடுமையான சீற்றத்தால் அம்மக்களை ஓட்டிவிட்டார்.
ஏசாயா 27 : 9 (RCTA)
ஆதலால் இவ்வாறு யாக்கோபின் அக்கிரமத்திற்குப் பரிகாரம் செய்யப்படும், அதனுடைய பாவம் மன்னிக்கப்பட்டதன் முழுப் பலன் இதுவாயிருக்கும்: சுண்ணாம்புக் கற்களை உடைத்தெறிவது போல் இஸ்ராயேல் சிலைகளின் பீடத்துக் கற்களையெல்லாம் நொறுக்கி, மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் நாசமாக்கிவிடும்.
ஏசாயா 27 : 10 (RCTA)
அரண் சூழ்ந்த நகரம் பாழாகிக் கிடக்கும், அழகிய அந்நகரம் கைவிடப்படும், பாலை நிலத்தைப் போலப் புறக்கணிக்கப்படும்; ஆங்கே கன்று வந்து மேயும், படுத்துறங்கும், அதில் தழைத்துள்ளவற்றைத் தின்னும்.
ஏசாயா 27 : 11 (RCTA)
அதன் கிளைகள் காய்ந்து முறிக்கப்படும், பெண்கள் வந்து அவற்றை விறகுக்குப் பயன்படுத்துவர்; ஏனெனில் அவர்கள் விவேகமற்ற மக்கள், ஆதலால் அவர்களைப் படைத்தவர் அவர்களுக்கு இரக்கம் காட்டார், அதை உருவாக்கினவர் அதனை விட்டு வைக்கமாட்டார்.
ஏசாயா 27 : 12 (RCTA)
அந்நாளில், ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல், எகிப்து நாட்டின் ஓடை வரையில் புணையடித்துத் தூற்றுவார்; இஸ்ராயேல் மக்களே, நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் சேர்க்கப்படுவீர்கள்.
ஏசாயா 27 : 13 (RCTA)
அந்நாளில், பெரும் ஓசையோடு எக்காளம் ஊதப்படும், அசீரியா நாட்டில் கைதியானவர்கள் வந்து கூடுவார்கள்; எகிப்து நாட்டுக்கு விரட்டப்பட்டவர்களும் வருவார்கள்; யெருசலேமில் பரிசுத்த மலை மீது ஆண்டவரை வணங்குவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13