ஏசாயா 26 : 1 (RCTA)
அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும். "நமக்கொரு வலிமையான நகரமுண்டு, நம்மைக் காக்க அதில் மதிலும் அரணும் அமைத்தார்.
ஏசாயா 26 : 2 (RCTA)
வாயில்களைத் திறந்து விடுங்கள்; உண்மையைக் கடைப்பிடிக்கும் நீதியுள்ள மக்களினம் உள்ளே வரட்டும்.
ஏசாயா 26 : 3 (RCTA)
மன உறுதியுள்ளவனை நீர் சமாதானத்தில் உறுதிப்படுத்துகிறீர், ஏனெனில் உம்மீது அவன் நம்பிக்கை வைக்கிறான்.
ஏசாயா 26 : 4 (RCTA)
ஆண்டவர் பேரில் என்றென்றும் நம்பிக்கை வையுங்கள்; ஏனெனில் ஆண்டவர் என்றென்றும் நிலைத்திருக்கும் பாறை!
ஏசாயா 26 : 5 (RCTA)
உயர்வான இடத்தில் வாழ்ந்தவர்களைத் தாழ்த்தினார், மேலோங்கியிருந்த கோட்டையைத் தகர்த்தார், புழுதியில் அதை வீழ்த்தினார்.
ஏசாயா 26 : 6 (RCTA)
காலால் அது மிதிபடும், ஏழையின் கால்களும் எளியவர்களின் அடிகளும் அதனை மிதிக்கும்."
ஏசாயா 26 : 7 (RCTA)
நீதிமானின் நெறி நேரானது. நீதிமானின் பாதை நடப்பதற்குச் செவ்வையானது.
ஏசாயா 26 : 8 (RCTA)
ஆண்டவரே, உம்முடைய கற்பனைகளின் நெறி நடந்து, உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்; உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்கள் ஆன்மாவின் ஆவலாய் இருக்கின்றன.
ஏசாயா 26 : 9 (RCTA)
என் ஆன்மா இரவில் உம்மேல் ஆவல் கொள்ளுகிறது, என் ஆவி எனக்குள்ளே ஏக்கத்தோடு உம்மைத் தேடுகிறது; உம்முடைய நீதித்தீர்ப்புகளை நீர் பூமியின் மேல் செலுத்தும் போது, பூமியின் மக்கள் நீதி என்ன என்பதை அறிகின்றனர்.
ஏசாயா 26 : 10 (RCTA)
இறைப்பற்றில்லாதவனுக்கு இரக்கம் காட்டினாலும் அவன் நீதியைக் கற்றுக் கொள்ளமாட்டான்; பரிசுத்தர்களின் நாட்டில் அவன் பாவங்களைச் செய்தான், ஆண்டவருடைய மகிமையை அவன் காணவில்லை.
ஏசாயா 26 : 11 (RCTA)
ஆண்டவரே, உமது கை ஓங்கியுள்ளது, அவர்களோ அதைப் பார்க்கவில்லை. உம் மக்கள் மேல் உமக்குள்ள ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் வெட்சி நாணட்டும். உம்முடைய எதிரிகளுக்கென மூண்ட தீ அவர்களை விழுங்கட்டும்.
ஏசாயா 26 : 12 (RCTA)
ஆண்டவரே, நீர் எங்களுக்குச் சமாதானம் அளிப்பீர், ஏனெனில் எங்கள் வேலைகளையெல்லாம் எங்களுக்காக நீரே செய்து முடித்தீர்.
ஏசாயா 26 : 13 (RCTA)
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மையன்றி வேறே ஆளுநர்கள் எங்கள் மேல் ஆட்சி செய்தனர்; ஆனால் உமது திருப்பெயரை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம்.
ஏசாயா 26 : 14 (RCTA)
இறந்த கொடுங்கோலர் வாழ்வு பெறமாட்டார்கள், அரக்கரையொத்த அவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள்; ஏனெனில் அவர்களைத் தண்டித்து நொறுக்கினீர், அவர்களைப்பற்றிய ஞாபகமே இராதபடி அழித்தீர்.
ஏசாயா 26 : 15 (RCTA)
இந்த மக்களைப் பலுகச் செய்தீர், ஆண்டவரே, இந்த மக்களைப் பலுகச் செய்தீர்; உமது மகிமையை விளங்கச் செய்தீர், நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினீர்.
ஏசாயா 26 : 16 (RCTA)
ஆண்டவரே, துன்பத்தில் உம்மைத் தேடினோம், தண்டனை பெறும் போது உம்மைப் பார்த்து மன்றாடினோம்.
ஏசாயா 26 : 17 (RCTA)
பேறுகாலம் நெருங்கும் போது தன் வேதனையில் துயருற்றுக் கதறுகின்ற கர்ப்பவதியைப் போலவே, ஆண்டவரே, உம் முன்னிலையில் நாங்களும் இருக்கிறோம்.
ஏசாயா 26 : 18 (RCTA)
நாங்களும் கர்ப்பமானோம், வேதனைப்பட்டோம், ஆனால் காற்றைப் பெற்றவர்களைப் போலத் தான் இருக்கிறோம்; நாட்டுக்கு எங்களால் மீட்பு கிட்டவில்லை, உலகத்தின் மக்கள் வீழ்ச்சியடையவில்லை.
ஏசாயா 26 : 19 (RCTA)
இறந்து போன உம் மக்கள் வாழ்வு பெறுவார்கள், கொலையுண்ட என் இனத்தார் உயிர்தெழுவர். புழுதியில் குடியிருப்பவர்களே, விழித்தெழுங்கள், மகிழ்ச்சியினால் புகழ்பாடுங்கள்; ஏனெனில் நீர் பெய்யும் பனி ஒளி வீசும் பனி, கீழ் உலகமானது உயிர் கொடுக்கும்.
ஏசாயா 26 : 20 (RCTA)
எம் மக்களே, உங்கள் அறைகளில் நுழைந்து கொள்ளுங்கள், உள்ளிருந்து கதவைச் சாத்திக்கொள்ளுங்கள்; ஆத்திரம் தணியும் வரையில் கொஞ்ச நேரம் நீங்கள் மறைந்திருங்கள்.
ஏசாயா 26 : 21 (RCTA)
ஏனெனில், இதோ தம்முடைய இடத்திலிருந்து ஆண்டவர் வெளியே வருகிறார்; உலக மக்கள் அவருக்கெதிராய்ச் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிக்க வருகிறார்; தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை நிலம் வெளிப்படுத்தும்; கொலையுண்டவர்களை மறைத்து வைக்காது.
❮
❯