ஏசாயா 25 : 1 (RCTA)
ஆண்டவரே, நீரே என் கடவுள்; உம்மை நான் மகிமைப் படுத்துவேன், உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வேன்; ஏனெனில் நீர் வியத்தகு செயல்களைச் செய்தீர்; பழங்காலத்திலேயே வகுத்திருந்த உம் திட்டங்களைப் பிரமாணிக்கமாகவும் திண்ணமாகவும் செய்து முடித்தீர்.
ஏசாயா 25 : 2 (RCTA)
ஏனெனில் அந் நகரத்தை நீர் மண்மேடாக்கினீர், அரண் சூழ்ந்த பட்டணத்தைப் பாழாக்கினீர்; திமிர் கொண்டவர்களின் கோட்டையாய் இருந்த அது இனி ஒரு நகரமாயிராது; மீண்டும் கட்டப்படாது.
ஏசாயா 25 : 3 (RCTA)
ஆதலால் வலிமை மிக்க மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள், முரட்டினத்தாரின் பட்டணங்கள் உமக்கு அஞ்சியிருக்கும்.
ஏசாயா 25 : 4 (RCTA)
ஏனெனில் எளியவனுக்கு நீர் அரணாய் இருந்தீர், ஏழைக்கு அவன் துன்பத்தில் அரணாய் இருந்தீர்; கடும் புயலில் புகலிடமாகவும், கொடிய வெப்பத்தில் குளிர் நிழலாகவும் விளங்கினீர். ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிலைத் தாக்கும் புயல் போலும், வறண்ட நிலத்தின் வெப்பம் போலும் இருக்கிறது.
ஏசாயா 25 : 5 (RCTA)
கார்மேகத்தின் தண்ணிழல் வெப்பத்தை அடக்குவது போல, நீர் திமிர்கொண்டவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குகிறீர், முரடர்களின் ஆரவாரமும் அடங்கிவிடும்.
ஏசாயா 25 : 6 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் இந்த மலை மேலே எல்லா மக்களுக்கும் விருந்தொன்று தயாரிப்பார்; அறுசுவை உணவும் சிறந்த பழ ரசமும், கொழுப்பு நிறைந்த இறைச்சியும், வடிகட்டிச் சுத்தம் செய்த திராட்சை இரசமும் அவ்விருந்திலே பரிமாறப்படும்.
ஏசாயா 25 : 7 (RCTA)
எல்லா மக்களையும் மூடியிருக்கிற மூடியையும், எல்லா இனத்தவர் மேலிருக்கும் அழுகையின் முக்காட்டையும் இந்த மலையின் மேல் அவர் அகற்றிடுவார்.
ஏசாயா 25 : 8 (RCTA)
என்றென்றைக்கும் சாவை அழித்து விடுவார், கடவுளாகிய ஆண்டவர் எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; உலகத்தில் எங்குமே இராதபடி தம் மக்களின் நிந்தையை அகற்றிவிடுவார்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார்.
ஏசாயா 25 : 9 (RCTA)
அந் நாளில் மக்கள் அனைவரும், "இதோ, இவரே நம் கடவுள், இவரையே நாம் எதிர்பார்த்திருந்தோம், இவரே நம்மை மீட்பார், இவரே ஆண்டவர், இவரையே நாம் எதிர்ப்பார்த்திருந்தோம், இவர் தரும் மீட்பைக் குறித்து அகமகிழ்ந்து அக்களிப்போம்" என்பார்கள்.
ஏசாயா 25 : 10 (RCTA)
ஏனெனில் ஆண்டவருடைய கைவன்மை இம் மலை மேல் அமரும்; குப்பைக் குழியில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல, மோவாப் அதனுடைய இடத்திலேயே மிதிக்கப்படும்.
ஏசாயா 25 : 11 (RCTA)
நீந்துபவன் நீந்தத் தன் கைகளை விரிப்பது போல மோவாப் அதன் நடுவில் தன் கைகளை விரிப்பான்; ஆயினும் ஆண்டவர் அவன் ஆணவத்தையும், கையினால் செய்யும் முயற்சிகளையும் தாழ்த்துவார்.
ஏசாயா 25 : 12 (RCTA)
உயர்வான மதில்களுடைய கோட்டைகள் அழிக்கப்படும், தரைமட்டமாகும்; அவை தூசியாய்த் தரையோடு தரையாய்த் தாழ்த்தப்படும்.
❮
❯