ஏசாயா 23 : 1 (RCTA)
தீர் நகரத்தைப் பற்றிய இறைவாக்கு: தர்ஸீசின் மரக் கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டு விட்டது; சேத்திம் நாட்டினின்று அவை வரும் போது, இந்தச் செய்தி எட்டியது.
ஏசாயா 23 : 2 (RCTA)
கடற்கரை நாட்டில் வாழும் மக்களே, சீதோன் வியாபாரிகளே, மௌனமாயிருங்கள்; உங்கள் தூதுவர்கள் நீர்மேல் பயணம் செய்து கடல் கடந்து வெளிநாடு போயிருந்தார்கள்;
ஏசாயா 23 : 3 (RCTA)
நைல் நதி நீர்பாசனத்தால் விளைந்தவையும், ஆற்றுப்பாசனத்தால் அறுவடையானவையும் உனது வருமானம்; மக்களினம் பலவற்றோடு நீ வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டாய்.
ஏசாயா 23 : 4 (RCTA)
சீதோனே, நீ வெட்கப்படு; "நான் பிரசவ வேதனை அடையவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; இளைஞர்களை உண்பிக்கவுமில்லை, கன்னிப் பெண்களை வளர்க்கவுமில்லை" என்று கடல் சொல்லுகிறது, கடற்கரைக் கோட்டை கூறுகிறது.
ஏசாயா 23 : 5 (RCTA)
தீர் நாட்டைப் பற்றிய செய்தி எகிப்துக்கு எட்டும் போது, அச் செய்தியைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.
ஏசாயா 23 : 6 (RCTA)
கடலைக் கடந்து ஓடி விடுங்கள், கடற்கரை நாட்டில் வாழ்பவர்களே, கதறியழுங்கள்.
ஏசாயா 23 : 7 (RCTA)
பண்டைக்கால முதல் நிலைத்திருந்து மகிழ்ச்சி பொங்கும் உங்கள் நகரம் இது தானோ! தொலை நாடுகளுக்குச் சென்று குடியேற இந்த நகரத்தார் கிளம்பினார்களே!
ஏசாயா 23 : 8 (RCTA)
மணிமுடிகளை மன்னர்களுக்கு வழங்கி வந்ததும், இளவரசர் போன்ற வணிகர்களைக் கொண்டிருந்ததும், உலகத்தில் மதிப்பு வாய்ந்த வியாபாரிகளைப் பெற்றிருந்ததுமான தீர் நகருக்கெதிராக இதைத் திட்டமிட்டவர் யார்?
ஏசாயா 23 : 9 (RCTA)
எல்லா மகிமையின் ஆணவத்தைப் பங்கப்படுத்தவும், உலகத்தில் மதிப்பு வாய்ந்தவர்களை அவமதிக்கவும், சேனைகளின் ஆண்டவர் தாம் இதைத் திட்டமிட்டார்.
ஏசாயா 23 : 10 (RCTA)
தர்சீஸ் ஈன்றெடுத்த மகளே, நைல் நதி போல் உன் நாட்டில் பரவியோடு, இனி மேல் உனக்குத் தடையே இல்லை.
ஏசாயா 23 : 11 (RCTA)
கடல் மீது தம் கையை அவர் நீட்டியுள்ளார், அரசுகளை அவர் ஆட்டி வைத்திருக்கிறார், கானானின் பலமான கோட்டைகளைப் பாழ்படுத்துமாறு அதற்கெதிராக ஆண்டவர் கட்டளை தந்தார்.
ஏசாயா 23 : 12 (RCTA)
ஒடுக்கப்பட்ட கன்னிப் பெண்னே, சீதோன் மகளே, இனிமேல் நீ அக்களிப்பு அடையமாட்டாய்; எழுந்து, கடல் கடந்து செத்தீமுக்குப் போ; அங்கேயும் உனக்கு அமைதி இராது" என்று அவர் சொல்லியிருக்கிறார்.
ஏசாயா 23 : 13 (RCTA)
இதோ, கல்தேயர் நாட்டைப் பார்; இப்பொழுது அது ஒரு நாடாகவே இல்லை, அசீரியர்கள் அதைக் காட்டு மிருகங்களுக்கு விட்டு விட்டனர், முற்றுகையிட அதைச் சுற்றிக் கொத்தளங்கள் எழுந்தன, அரண்மனைகள் இடித்துத் தகர்க்கப்பட்டன, நாடும் பாழாகிக் கிடக்கின்றது.
ஏசாயா 23 : 14 (RCTA)
கடல் வாணிக மரக்கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் அரண் அழிவுற்றது.
ஏசாயா 23 : 15 (RCTA)
அப்போது, எழுபது ஆண்டுகளுக்கு தீர் நகரம் மறக்கப்பட்டு விடும்; ஆனால் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், வேறொரு அரசனுடைய நாட்களில், தீர் நகருக்கு விலைமகளின் கவிதையில் சொல்லியுள்ளபடி நிறைவேறும்:
ஏசாயா 23 : 16 (RCTA)
மறக்கப்பட்ட விலைமகளே, வீணையை எடுத்துக்கொள், நகரத்தைச் சுற்றி வா, இனிய இசை எழுப்பு, பாடல்கள் பல பாடு, உன்னை அனைவரும் நினைக்கச் செய்."
ஏசாயா 23 : 17 (RCTA)
எழுபது ஆண்டுகளுக்குப் பின் ஆண்டவர் தீர் பட்டணத்தைச் சந்திப்பார்; அவள் திரும்பவும் தன் பழைய தொழிலிலேயே ஈடுபடுவாள்; பூமியின் மேலுள்ள உலகத்து அரசுகள் எல்லாவற்றுடனும் வேசித்தனம் செய்வாள்.
ஏசாயா 23 : 18 (RCTA)
ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களும் வருமானமும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்படும்; அவற்றைச் சேர்த்து வைக்க மாட்டார்கள்; அவை குவிந்து கிடக்க மாட்டா; ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களைக் கொண்டு ஆண்டவர் திருமுன் வாழ்பவர்க்கு ஏராளமான உணவும் நல்ல உடையும் வழங்கப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18