ஏசாயா 22 : 1 (RCTA)
காட்சியின் பள்ளத்தாக்கைப்பற்றிய இறைவாக்கு: நீங்கள் அனைவரும் வீட்டுக் கூரைகளின் மீது ஏறிப் போயிருப்பதற்குக் காரணம் என்ன?
ஏசாயா 22 : 2 (RCTA)
ஆரவாரமிக்க நகரமே, அக்களிப்பு கொள்ளும் பட்டணமே, மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உன்னில் நிறைந்திருப்பது ஏன்? கொலையுண்ட உன் மக்கள் வாளாலும் மடியவில்லை, போர்க்களத்திலும் மாண்டாரல்லர்.
ஏசாயா 22 : 3 (RCTA)
உன்னுடைய தலைவர்கள் அனைவரும் ஒன்றாய் ஓட்டமெடுத்தனர், வில்லை நாணேற்றாமுன்பே பிடிபட்டார்கள்; உன்னில் காணப்பட்ட யாவரும் பிடிபட்டுக் கட்டுண்டனர்.
ஏசாயா 22 : 4 (RCTA)
ஆதலால் நான் சொன்னேன்: "நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டா; ஆறாத்துயர் கொண்டு நான் அழப்போகிறேன், என் மக்களாகிய மகளின் அழிவைக் குறித்து எனக்குத் தேறுதல் சொல்ல யாரும் முயல வேண்டா."
ஏசாயா 22 : 5 (RCTA)
அமளியும் திகிலும் நிறைந்தது அந்நாள், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அதை வரச்செய்தார்; இன்னோம் பள்ளத்தாக்கில் மதிற்சுவர் தகர்க்கப்பட்டது, மக்கள் மலைகள்மேல் நின்று உதவிக்குக் கூவுகிறார்கள்.
ஏசாயா 22 : 6 (RCTA)
ஏலாம் அம்பறாத் தூணியை எடுத்துக் கொண்டது, தேர்ப்படையும் குதிரைவீரரும் புறப்பட்டுவிட்டனர், கீர் நகர மக்கள் கேடயத்தை எடுத்து வந்தனர்.
ஏசாயா 22 : 7 (RCTA)
செழுமையான உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிரப்பப்பட்டன; குதிரை வீரர் உன் வாயில்களிலே வந்து அணிவகுத்து நின்றனர்.
ஏசாயா 22 : 8 (RCTA)
யூதாவின் மதில் இடிபட்டுத் திறக்கப்பட்டது, அந்நாளில் 'வனவீடு' என்னும் படைக்கலச் சாலையை நோக்கினாய்;
ஏசாயா 22 : 9 (RCTA)
தாவீதின் நகரத்து மதில்களில் உடைப்புகள் பல இருந்ததைக் கண்டீர்கள்; கீழ்குளத்தின் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்.
ஏசாயா 22 : 10 (RCTA)
யெருசலேமின் வீடுகளை எண்ணினீர்கள், அரணைப் பலப்படுத்த வீடுகளை இடித்தீர்கள்.
ஏசாயா 22 : 11 (RCTA)
பழங்குளத்தின் தண்ணீருக்கென்று இரண்டு மதில்களுக்கு நடுவில் ஒரு நீர்த் தேக்கம் அமைத்தீர்கள். ஆனால் படைத்தவரை நீங்கள் நோக்க மறந்தீர்கள்; முற்காலத்திலேயே அனைத்தையும் திட்டமிட்டவரைப் பார்க்கவுமில்லை.
ஏசாயா 22 : 12 (RCTA)
அந்நாளில் சேனைகளின் கடவுளான ஆண்டவர் அழும்படியும் புலம்பும்படியும், தலையை மழித்துக் கொள்ளவும், சாக்குத் துணி உடுத்தவும் உங்களை அழைத்தார்.
ஏசாயா 22 : 13 (RCTA)
ஆனால், இதோ நீங்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பொங்க எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியுண்டு இரசங் குடிக்கிறீர்கள்: "உண்போம், குடிப்போம், நாளைக்கு மடிவோம்" என்கிறீர்கள்.
ஏசாயா 22 : 14 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் எனக்குச் சொன்னார், நான் காதால் கேட்டேன்: "நீங்கள் சாகும் வரையில் இந்த அக்கிரமத்துக்கு மன்னிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
ஏசாயா 22 : 15 (RCTA)
சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "வீட்டுக் காரியங்களைக் கவனிக்கின்ற காரியக்காரனான சொப்னா என்பவனிடம் போய், அவனுக்கு நீ இதைச் சொல்லவேண்டும்:
ஏசாயா 22 : 16 (RCTA)
உனக்கு இங்கே என்ன வேலை? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? உனக்கென்று நீ இங்கே கல்லறை வெட்டியிருக்கிறாய், உயர்ந்த இடத்தில் உனக்குக் கல்லறை அமைக்கிறாய், பாறையில் உனக்கோர் இருப்பிடம் குடைந்துள்ளாயே!
ஏசாயா 22 : 17 (RCTA)
மனிதா, இதோ உன்னை ஆத்திரத்தோடு ஆண்டவர் பிடித்துத் தள்ளுவார், உன்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுவார்.
ஏசாயா 22 : 18 (RCTA)
சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றுவார், பரந்த வெளியில் உன்னைப் பந்தாடுவார், அங்கேயே நீ சாவாய்; உன் தலைவனுடைய வீட்டுக்கோர் அவமானமாய் இருந்தவனே, உன் அழகிய தேர்களும் அங்கேயே கிடக்கும்.
ஏசாயா 22 : 19 (RCTA)
உன் பதவியிலிருந்து உன்னைக் கீழே தள்ளுவோம், உன் நிலையிலிருந்து உன்னை விழத்தாட்டுவோம்.
ஏசாயா 22 : 20 (RCTA)
அந் நாளில் எல்கியாவின் மகனான நம் ஊழியன் எலியாக்கீமை அழைப்போம்.
ஏசாயா 22 : 21 (RCTA)
உன் உடைகளை அவனுக்கு உடுத்துவோம், உன் இடைக் கச்சையை அவனுக்குக் கட்டுவோம், உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்போம், யெருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வீட்டாருக்கும் அவன் ஒரு தந்தையைப் போல் இருப்பான்.
ஏசாயா 22 : 22 (RCTA)
தாவீதின் வீட்டுத் திறவுகோலை நாம் அவனுடைய தோள் மேல் வைப்போம்; அவன் திறந்தால், யாரும் அதை மூடமாட்டார்கள்; அவன் மூடினால், யாரும் அதைத் திறக்கமாட்டார்கள்.
ஏசாயா 22 : 23 (RCTA)
உறுதியான சுவரில் முளை போல் அவனை அடித்து வைப்போம்; அவன் தன் தந்தையின் வீட்டுக்கு மகிமையின் அரியணையாவான்;
ஏசாயா 22 : 24 (RCTA)
முளையாணியாகிய அவன் மேல் அவனுடைய தந்தையின் வீட்டு மகிமையெல்லாம்- சந்ததியும் வழித் தோன்றல்களும் கிண்ணங்கள் முதல் குடங்கள் வரையுள்ள எல்லாக் கலங்களும்- மாட்டித் தொங்கும்.
ஏசாயா 22 : 25 (RCTA)
அந் நாளில், உறுதியான சுவரில் அடிக்கப்பட்டிருந்த முளை பிடுங்கிக்கொள்ளும்; முளையானது முறியுண்டு கீழே விழும்; அதில் தொங்கியவை அனைத்தும் அழியும்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
❮
❯