ஏசாயா 16 : 1 (RCTA)
சேலாவிலிருந்து பாலை நிலத்தின் வழியாய் சீயோன் மகளின் மலைக்கு நாடாளும் மன்னனுக்குச் செலுத்த வேண்டிய செம்மறிகளை அனுப்புங்கள்.
ஏசாயா 16 : 2 (RCTA)
அலைந்து திரியும் பறவைகள் போலும், கூட்டை விட்டோடும் குஞ்சுகள் போலும் மோவாப் நாட்டின் மங்கையர்கள் அர்னோன் ஆற்றுத் துறையில் நின்று கொண்டு,
ஏசாயா 16 : 3 (RCTA)
கூட்டங் கூடுங்கள், ஆலோசனை செய்யுங்கள்; நண்பகலில் இரவு போல நிழல் உண்டாக்குங்கள், துரத்தப்பட்டவர்களுக்குப் புகலிடம் கொடுங்கள், தப்பியோடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
ஏசாயா 16 : 4 (RCTA)
மோவாபிலிருந்து தப்பி வந்தவர்கள் உங்கள் நடுவில் தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனிடமிருந்து தப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்" என்கிறார்கள். ஒடுக்குபவன் ஒழிந்த பிறகு, அழிவு முடிவெய்திய பின்பு காலால் மிதித்துக் கொடுமை செய்பவன் நாட்டினின்று ஒழிந்து போன பின்னர்,
ஏசாயா 16 : 5 (RCTA)
நிலையான அன்பினால் ஓர் அரியணை அமைக்கப்படும்; அதன் மேல் தாவீது மன்னனின் கூடாரத்தில் உண்மையுள்ள ஒருவர் அமர்வார்; அவர் தீர்ப்புக் கூறுவார், நீதியை நாடுவார், நியாயம் வழங்குவதில் காலந்தாழ்த்த மாட்டார்.
ஏசாயா 16 : 6 (RCTA)
மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு! அதன் இறுமாப்பும் செருக்கும் திமிரும் பற்றிக் கேள்விப் பட்டோம், அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்.
ஏசாயா 16 : 7 (RCTA)
ஆதலால் மோவாப் நாட்டினர் மோவாபுக்காகப் புலம்பட்டும், எல்லாரும் அலறியழட்டும்; அழுங்கள்; கிர்ஹாரெசெத் திராட்சை அடைகளை நினைத்து, மனமுடைந்து பெருமூச்செறியுங்கள்.
ஏசாயா 16 : 8 (RCTA)
எசேபோனின் வயல்கள் வாடுகின்றன, சபாமா திராட்சைக் கொடிகள் உலருகின்றன; அவற்றின் திராட்சைக் குலைகள் பல நாட்டு மன்னர்களைப் போதையால் கீழே விழத்தாட்டின; அந்தத் திராட்சைக் கொடிகள் ஒரு பக்கத்தில் யாசேர் வரையிலும் மறுபக்கத்தில் பாலை நிலம் வரையிலும் எட்டின; அவற்றின் தளிர்கள் கடலுக்கப்பாலும் படர்ந்து சென்றன.
ஏசாயா 16 : 9 (RCTA)
ஆதலால் யாசேரைப் போலவே நானும் சபாமா திராட்சைக் கொடிக்காகப் புலம்பியழுவேன்; எசேபோனே, ஏலயாலே, உங்களை என் கண்ணீரால் நனைத்திடுவேன்; ஏனெனில் உன் கனிகள் மேலும், அறுவடை மேலும் போர்க்களத்தின் ஆரவாரம் கேட்டதே.
ஏசாயா 16 : 10 (RCTA)
வளமான வயலினின்று அக்களிப்பும் மகிழ்ச்சியும் எடுபட்டன; திராட்சைத் தோட்டங்களில் பாட்டுகள் கேட்கவில்லை, ஆரவாரங்கள் எழும்பவில்லை; ஆலைகளில் திராட்சைப் பழங்களை மிதிப்பாரில்லை, மிதிப்பவரின் ஆர்ப்பரிப்பு அடங்கி விட்டது.
ஏசாயா 16 : 11 (RCTA)
ஆதலால், வீணையின் அழுசுரம் போல் என் உள்ளம் மோவாபுக்காகக் குமுறியழுகிறது; என் இதயம் கிர்ஹாரெசெத் அழிவைக் குறித்து பதறுகின்றது.
ஏசாயா 16 : 12 (RCTA)
மோவாப் நாட்டினர் உயரமான இடங்களுக்கு வந்து பரிசுத்த இடத்தில் மன்றாடுவது பயனொன்றும் தராது.
ஏசாயா 16 : 13 (RCTA)
இதுவே கடந்த காலத்தில் ஆண்டவர் மோவாபைக் குறித்துக் கூறிய இறைவாக்கு.
ஏசாயா 16 : 14 (RCTA)
ஆனால் இப்பொழுது ஆண்டவர் கூறுகிறார்: "கூலியாள் கணக்கின்படி, இன்னும் மூன்று ஆண்டுகளில் மோவாபின் மகிமை நாசமாகும்; திரளான மக்கட் கூட்டம் இருந்தும் அதைக் காக்க முடியாது; அவர்களுள் எஞ்சியிருப்போர் மிகச் சிலரே ஆவர்; அவர்களும் வலுவிழந்திருப்பர்.
❮
❯