ஏசாயா 14 : 1 (RCTA)
ஆண்டவர் யாக்கோபின் மேல் இரக்கம் காட்டுவார்; இஸ்ராயேலை மறுபடியும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் நிலைநாட்டுவார்; அந்நியரும் அவர்களோடு கூடிவந்து யாக்கோபின் வீட்டாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
ஏசாயா 14 : 2 (RCTA)
புறவினத்தார் வந்து அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிப் போவார்கள்; இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய நாட்டில் அவர்களை வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொள்வார்கள்; தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமைகளாக்குவார்கள்; தங்களை ஒடுக்கினவர்களை அடக்கி ஆளுவார்கள்.
ஏசாயா 14 : 3 (RCTA)
ஆண்டவர் உன் வேதனையையும் நெருக்கடியையும், உன் மேல் சுமத்தப்பட்டிருந்த அடிமை வாழ்வையும் அகற்றி உனக்கு அமைதி தந்த பிறகு,
ஏசாயா 14 : 4 (RCTA)
பபிலோனிய அரசனுக்கு எதிராக இந்த வசைப் பாடலைக் கூறு: "கொடுங்கோலன் என்ன கதியானான்? அவனுடைய ஆணவம் என்ன ஆயிற்று?
ஏசாயா 14 : 5 (RCTA)
கொடியவர்களின் தடியையும் ஆட்சி செய்தவர்களின் கோலையும் ஆண்டவர் ஒடித்தெறிந்தார்.
ஏசாயா 14 : 6 (RCTA)
ஆத்திரத்தோடு மக்களை ஓயாமல் அடி மேல் அடியாக அடித்து நொறுக்கி, கோபத்தோடு மக்களினங்களை இரக்கமின்றித் துன்புறுத்தி ஆண்டு வந்த கொடுங்கோலை முறித்து விட்டார்.
ஏசாயா 14 : 7 (RCTA)
உலகமெலாம் இளைப்பாறி அமைதியடைகிறது; பூரிப்பால் அக்களித்துப் பாடுகின்றனர்.
ஏசாயா 14 : 8 (RCTA)
தேவதாரு மரங்களும் லீபானின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியால் மகிழ்ந்து உன்னைப்பற்றி, 'நீ வீழ்ந்தாய், எமை வீழ்த்த எமக்கெதிராய் வருபவர் யாருமில்லை' எனக் கூறும்.
ஏசாயா 14 : 9 (RCTA)
நீ வரும்போது எதிர் கொண்டு சந்திக்கும்படி கீழுள்ள பாதாளம் துள்ளி எழுகிறது; உலகத்தின் தலைவர்களின் நிழல்கள் எல்லாம் வந்துன்னை வரவேற்க எழுப்புகின்றது; பல நாட்டு மன்னர்களாய் இருந்தவரெல்லாம் அரியணை விட்டு எழுந்திருக்கச் செய்கின்றது.
ஏசாயா 14 : 10 (RCTA)
அவர்கள் அனைவரும் உன் முன் வந்து, 'நீயுமா எங்களைப் போல் வலுவிழந்தாய்! நீயும் எங்களைப் போல் ஆகிவிட்டாயே!' என்று அவர்கள் உன்னை நோக்கிக் கூறுவார்கள்.
ஏசாயா 14 : 11 (RCTA)
உன் ஆடம்பரம் தரைமட்டம் ஆகிவிட்டது, இசை முழக்கம் பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டது. அரி புழுக்கள் உன் கீழ் படுக்கையாகும், பூச்சிகளே உனக்குரிய போர்வையாகும்,
ஏசாயா 14 : 12 (RCTA)
வைகறைப் புதல்வனே, விடி வெள்ளியே, வானின்று நீ வீழ்ந்த வகை தான் என்னே! புண்பட மக்களை வாட்டி வந்த நீ எவ்வாறு தரை மீது வீழ்த்தப்பட்டாய்?
ஏசாயா 14 : 13 (RCTA)
வானுலகத்திற்கு நான் ஏறிப் போவேன், கடவுளின் விண்மீன்களுக்கும் அப்பால் உயரத்தில் என் அரியணையை அமைத்திடுவேன், தொலைவான வடபுறத்தின் எல்லையிலே, சபை கூடும் மலை மேலே வீற்றிருப்பேன்;
ஏசாயா 14 : 14 (RCTA)
மேகங்களுக்கும் மேலாக ஏறிடுவேன், உன்னதற்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன்' என்று நீ உன்னுள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.
ஏசாயா 14 : 15 (RCTA)
ஆயினும் நீ பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டாய், படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.
ஏசாயா 14 : 16 (RCTA)
காண்பவர்கள் உன்னை இன்னும் உற்றுப் பார்ப்பர்; 'உலகமெலாம் நடு நடுங்கச் செய்தவனும், அரசுகள் ஆட்டங்கொள்ளச் செய்தவனும்,
ஏசாயா 14 : 17 (RCTA)
பூமியினைப் பாலை நிலம்போல் ஆக்கிவிட்டு அதனுடைய நகரங்களை வீழ்த்தியவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை தராமல் வைத்திருந்தவனும் இவன் தானோ' என்று சொல்லுவார்கள்.
ஏசாயா 14 : 18 (RCTA)
மக்களினங்களின் அரசலெல்லாரும் மகிமையோடு படுத்துள்ளனர், ஒவ்வொருவரும் தத்தம் கல்லறையில் படுத்துள்ளனர்;
ஏசாயா 14 : 19 (RCTA)
நீயோ கல்லறையினின்று புறம்பே எறியப்பட்டு அருவருப்பான அழுகல் போல விடப்பட்டாய்; வாளால் வெட்டுண்டு இறந்தவர்களின் உடல்களால் மூடப்பட்டாய்; பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நாற்றமெடுத்த பிணம் போலக் கிடக்கின்றாய்.
ஏசாயா 14 : 20 (RCTA)
அவர்களோடு சேர்த்து உன்னை அடக்கம் செய்ய மாட்டார்கள், ஏனெனில் உனது நாட்டை நீ பாழாக்கினாய், உன் நாட்டு மக்களை நீ கொன்று போட்டாய். "தீமை செய்வோர் சந்ததியின் பெயர் எந்நாளும் சொல்லப்படாது,
ஏசாயா 14 : 21 (RCTA)
கொலைகளத்துக்கு அவன் மக்களைத் தயாரியுங்கள், ஏனெனில் அவர்களுடைய தந்தையர் அக்கிரமம் செய்தனர்; இனிமேல் அவர்கள் உலகத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தத் தலையெடுக்கவே கூடாது; பூமியின் நகரங்களை நிரப்பவும் கூடாது."
ஏசாயா 14 : 22 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அவர்களுக்கு எதிராக நாம் கிளம்புவோம்; பபிலோனின் பெயரையும், அங்கே எஞ்சியிருப்போரையும், வழித் தோன்றல்களையும் சந்ததியையும் அழிப்போம் என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 14 : 23 (RCTA)
அதை முள்ளம் பன்றிகளின் உரிமையாக்குவோம்; நீரும் சேறும் நிறைந்த இடமாக்குவோம்; அழிவு என்னும் துடைப்பம் கொண்டு முழுவதும் பெருக்குவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
ஏசாயா 14 : 24 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகிறார்: "நாம் திட்டமிட்டவாறே நிகழ்ந்து வரும், நாம் எண்ணியபடியே நிறைவேறி வரும்;
ஏசாயா 14 : 25 (RCTA)
நம்முடைய நாட்டில் அசீரியனை அழிப்போம், நம் மலைகளின் மேல் அவனைக் காலால் மிதிப்போம்; அவனுடைய நுகத்தடி அவர்களிடமிருந்து அகலும், அவன் வைத்த சுமை அவர்கள் தோளினின்று இறங்கும்."
ஏசாயா 14 : 26 (RCTA)
பூமியனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள உட்கருத்து இதுவே. மக்களினம் அனைத்தின் மேலும் நீட்டிய கையும் இதுவே.
ஏசாயா 14 : 27 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் ஆணை தந்திருக்க, அதைத் தடுக்க வல்லவன் யார்? அவர் தமது கையை நீட்டியிருக்க, அதை மடக்கக் கூடியவன் யார்?
ஏசாயா 14 : 28 (RCTA)
ஆக்காஸ் அரசன் இறந்து போன ஆண்டில் இந்த இறைவாக்கு அருளப்பட்டது:
ஏசாயா 14 : 29 (RCTA)
பிலிஸ்தேயா நாடே, நீ அக்களிக்காதே, உன்னை அடித்த தடி முறிந்ததென மகிழாதே; ஏனெனில் பாம்பென்னும் வேரிலிருந்து ஒரு கட்டு விரியன் புறப்பட்டு வரும்; அதனுடைய கனியாக ஒரு பறவை நாகம் வெளிப்படும்.
ஏசாயா 14 : 30 (RCTA)
எளியவர்களில் எல்லாம் எளியவர்கள் உணவு பெறுவர், ஏழைகள் நம்பிக்கையோடு இளைப்பாறுவர்; ஆனால் உன் இனத்தைப் பசியால் மடியச் செய்வோம், உன் சந்ததியில் எஞ்சியோரை நாசமாக்குவோம்.
ஏசாயா 14 : 31 (RCTA)
வாயிலே புலம்பியழு, நகரமே கதறியழு; பிலிஸ்தேயா நாடே நடுநடுங்கு! ஏனெனில் வடதிசையிலிருந்து புகை எழும்புகிறது, அந்த அணிவகுப்புகளை விட்டகல்வோன் எவனுமில்லை."
ஏசாயா 14 : 32 (RCTA)
அந்நாட்டுத் தூதுவர்க்கு என்ன பதில் சொல்வது? "ஆண்டவர் சீயோனை உறுதியாக நிலை நாட்டினார், அவருடைய மக்களுள் துன்புறுவோர் அங்கே புகலிடம் பெறுகின்றனர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32