ஏசாயா 13 : 1 (RCTA)
ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் பபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு.
ஏசாயா 13 : 2 (RCTA)
மொட்டை மலை மீது கொடியேற்றுங்கள், அவர்களை நோக்கி உரக்கக் கூவுங்கள்; பெருங்குடி மக்களின் வாயில்களில் நுழையும்படி அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.
ஏசாயா 13 : 3 (RCTA)
போருக்கென அர்ச்சிக்கப்பட்ட நம் வீரர்களுக்கு நாமே ஆணை பிறப்பித்திருக்கிறோம்; நம்முடைய கோபத்தின் கட்டளையை நிறைவேற்றிட, வலிமையில் பெருமை கொள்ளும் நம் வீரர்களை அழைத்திருக்கிறோம்;
ஏசாயா 13 : 4 (RCTA)
இதோ, மலைகளின் மேல் பேரிரைச்சல்! பெருங் கூட்டம் வருவது போல் ஆரவாரம்! இதோ, அரசுகளின் எழுச்சிக் குரல்! மக்களினங்கள் ஒன்றாகக் கூடுகின்றன! சேனைகளின் ஆண்டவர் போருக்காக, ஆள் சேர்த்துச் சேனையொன்றைத் திரட்டுகின்றார்.
ஏசாயா 13 : 5 (RCTA)
தொலை நாட்டினின்று அவர்கள் வருகின்றார்கள், தொடுவானத்து எல்லையிலிருந்து வருகின்றார்கள்; ஆண்டவரும் அவரது ஆத்திரத்தின் படைக்கலங்களும் உலகத்தை முழுவதும் அழிக்கவே வருகின்றனர்.
ஏசாயா 13 : 6 (RCTA)
கதறியழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் அருகில் உள்ளது; பேரழிவைப் போல் எல்லாம் வல்லவரிடமிருந்து அது வரும்!
ஏசாயா 13 : 7 (RCTA)
ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து போகும், மனிதரின் உள்ளமெல்லாம் சோர்வடையும்.
ஏசாயா 13 : 8 (RCTA)
அவர்கள் திகில் அடைவார்கள், வேதனைகளும் துயரமும் அவர்களைப் பிடித்தலைக்கும், பிள்ளை பெறும் பெண்ணைப் போல் அவர்கள் வேதனையுறுவர்; ஒருவரையொருவர் திகிலோடு உற்று நோக்குவர், அவர்களுடைய முகங்களில் தீப்பறக்கும்.
ஏசாயா 13 : 9 (RCTA)
இதோ, ஆண்டவருடைய நாள் வருகின்றது. கொடுமையும் ஆத்திரமும் கடுஞ்சினமும் நிறைந்த நாள் அது; உலகத்தைப் பாழாக்கி அது வெறுமையாக்கும், அதிலிருக்கும் பாவிகளை அழித்தகற்றும்.
ஏசாயா 13 : 10 (RCTA)
வானத்து மீன்களும் விண்மீன் கூட்டங்களும், தம் ஒளியினை வீசமாட்டா; தோன்றும் போதே கதிரவன் இருண்டு போவான். வெண்ணிலவும் தன்னொளியைப் பரப்பிடாது.
ஏசாயா 13 : 11 (RCTA)
உலகத்தை அதன் தீமைக்காகத் தண்டித்திடுவோம், தீயோரை அவர்களின் அக்கிரமத்துக்காகப் பழிவாங்குவோம்; இறுமாப்புக் கொண்டவரின் செருக்கை அடக்குவோம்; முரடர்களின் ஆணவத்தை அழித்துத் தாழ்த்துவோம்.
ஏசாயா 13 : 12 (RCTA)
சுத்தத் தங்கத்தை விட மனிதர்களை அரிதானவர்கள் ஆக்குவோம், ஓப்பீரின் தங்கத்தை விட மனித உயிர் அரிதாகும்.
ஏசாயா 13 : 13 (RCTA)
ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வோம், பூமியும் தன்னிலையில் ஆட்டங்கொடுக்கும்; சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால், அவர் கடுஞ் சினத்தின் நாளிலே இவை நடக்கும்.
ஏசாயா 13 : 14 (RCTA)
துரத்தப்பட்டுத் தப்பியோடும் மான் கன்று போல், சேர்ப்பாரின்றி சிதறுண்ட ஆடுகளைப் போல், அவனவன் தன் மக்களிடம் திரும்பியோடுவான் அவனவன் சொந்த நாட்டை நோக்கி ஓடுவான்,
ஏசாயா 13 : 15 (RCTA)
அகப்பட்டுக் கொள்பவன் எவனும் கொல்லப்படுவான், பிடி படுபவன் எவனும் வாளால் மடிவான்.
ஏசாயா 13 : 16 (RCTA)
அவர்களின் கண்கள் காணும்படியே அவர்களுடைய குழந்தைகள் நசுக்கப்படுவர்; அவர்களின் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களின் மனைவியர் கற்பழிக்கப்படுவர்.
ஏசாயா 13 : 17 (RCTA)
மேதியரை அவர்களுக்கெதிராய் இதோ நாம் தூண்டுகிறோம், அவர்கள் வெள்ளியைப் பொருட்படுத்தாதவர்கள்; பொன்னை விரும்பித் தேடாதவர்கள்.
ஏசாயா 13 : 18 (RCTA)
ஆனால் அம்புகளால் இளைஞரைக் கொல்வர், பால் குடிக்கும் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டார், குழந்தைகளுக்கு அவர்கள் கண்கள் இரங்கமாட்டா.
ஏசாயா 13 : 19 (RCTA)
அரசுகளின் மகிமையும், கல்தேயரின் பெருமிதமும், பேரழகுமான பபிலோன் பட்டணம், கடவுள் கவிழ்த்து வீழ்த்திய சோதோம், கொமோரா நகரங்களைப் போலவே ஆகிவிடும்.
ஏசாயா 13 : 20 (RCTA)
மக்கள் இனி ஒரு போதும் அங்கே குடியேற மாட்டார்கள், எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்; அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார், இடையர் தம் ஆடுகளை அங்கு மடக்க மாட்டார்.
ஏசாயா 13 : 21 (RCTA)
ஆனால் காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக் கிடக்கும், ஆந்தைகள் அவர்களுடைய வீடுகளில் அடைந்து கிடக்கும், தீக்கோழிகள் அங்கு வந்து குடி கொண்டிருக்கும், கூளிகள் அவ்விடத்தில் கூத்துகள் ஆடும்.
ஏசாயா 13 : 22 (RCTA)
அவர்களின் அரண்மனைகளில் கழுதைப் புலிகள் கத்தும், இன்ப மாளிகைகளில் குள்ள நரிகள் ஊளையிடும்; அதற்குரிய காலம் நெருங்கி விட்டது; அதற்குரிய நாட்களோ தொலைவில் இல்லை.
❮
❯