ஏசாயா 10 : 1 (RCTA)
அநீதியான சட்டங்களை ஆக்குவோர்க்கும், அநியாயங்களை எழுதி வருவோர்க்கும் ஐயோ கேடு!
ஏசாயா 10 : 2 (RCTA)
அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல் ஒடுக்குகிறார்கள், நம் மக்களுள் எளியோரின் உரிமையைப் பறிக்கிறார்கள். கைப்பெண்களைக் கொள்ளைப் பொருள் போல பறிக்கிறார்கள், திக்கற்றவர்களை இரையாக்கிக் கொள்ளுகிறார்கள்!
ஏசாயா 10 : 3 (RCTA)
தண்டனை கிடைக்கும் நாளிலே என்ன செய்வீர்கள்? தொலைவிலிருந்து அழிவு வரும் போது என்ன ஆவீர்கள்? உதவி தேடி யாரிடம் ஓடிச் செல்வீர்கள்? உங்கள் செல்வங்களை எவ்விடத்தில் வைத்துச் செல்வீர்கள்?
ஏசாயா 10 : 4 (RCTA)
கைதியாய் விலங்குக்குத் தலை வணங்காமலோ, மடிந்தவர்களோடு மடியாமலோ தப்ப முடியாது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 10 : 5 (RCTA)
அசீரியாவுக்கு ஐயோ கேடு! கோபத்தில் நாம் எடுக்கும் கோல் அது, ஆத்திரத்தில் நாம் ஏந்தும் தடி அந் நாடு.
ஏசாயா 10 : 6 (RCTA)
இறைப் பற்றில்லா இனத்திற்கெதிராய் அதை அனுப்புகிறோம், நம் ஆத்திரத்துக்கு ஆளான மக்களுக்கு விரோதமாய் அதற்கு நாம் ஆணை கொடுக்கிறோம்; அவர்களைக் கொள்ளையடித்துப் பொருட்களைப் பறித்துக் கொள்ளவும், தெருவிலிருக்கும் சேற்றைப் போல் அவர்களை மிதிக்கவும் அந்நாட்டுக்கு நாம் கட்டளையிடுகிறோம்.
ஏசாயா 10 : 7 (RCTA)
ஆனால் அந்நாட்டினர் அவ்வாறு நினைக்கவில்லை, அவர்கள் மனம் அவ்வாறு கருதவில்லை; ஆனால் அவர்கள் மனம் மக்களினம் பலவற்றை அழித்து நாசமாக்கவே விரும்புகிறது.
ஏசாயா 10 : 8 (RCTA)
ஏனெனில் அவர்கள் சொல்வது இதுவே: "எங்கள் படைத் தலைவர் அனைவரும் அரசர்கள் அல்லரோ?
ஏசாயா 10 : 9 (RCTA)
கால்னோ நகரம் கார்க்கேமிஷ் போலானதில்லையோ? ஏமாத்தோ அர்பாத்தைப் போல் இல்லையோ? சமாரியா தமஸ்குவைப் போல் இல்லையோ?
ஏசாயா 10 : 10 (RCTA)
யெருசலேம், சமாரியா இவற்றிலுள்ள படிமங்களை விடச் சிறப்பு வாய்ந்த சிலைகளுடைய அரசுகள் வரை நம்முடைய கை எட்டியிருக்க,
ஏசாயா 10 : 11 (RCTA)
சமாரியாவுக்கும் அதன் படிமங்களுக்கும் நாம் செய்தது போல, யெருசலேமுக்கும் அதன் சிலைகளுக்கும் செய்யமாட்டோமா?"
ஏசாயா 10 : 12 (RCTA)
ஆண்டவர் சீயோன் மலை மீதும் யெருசலேமின் மேலும் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு அசீரியாவின் அரசனுடைய ஆணவம் நிறைந்த உள்ளத்தின் சிந்தனை மேலும், இறுமாப்பு நிறைந்த அவன் செருக்கின் மேலும் தண்டனையை வரச் செய்வார்.
ஏசாயா 10 : 13 (RCTA)
ஏனெனில் அவன் இவ்வாறு சொல்லி வந்தான்: "என்னுடைய கையின் வல்லமையால் அதைச் செய்து முடித்தேன், என் ஞானத்தால் அதற்கான திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்களின் எல்லைகளை அகற்றி விட்டேன், அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன், அரியணைகளில் அமர்ந்திருந்தவர்களைக் கீழே தள்ளினேன்.
ஏசாயா 10 : 14 (RCTA)
குருவிக் கூட்டைப் பிரித்தெடுப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களை எடுத்துக் கொண்டது; கைவிடப்பட்ட முட்டைகளைச் சேர்த்தெடுப்பது போல் உலக முழுவதையும் நான் சேர்த்துக்கொண்டேன்; எனக்கெதிராய் இறக்கையடிக்க யாருமில்லை, வாய் திறக்கவோ கீச்சிடவோ துணிந்தாரில்லை."
ஏசாயா 10 : 15 (RCTA)
பிளப்பவனுக்கும் மேலாகக் கோடரி பெருமை கொள்வதுண்டோ? அறுப்பவனுக்கு எதிராக வாள் மேன்மை பாராட்டுமோ? தன்னைத் தூக்கியவனைக் கைத்தடி சுழற்றியது போலும், மரமல்லாத மனிதனை மரக்கோலானது தூக்கியது போலுமாகும்!
ஏசாயா 10 : 16 (RCTA)
ஆதலால் ஆண்டவர்- சேனைகளின் ஆண்டவர், அவனுடைய கொழுத்த வீரர்கள் நடுவில் பாழாக்கும் நோயை அனுப்புவார்; அவனுடைய மகிமைக்குக் கீழே தணல் பற்ற வைக்கப்படும், அது நெருப்பைப் போல் எரியும்.
ஏசாயா 10 : 17 (RCTA)
இஸ்ராயேலின் ஒளியானவர் நெருப்பாவார்; அதனுடைய பரிசுத்தர் தீக்கொழுந்தாய் இருப்பார்; அவனுடைய முட்களையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டுத் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்.
ஏசாயா 10 : 18 (RCTA)
அவனுடைய காட்டின் மகிமையையும் வளம் நிறைந்த சோலையின் மாண்பினையும் ஆண்டவர் முற்றிலும் அழித்து விடுவார், உடலும் உயிரும் அழிக்கப்படும்; நோயாளி ஒருவன் மெலிந்து தேய்வது போல் அதுவும் அவ்வாறே ஆகி விடும்.
ஏசாயா 10 : 19 (RCTA)
அவனுடைய காட்டின் மரங்களுள் மிகச் சிலவே எஞ்சியிருக்கும், ஒரு குழந்தை கூட அவற்றைக் கணக்கிட்டு எழுதி விடலாம்.
ஏசாயா 10 : 20 (RCTA)
அந்நாளில் இஸ்ராயலின் வீட்டாருள் எஞ்சியவரும், யாக்கோபின் வீட்டாருள் தப்பியவரும், தங்களைத் துன்புறுத்தியவனைச் சார்ந்திராமல், உண்மையில் இஸ்ராயேலின் பரிசுத்தராகிய ஆண்டவரையே இனிச் சார்ந்திருப்பார்கள்.
ஏசாயா 10 : 21 (RCTA)
எஞ்சினோர் திரும்பி வருவார்கள், யாக்கோபின் வீட்டாருள் எஞ்சினோர் வல்லமை மிக்க கடவுளிடம் திரும்பி வருவர்.
ஏசாயா 10 : 22 (RCTA)
இஸ்ராயேலே, உன் மக்கள் கடற்கரை மணி போல் எண்ணிறந்தாராயினும், அவர்களுள் எஞ்சினோர் மிகச் சிலரே திரும்பிவருவர். அழிவு முடிவு செய்யப்பட்டு விட்டது; இதிலெல்லாம் இறைவனின் நீதி விளங்கும்.
ஏசாயா 10 : 23 (RCTA)
ஏனெனில் இறைவன் சேனைகளின் ஆண்டவர் தம் தீர்மானத்தின்படியே நாடெங்கினும் அழிவைக் கொண்டுவருவார்.
ஏசாயா 10 : 24 (RCTA)
ஆதலால் இறைவன்- சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "சீயோனில் வாழ்கின்ற எம் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியர்கள் உங்களைத் தடியினால் அடிக்கும் பொழுதும், உங்களுக்கெதிராய்த் தங்கள் கோலை உயர்த்தும் பொழுதும் நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
ஏசாயா 10 : 25 (RCTA)
ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்தில் நமது ஆத்திரம் தணிந்து விடும்; அவர்களை அழிக்கும்படியாக நமது கோபம் திருப்பப்படும்.
ஏசாயா 10 : 26 (RCTA)
ஓரேப் பாறையருகில் முன்பு மாதியானைத் தண்டித்தது போலும், எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது கோலை நீட்டியது போலும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கெதிராய்ச் சாட்டையை எடுப்பார்.
ஏசாயா 10 : 27 (RCTA)
அந்நாளில் உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை நீங்கும், உங்கள் கழுத்திலிருந்து அவனுடைய நுகத்தடி எடுக்கப்படும்"; ரிம்மோனிலிருந்து புறப்பட்டு வந்துள்ளான்,
ஏசாயா 10 : 28 (RCTA)
அயாத்துக்கு அவன் வந்து விட்டான், மகிரோனைக் கடந்து சென்றுள்ளான், மக்மாஸ் அருகில் தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.
ஏசாயா 10 : 29 (RCTA)
கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள், காபாவின் அருகில் தங்கி இரவைக் கழிக்கிறார்கள்; ராமா திடுக்கிட்டு அஞ்சுகிறது, சவுலின் நகரான கபாஹாத் ஓட்டமெடுத்தது.
ஏசாயா 10 : 30 (RCTA)
கால்லீம் என்னும் மங்கையே கூக்குரலிடு! லாயிசாவே கூர்ந்து கேள்! அநாத்தோத்தே மறுமொழி சொல்!
ஏசாயா 10 : 31 (RCTA)
மெத்மேனா ஓட்டம் பிடித்தது, காபீம் குடிமக்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.
ஏசாயா 10 : 32 (RCTA)
இன்றைக்கே அவன் நேபேயில் தங்குவான், சீயோன் மகளின் மலையையும், யெருசலேமின் குன்றையும் கையசைத்து அச்சுறுத்துவான்.
ஏசாயா 10 : 33 (RCTA)
இதோ, சேனைகளின் ஆண்டவராகிய இறைவன், பயங்கரமான வல்லமையோடு கிளைகளை வெட்டுவார், ஓங்கி வளர்ந்தவை வெட்டிக் கீழே தள்ளப்படும், உயர்ந்திருப்பவை தாழ்த்தப்படும்.
ஏசாயா 10 : 34 (RCTA)
அடர்ந்த காட்டினை அவர் கோடரியால் வெட்டித் தள்ளுவார், லீபான் நிமிர்ந்து நிற்கும் மரங்களுடன் கீழே சாயும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34