ஓசியா 5 : 1 (RCTA)
அர்ச்சகர்களே, இதைக் கேளுங்கள், இஸ்ராயேல் வீட்டாரே, கவனியுங்கள், அரச குடும்பத்தினரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தண்டனைத் தீர்ப்பு தரப்படுகிறது: ஏனெனில் மிஸ்பாவில் நீங்கள் கண்ணியாகவும், தாபேரில் விரிக்கப்பட்ட வலையாகவும் இருந்திருக்கிறீர்கள்.
ஓசியா 5 : 2 (RCTA)
வஞ்சகப் படுகுழியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர், ஆதலால் அவர்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறோம்.
ஓசியா 5 : 3 (RCTA)
எப்பிராயீமை நாம் அறிந்திருக்கிறோம், இஸ்ராயேல் நமக்குத் தெரியாததன்று; ஏனெனில் எப்பிராயீமே, நீ வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளாய்; இஸ்ராயேல் மக்கள் தீட்டுப்பட்டுள்ளனர்.
ஓசியா 5 : 4 (RCTA)
அவர்களுடைய கடவுளிடம் திரும்பி வருவதற்கு அவர்கள் செயல்கள் அவர்களை விடுவதில்லை; ஏனெனில் வேசித்தனப் புத்தி அவர்களை ஆட்கொள்கிறது, ஆண்டவரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
ஓசியா 5 : 5 (RCTA)
இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லுகிறது; எப்பிராயீம் தன் அக்கிரமத்தில் இடறி விழுகிறான்;
ஓசியா 5 : 6 (RCTA)
யூதாவும் அவர்களோடு தடுக்கி வீழ்கிறான். தங்கள் ஆடுமாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள், ஆயினும் அவரைக் கண்டடைய மாட்டார்கள்; ஏனெனில் அவர்களை விட்டு அவர் விலகி விட்டார்.
ஓசியா 5 : 7 (RCTA)
ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; ஏனெனில் விபசாரத்தால் அந்நிய பிள்ளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது அவர்களையும், அவர்கள் நிலங்களையும் அமாவாசை அடியோடு விழுங்கி விடும்.
ஓசியா 5 : 8 (RCTA)
காபாவிலே கொம்பு ஊதுங்கள், ராமாவிலே எக்காளம் ஊதுங்கள்; பெத்தாவானில் ஓலமிடுங்கள், பென்யமீனை எச்சரிக்கைப் படுத்துங்கள்.
ஓசியா 5 : 9 (RCTA)
தண்டனையின் நாளில் எப்பிராயீம் பாழ் வெளியாகும், இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கு உறுதியாய் நேரிடப்போவதையே அறிவிக்கிறோம்.
ஓசியா 5 : 10 (RCTA)
எல்லைக் கற்களைத் தள்ளிப் போடுகிறவர்களைப் போல யூதாவின் தலைவர்கள் ஆகிவிட்டனர்; வெள்ளப் பெருக்கைப் போல் அவர்கள் மேல் நமது கோபத்தை நாம் கொட்டித் தீர்ப்போம்.
ஓசியா 5 : 11 (RCTA)
எப்பிராயீம் ஒடுக்கப்படுகிறான், தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகிறான்; ஏனெனில் வீணானதைப் பின் தொடர்வதில் பிடிவாதமாய்க் கருத்தூன்றியிருந்தான்.
ஓசியா 5 : 12 (RCTA)
ஆதலால் எப்பிராயீமுக்கு நாம் அரிபுழு போலும், யூதாவின் வீட்டுக்கு உளுப்புப் பூச்சி போலும் இருப்போம்.
ஓசியா 5 : 13 (RCTA)
எப்பிராயீம் தன் பிணியைக் கண்டுகொண்டான், யூதாவும் தன் காயத்தை உணரலானான்; ஆதலால் எப்பிராயீம் அசீரியாவில் புகலிடம் தேடினான், தன்னைக் காக்கும்படி யூதா பேரரசனைக் கேட்டுக் கொண்டான். ஆனால் உங்களை நலமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
ஓசியா 5 : 14 (RCTA)
எப்பிராயீமுக்கு நாம் ஒரு சிங்கத்தைப் போலும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப் போலும் இருப்போம்; நாமே போவோம், அவர்களைக் கவ்விப் பிடிப்போம், தூக்கிக் கொண்டு ஓடுவோம்; விடுவிப்பவன் எவனுமிரான்.
ஓசியா 5 : 15 (RCTA)
தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமது முகத்தை அவர்கள் தேடும் வரை, நாம் நம்முடைய இடத்திற்கே மறுபடியும் திரும்பிப் போய் அவர்களுக்காகக் காத்திருப்போம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15