ஓசியா 2 : 1 (RCTA)
எம் மக்கள்" என்று உன் சகோதரர்க்குச் சொல், "அன்பு பெற்றவள்" என்று உன் சகோதரிக்குச் சொல்.
ஓசியா 2 : 2 (RCTA)
வழக்குத் தொடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்- அவள் எமக்கு மனைவியுமல்லள், நாம் அவளுக்கு கணவனுமல்லோம்- அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசாரக் குறிகளைத் தன் கொங்கைகளினின்றும், அகற்றட்டும்.
ஓசியா 2 : 3 (RCTA)
இல்லையேல் அவளை நிருவாணமாய்த் துகிலுரிந்து, பிறந்த நாளின் கோலமாய் அவளை ஆக்குவோம்; பாலை நிலம் போலச் செய்து, உலர்ந்த தரை போல விட்டுத் தாகத்தினால் அவளைச் சாகடிப்போம்.
ஓசியா 2 : 4 (RCTA)
அவள் பிள்ளைகள் மேலும் நாம் அன்பு கொள்ளோம், ஏனெனில், அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.
ஓசியா 2 : 5 (RCTA)
அவர்களைப் பெற்றவள் வேசியாய் இருந்தான், அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்; 'உணவும் நீரும், மயிராடையும் சணலாடையும், எண்ணெயும் பானமும் எனக்குத் தரும் என் காதலர்களோடே போவேன்' என்றாள்.
ஓசியா 2 : 6 (RCTA)
ஆகவே உன் வழியில் முள்ளடைத்து மறிப்போம்; அவள் பாதையில் சுவரெழுப்பித் தடுப்போம்; வழி கண்டு பிடித்து அவளால் போக முடியாது.
ஓசியா 2 : 7 (RCTA)
தன் காதலர்களைத் தொடர்ந்து ஓடுவாள், ஆயினும் அவள் அவர்களிடம் போய்ச் சேர மாட்டாள்; அவர்களை அவள் தேடித்திரிவாள், ஆயினும் அவர்களைக் காணமாட்டாள்; அப்போது அவள், 'என் முதல் கணவனிடம் நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதை விட அப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன்' என்று சொல்லுவாள்.
ஓசியா 2 : 8 (RCTA)
நாமே அவளுக்குக் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் கொடுத்து, வெள்ளியும் பொன்னும் அவளுக்குப் பெருகப்பண்ணினோம் என்பதை அவள் அறியவில்லை; அந்தப் பொன், வெள்ளியைக் கொண்டே பாகால் சிலை செய்தார்கள்.
ஓசியா 2 : 9 (RCTA)
ஆகையால் நாம் கொடுத்த கோதுமையை அதன் காலத்திலும், நாம் தந்த இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்து விடுவோம்; அவளது அம்மணத்தை மறைத்து மூடியிருந்த நமது மயிராடையும் சணலாடையும் உரிந்து விடுவோம்.
ஓசியா 2 : 10 (RCTA)
இப்போது அவளுடைய காதலர் கண் முன் ஆடைகளை உரிந்து அவளை நாணச் செய்வோம்; நம்முடைய கைகளிலிருந்து அவளை விடுதலை செய்பவன் எவனுமில்லை.
ஓசியா 2 : 11 (RCTA)
அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும், அமாவாசைகளையும் ஓய்வு நாட்களையும், அவளுடைய திருநாள் அனைத்தையுமே நாம் நிறுத்தி விடுவோம்.
ஓசியா 2 : 12 (RCTA)
இவை என்னுடைய உடைமைகள், என் காதலர் எனக்கு இவற்றைக் கொடுத்தார்கள்' என்று அவள் சொல்லிக் கொண்ட திராட்சைத் தோட்டங்கள், அத்திமரங்கள் அனைத்தையும் பழாக்குவோம்; அவற்றை நாம் காடாக்கி விடுவோம்; காட்டு மிருகங்கள் அவற்றைப் பாழ்படுத்தும்.
ஓசியா 2 : 13 (RCTA)
பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.
ஓசியா 2 : 14 (RCTA)
ஆதலால், இதோ, நாம் அவளை நயமாகக் கவர்ந்திழுத்துப் பாலை நிலத்துக்குக் கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம்.
ஓசியா 2 : 15 (RCTA)
நாம் அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்போம்; ஆக்கோர் என்கிற பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாய் ஆக்குவோம்; அப்பொழுது அவள் தன் இளமையின் நாட்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் செய்தது போல் அன்புக்கன்பு செய்வாள்.
ஓசியா 2 : 16 (RCTA)
அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்
ஓசியா 2 : 17 (RCTA)
அவளுடைய வாயினின்று பாகால்களின் பெயர்களை எடுத்து விடுவோம், இனி மேல் அவர்களைப் பெயரிட்டு அழைக்கமாட்டாள்.
ஓசியா 2 : 18 (RCTA)
அந்நாளில்- வயல்வெளி மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும் நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவளுக்காக நாம் ஓர் உடன்படிக்கை செய்வோம்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்றே நாம் அகற்றிவிட்டு, அவளை அச்சமின்றி ஒய்ந்திருக்கச் செய்திடுவோம்.
ஓசியா 2 : 19 (RCTA)
முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும், இரக்கத்திலும் உன்னை நாம் திருமணம் செய்து கொள்வோம்.
ஓசியா 2 : 20 (RCTA)
பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம், நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்து கொள்வாய்.
ஓசியா 2 : 21 (RCTA)
அந்நாளில்- நாம் வானத்தின் மன்றாட்டை ஏற்போம், அது நிலத்தின் கோரிக்கையைக் கேட்கும்;
ஓசியா 2 : 22 (RCTA)
நிலமானது கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் மன்றாட்டை ஏற்கும், என்கிறார் ஆண்டவர்.
ஓசியா 2 : 23 (RCTA)
நிலத்தில் நமக்காக அவளை விதைப்போல விதைப்போம். 'அன்பு பெறாதவள்' மேல் நாம் அன்பு கூருவோம். (24) 'எம் மக்களல்லர்' என்பவனை நோக்கி 'எம் மக்கள்' என்போம்; அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்."
❮
❯