ஓசியா 13 : 1 (RCTA)
எப்பிராயீம் பேசியபோது, மனிதர் நடுங்கினர், இஸ்ராயேலில் அவன் மிக உயர்த்தப்பட்டான்; ஆனால் பாகாலை வழிபட்டப் பாவத்தில் வீழ்ந்தான், மடிந்தான்.
ஓசியா 13 : 2 (RCTA)
இப்பொழுதோ தீவின் மேல் தீவினை செய்கிறார்கள், வார்ப்பிட்ட சிலைகளைத் தங்களுக்கெனச் செய்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை, அவை யாவும் தட்டானுடைய கைவேலைகளே. "இவற்றுக்குப் பலியிடுங்கள்" என்கிறார்கள்; கன்றுக்குகட்டிகளை மனிதர் முத்தம் செய்கிறார்கள்.
ஓசியா 13 : 3 (RCTA)
ஆகையால் அவர்கள் காலைநேரத்துப் பனிபோலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், களத்திலிருந்த துரும்பு சுழற்காற்றில் சிக்கியது போலும், பலகணி வழியாய் வெளிப்பட்ட புகை போலும் ஆவார்கள்.
ஓசியா 13 : 4 (RCTA)
எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை.
ஓசியா 13 : 5 (RCTA)
வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நாமே.
ஓசியா 13 : 6 (RCTA)
ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள்.
ஓசியா 13 : 7 (RCTA)
ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம்.
ஓசியா 13 : 8 (RCTA)
குட்டிகளைப் பறிக்கொடுத்த பெண் கரடி போல் அவர்கள் மேல் பாய்ந்து, மார்பைப் பிளப்போம்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்போம், காட்டு மிருகங்கள் அவர்களைக் கிழித்தெறியும்.
ஓசியா 13 : 9 (RCTA)
இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?
ஓசியா 13 : 10 (RCTA)
எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்" என்று நீ நம்மிடம் கேட்டாயே! அந்த அரசன் எங்கே? தலைவர்கள் எங்கே? அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே!
ஓசியா 13 : 11 (RCTA)
எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம்.
ஓசியா 13 : 12 (RCTA)
எப்பிராயீமின் அக்கிரமம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
ஓசியா 13 : 13 (RCTA)
பிரசவ வேதனைகள் அவனுக்கு வருகின்றன, ஆனால், அவன் ஒரு புத்தியில்லாப் பிள்ளை, ஏனெனில் பேறு காலம் வந்துவிட்டது; இருப்பினும் வயிற்றை விட்டு வெளியேறுகிறானல்லன்.
ஓசியா 13 : 14 (RCTA)
பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்போமோ? சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ? சாவே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே? இரக்கம் இப்பொழுது நம் கண் முன் இல்லை.
ஓசியா 13 : 15 (RCTA)
எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம்.
ஓசியா 13 : 16 (RCTA)
(14:1) சமாரியா அழியக் கடவது, ஏனெனில் தன் கடவுளை எதிர்த்துக் கோபமூட்டிற்று; அதன் குடிமக்கள் வாளால் மடியக்கடவார்கள், அவர்களுடைய குழந்தைகள் பாறைகளில் மோதப்படுவர்; கர்ப்பவதிகள் வயிறு கிழித்தெறியப்படும்.
❮
❯