எபிரேயர் 8 : 1 (RCTA)
நாம் சொன்னவற்றில் தலையாயது: இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார்; அவர் மகத்துவமிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார்.
எபிரேயர் 8 : 2 (RCTA)
அங்கே மனிதராலன்று கடவுளாலேயே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் இறைபணி ஆற்றுபவராயிருக்கின்றார்.
எபிரேயர் 8 : 3 (RCTA)
ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவ்வாறு செலுத்துவதற்கு ஏதாவது இவருக்கும் இருந்திருக்கவேண்டும்.
எபிரேயர் 8 : 4 (RCTA)
உலகிலேயே இருந்திருப்பாரானால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டம் குறிப்பிடும் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்க ஏற்கெனவே வேறு குருக்கள் இருக்கின்றனர்.
எபிரேயர் 8 : 5 (RCTA)
இவர்கள் வானக இறைபணியின் வெறும் சாயலும் நிழலுமாயுள்ள பணியைப் புரிகிறார்கள். இதை, மோயீசன் கூடாரத்தை அமைக்கத் தொடங்கியபொழுது கடவுள் கொடுத்த கட்டளை குறிப்பிடுகிறது: ' மலைமீது உனக்குக் காண்பித்தவற்றின் மாதிரியாக எல்லாவற்றையும் செய்யப்பார் ' என்பது அக்கட்டளை.
எபிரேயர் 8 : 6 (RCTA)
மேலான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு, இயேசுவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை எவ்வளவுக்கு மேலானதோ அவ்வளவுக்கு மேலானது அவர் பெற்றிருக்கும் இறைபணியலுவல்.
எபிரேயர் 8 : 7 (RCTA)
அந்த முதல் உடன்படிக்கை குறையில்லாததாக இருந்திருப்பின் மற்றொன்றிற்குத் தேவையே இருந்திராது.
எபிரேயர் 8 : 8 (RCTA)
ஆனால் கடவுள் அவர்களைக் குற்றங் கூறிச் சொன்னதாவது: "ஆண்டவர் கூறுவது: இதோ, ஒருநாள் வரும். அந்நாளில் இஸ்ராயேல் குலத்தாரோடும் யூதாவின் குலத்தாரோடும் புதியதோர் உடன்படிக்கை செய்துகொள்வேன்.
எபிரேயர் 8 : 9 (RCTA)
எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய முன்னோரைக் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போன நாளில், அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைபோலிராது இவ்வுடன்படிக்கை. அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை, நானும் அவர்களைக் கைவிட்டேன், என்கிறார் ஆண்டவர்.
எபிரேயர் 8 : 10 (RCTA)
அந்நாட்களுக்குப்பின் இஸ்ராயேல் குலத்தாரோடு நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே, என்கிறார் ஆண்டவர்: என் சட்டங்களை அவர்களுடைய மனத்தில் புகுத்துவேன், அவர்களுடைய உள்ளங்களில் அவற்றைப் பொறித்து வைப்பேன். நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன், அவர்கள் எனக்கு மக்களாயிருப்பர்.
எபிரேயர் 8 : 11 (RCTA)
'ஆண்டவரை அறிந்துகொள் ' என்று இனி ஒருவனும் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ கற்பிக்க வேண்டியதில்லை. சிறுவர் முதல் பெரியோர் ஈறாக எல்லாரும் என்னை அறிவர்.
எபிரேயர் 8 : 12 (RCTA)
ஆம், நான் அவர்களுடைய அக்கிரமங்களை இரக்கத்தோடு மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை இனி நினையேன்."
எபிரேயர் 8 : 13 (RCTA)
'புதியதோர் உடன்படிக்கை' என்றதால் முந்தினதைப் பழமையாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைந்துபோக வேண்டியதே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: