எபிரேயர் 5 : 1 (RCTA)
தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடையிலிருந்து தேர்ந்துகொள்ளப்பட்டு, பாவங்களுக்காகப் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவதற்காகக் கடவுளைச் சார்ந்தவற்றிற்கென மனிதர்களின் சார்பாக ஏற்படுத்தப்படுகிறார்.
எபிரேயர் 5 : 2 (RCTA)
தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையால் நெறி தவறிச் செல்வோரைப் பொறுமையோடு நடத்தக்கூடியவராயிருக்கிறார்.
எபிரேயர் 5 : 3 (RCTA)
அவர் எவ்வாறு மக்களுக்காகப் பலி செலுத்துகிறாரோ, அவ்வாறே தம் வலுவின்மையின் பொருட்டு தமக்காகவும் பாவப் பரிகாரப் பலி ஒப்புக்கொடுக்கவேண்டும்.
எபிரேயர் 5 : 4 (RCTA)
மேலும் யாரும் இவ்வுயர் நிலையைத் தானே தனக்கு உரியதாக்கிக்கொள்வதில்லை; ஆரோனைப் போன்று கடவுளிடமிருந்து அழைப்புப் பெறவேண்டும்.
எபிரேயர் 5 : 5 (RCTA)
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகும் மகிமைக்குத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை. "நீரே என் மகன் இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்" என்று கூறியவரே அந்த மகிமையை அளித்தார்.
எபிரேயர் 5 : 6 (RCTA)
அங்ஙனமே மற்றோரிடத்தில், "மெல்கிசேதேக்கின் முறைமைப்படி என்றென்றும் குருவாயிருக்கிறீர்" எனவும் கூறுகிறார்.
எபிரேயர் 5 : 7 (RCTA)
அவர் இம்மையில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து மீட்க வல்லவரிடம் பலத்த குரலெழுப்பி, கண்ணீர் சிந்தி, வேண்டுதல்களையும் மன்றாட்டுக்களையும் ஒப்புக்கொடுத்தார். அவருக்கிருந்த பயபக்தியை முன்னிட்டு இறைவன் அவருக்குச் செவிசாய்த்தார்.
எபிரேயர் 5 : 8 (RCTA)
அவர் இறைமகனாய் இருந்தும், பாடுகளினால் கீழ்ப்படிதலை நேரில் துய்த்துணர்ந்தார்.
எபிரேயர் 5 : 9 (RCTA)
இவ்வாறு, நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணரானார்.
எபிரேயர் 5 : 10 (RCTA)
'மெல்கிசேதேக் முறைமைப்படி தலைமைக் குரு' எனக் கடவுளால் பெயரிடப்பட்டவர் இவரே.
எபிரேயர் 5 : 11 (RCTA)
இதைப்பற்றிப் பேச வேண்டியது நிரம்ப உள்ளது; விளக்கம் கூறுவதோ அரிது; ஏனெனில், நீங்கள் அறிவு மழுங்கியவர்களாகிவிட்டீர்கள்.
எபிரேயர் 5 : 12 (RCTA)
இதற்குள் பிறர்க்குக் கற்பிக்க வேண்டிய நீங்கள், கடவுளுடைய வாக்குகளின் அரிச்சுவடியையே மீளவும் கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்; கெட்டியான உணவு அன்று.
எபிரேயர் 5 : 13 (RCTA)
இந்த நிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பால் குடிக்கிற எவனும் ஒரு குழந்தையே; இறைவனுக்கு ஏற்ற வாழ்வு பற்றிய படிப்பினையில் அவன் தேர்ச்சியற்றவன்.
எபிரேயர் 5 : 14 (RCTA)
பெரியவர்களுக்குத் தகுந்ததோ கெட்டி உணவு. அவர்களுக்கு நன்மை தீமை அறிவதற்குப் பயிற்சி பெற்ற பகுத்தறிவு இருக்கிறது.
❮
❯