எபிரேயர் 4 : 1 (RCTA)
ஆகையால், தம் இளைப்பாற்றியை அடையச் செய்வதாக இறைவன் அளித்த வாக்குறுதி நிலைத்தேயிருப்பினும், உங்களுள் எவரேனும் அதை வந்தடையத் தவறிவிடக் கூடுமோ என அஞ்சுவோமாக.
எபிரேயர் 4 : 2 (RCTA)
அவர்களைப் போலவே நமக்கும் இந்த நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது அவர்கள் கேட்ட வார்த்தையோ அவர்களுக்குப் பயன்படவில்லை. ஏனென்றால், கேட்டவர்கள் அவ்வார்த்தையை விசுவாசத்தோடு கேட்கவில்லை.
எபிரேயர் 4 : 3 (RCTA)
இனி அந்த இளைப்பாற்றியை அடையப்போவது விசுவாசிகளான நாமே. அதைக் குறித்துத்தான் "நான் சினங்கொண்டு, 'எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள் ' என்று ஆணையிட்டேன்" என எழுதியுள்ளது. ஆனால் உலகம் உருவானதோடு கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன.
எபிரேயர் 4 : 4 (RCTA)
ஏனென்றால், ஓரிடத்தில் ஏழாம் நாளைப்பற்றி, " தம் வேலைகள் எல்லாம் முடித்து, கடவுள் ஏழாம் நாள் இளைப்பாறினார் " என்று எழுதியுள்ளது.
எபிரேயர் 4 : 5 (RCTA)
மேலும் மேற்சொன்ன வசனத்தில், "அவர்கள் எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள் என்று" இருக்கிறது.
எபிரேயர் 4 : 6 (RCTA)
ஆகவே, அந்த இளைப்பாற்றியை அடைய வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்பது திண்ணம். ஆனால் அந்த நற்செய்தியை முதன்முதல் கேட்டவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த இழைப்பாற்றியை அடையவில்லை.
எபிரேயர் 4 : 7 (RCTA)
ஆகையால்தான் 'இன்று' என வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். இந்த நாளைக் குறித்தே, நீண்ட காலத்திற்குப் பின்னர் தாவீதின் நூலிலே மேலே கூறிய வசனத்தில், "இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்" என்கிறார்.
எபிரேயர் 4 : 8 (RCTA)
யோசுவா அவர்கள் இளைப்பாற்றியை அடையச் செய்திருந்தால் அதன் பின்னர் இறைவன் வேறொரு நாளைப்பற்றிப் பேசியிருக்கமாட்டார்.
எபிரேயர் 4 : 9 (RCTA)
ஆதலால், கடவுளுடைய மக்களுக்கு இளைப்பாற்றியின் காலம் இன்னும் வர வேண்டியிருக்கிறது.
எபிரேயர் 4 : 10 (RCTA)
ஏனெனில், இறைவனின் இளைப்பாற்றியை அடைந்துவிட்டவன், அவர் தம் வேலையை முடித்து இளைப்பாறுகிறான்.
எபிரேயர் 4 : 11 (RCTA)
ஆதலால், அவர்கள் காண்பித்த கீழ்ப்படியாமையைப் பின்பற்றி யாரும் அதே குற்றத்தில் விழாதபடிக்கு அந்த இளைப்பாற்றியை அடைய ஆர்வத்தோடு முயல்வோமாக.
எபிரேயர் 4 : 12 (RCTA)
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவின் உள்ளாழத்தையும் ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவுகிறது; மூட்டு, மூளைவரை எட்டுகிறது; உள்ளத்தின் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயர் 4 : 13 (RCTA)
அவரது பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை. யாருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தவையாகவும் உள்ளன.
எபிரேயர் 4 : 14 (RCTA)
ஆகையால், வானங்களையெல்லாம் கடந்து சென்ற ஒருவரை -- அதாவது, கடவுளின் மகனாகிய இயேசுவை தனிப்பெரும் தலைமைக் குருவாகப் பெற்றுள்ள நாம், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோமாக.
எபிரேயர் 4 : 15 (RCTA)
நம்முடைய குறைபாடுகளைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர், நம் தலைமைக் குரு. மாறாக, அவர் நம்மைப்போல் ஒருவராயிருப்பதால், பாவம் தவிர, மற்றெல்லாவற்றிலும் சோதனை, துன்பங்களுக்கு உட்பட்டவரானார்.
எபிரேயர் 4 : 16 (RCTA)
தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறை அருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

BG:

Opacity:

Color:


Size:


Font: