எபிரேயர் 2 : 1 (RCTA)
ஆகையால், வழி தவறிப்போகாதவாறு நாம் கேட்டறிந்தவற்றின்மேல் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
எபிரேயர் 2 : 2 (RCTA)
ஏனெனில், வானதூதர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட திருச்சட்டமே கட்டுப்படுத்த வல்லதாய் இருந்ததென்றால். அதற்கு எதிரான எத்தகைய குற்றமும் கீழ்ப்படியாமையும் தக்க தண்டனையைப் பெற்றுக்கொண்டதென்றால், இத்துணைப் பெரிய மீட்பைப்பற்றிக் கவலையற்று இருப்போமானால் நாம் எப்படித் தப்பமுடியும்?
எபிரேயர் 2 : 3 (RCTA)
முதன்முதல் ஆண்டவராலே அறிவிக்கப்பட்ட இந்த மீட்பைப்பற்றி, அவருடைய வார்த்தையைக் கேட்டவர்களும் நமக்கு உறுதியாகச் சான்று கூறியுள்ளனர்.
எபிரேயர் 2 : 4 (RCTA)
கடவுளும், அருங்குறிகளாலும் அற்புதங்களாலும் பல்வேறு புதுமைகளாலும், தம் விருப்பத்தின்படி அளித்த பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் அவர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தினார்.
எபிரேயர் 2 : 5 (RCTA)
நாம் குறிப்பிடும் புதிய உலகைக் கடவுள் வான தூதர்களுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தவில்லை.
எபிரேயர் 2 : 6 (RCTA)
அதற்குச் சான்றாக ஓரிடத்தில் எழுதியுள்ளதாவது: "மனிதன் யார், நீர் அவனை நினைவுகூர! மனுமகன் யார், நீர் அவனைத் தேடிவர!
எபிரேயர் 2 : 7 (RCTA)
நீர் அவனைச் சிறிது காலத்திற்கு வானதூதர்களைவிடத் தாழ்ந்தவனாக்கினீர். மகிமையும் மாட்சியும் அவனுக்கு முடியெனச் சூட்டினீர். அனைத்தும் அவனுக்கு அடிபணியச் செய்தீர். "
எபிரேயர் 2 : 8 (RCTA)
அனைத்தையும் அவனுக்குப் பணியச் செய்ததால் பணியாமலிருக்க எதையும் விடவில்லை. ஆயினும் அனைத்தும் மனிதனுக்கு இன்னும் பணிந்திருக்கக் காணோம்.
எபிரேயர் 2 : 9 (RCTA)
நாம் காண்பது, சிறிது காலத்திற்கு வான தூதர்களைவிடத் தாழ்ந்தவராக்கப்பட்ட ஒருவரைத்தான். இவர் இயேசுவே. இவர் பாடுபட்டு இறந்ததால், 'மகிமையும் மாட்சியும்' இவருக்கு முடியெனச் சூடப்பட்டதையும் காண்கிறோம். இங்ஙனம் கடவுளின் அருளால் அனைவருடைய நன்மைக்காகவும் இவர் சாவுக்குட்பட வேண்டியிருந்தது.
எபிரேயர் 2 : 10 (RCTA)
யாருக்காக எல்லாம் உள்ளனவோ, யாரால் எல்லாம் உண்டாயினவோ அவர், புதல்வர் பலரை மகிமைக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களுடைய மீட்பைத் தொடங்கி வைத்த இயேசுவைப் பாடுகளால் நிறைவுள்ளவராக்கியது தகுதியே.
எபிரேயர் 2 : 11 (RCTA)
பரிசுத்தமாக்குபவர், பரிசுத்தமாக்கப்படுபவர்கள் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனாலே இறைமகன் அவர்களைச் 'சகோதரர்கள் ' என்றழைக்க வெட்கப்படவில்லை.
எபிரேயர் 2 : 12 (RCTA)
'என் சகோதரர்களுக்கு உம் பெயரை அறிவிப்பேன்; சபையின் நடுவே உமக்குப் புகழ் பாடுவேன் ' என்றும்,
எபிரேயர் 2 : 13 (RCTA)
'நான் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்' என்றும், ' இதோ நானும் கடவுள் எனக்களித்த பிள்ளைகளும்' என்றும் கூறினாரன்றோ?
எபிரேயர் 2 : 14 (RCTA)
பிள்ளைகளுக்கு ஒரே ஊனும் இரத்தமும் இருப்பதால், அவரும் அதே ஊனும் இரத்தமும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு சாவைத்தன் கையில் கொண்டிருந்தவனை, அதாவது அலகையை, சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.
எபிரேயர் 2 : 15 (RCTA)
சாவுக்கு அஞ்சியதால் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருந்தவர்களை விடுவித்தார்.
எபிரேயர் 2 : 16 (RCTA)
வான தூதர்களுக்கு அவர் துணை நிற்கவில்லை என்பதை கண்கூடு. ஆபிரகாமின் வழி வந்தவர்களுக்கே அவர் துணை நின்றார்.
எபிரேயர் 2 : 17 (RCTA)
ஆகையால் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு, கடவுளைச் சார்ந்தவற்றில் அவர் இரக்கமுள்ளவரும் நம்பிக்கைக்குரியவருமான தலைமைக் குருவாகும்படி, எல்லாவற்றிலும் சகோதரர்களைப்போல் ஆக வேண்டியதாயிற்று.
எபிரேயர் 2 : 18 (RCTA)
அவ்வாறு தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவிசெய்ய முடிகிறது.
❮
❯