எபிரேயர் 13 : 1 (RCTA)
சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
எபிரேயர் 13 : 2 (RCTA)
விருந்தோம்பலை மறவாதீர்கள். 'விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களையும் உபசரித்ததுண்டு.
எபிரேயர் 13 : 3 (RCTA)
சிறைப்பட்டுள்ளவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பது போல, அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.
எபிரேயர் 13 : 4 (RCTA)
திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக. பள்ளியறை மஞ்சம் மாசுறாது இருக்கட்டும். காமுகரும் விபசாரரும் கடவுள் தீர்ப்புக்கு உள்ளாவர்.
எபிரேயர் 13 : 5 (RCTA)
பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளது போதுமென்றிருங்கள். ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.
எபிரேயர் 13 : 6 (RCTA)
இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும்.
எபிரேயர் 13 : 7 (RCTA)
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நற்பயனை எண்ணிப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
எபிரேயர் 13 : 8 (RCTA)
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
எபிரேயர் 13 : 9 (RCTA)
பல்வேறு நூதனமான போதனைகளால் கவரப்படாதிருங்கள். உள்ளங்களை அருளால் உறுதிப்படுத்தலே சிறந்தது. உணவு பற்றிய முறைமைகள் இதற்கு உதவா. இவற்றைக் கடைப்பிடித்தவர்கள் பயனொன்றும் அடையவில்லை.
எபிரேயர் 13 : 10 (RCTA)
நமக்கொரு பீடமுண்டு: அதில் படைக்கப்பட்டதை உண்பதற்கு கூடாரத்தில் வழிபடுவோர்க்கு உரிமையில்லை.
எபிரேயர் 13 : 11 (RCTA)
எந்த மிருகங்களில் இரத்தம் பாவப் பரிகாரமாகத் தூயகத்திற்குள் தலைமைக் குருவினால் எடுத்துச் சொல்லப்படுகிறதோ, அவற்றின் உடல் பாசறைக்குப் புறம்பே எரிக்கப்படுகின்றது.
எபிரேயர் 13 : 12 (RCTA)
அதனால்தான் இயேசுவும் தம் சொந்த இரத்தத்தால் மக்களைப் பரிசுத்தப்படுத்த வேண்டி, நகர் வாயிலுக்கு வெளியே பாடுபட்டார்.
எபிரேயர் 13 : 13 (RCTA)
ஆகவே நாமும் அவர் பட்ட நிந்தையை ஏற்று அவரிடம் போய்ச்சேர, பாசறையை விட்டு வெளியேறுவோமாக.
எபிரேயர் 13 : 14 (RCTA)
ஏனெனில், நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை; வரப்போகும் நகரையே நாடிச் செல்கிறோம்.
எபிரேயர் 13 : 15 (RCTA)
ஆகவே நாம் அவர் வழியாக எப்போதும் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக் கொடுப்போமாக. அவருடைய பெயரை அறிக்கை செய்வதால் நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலி.
எபிரேயர் 13 : 16 (RCTA)
பிறருக்கு உதவிபுரியவும், உங்களுக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளையே கடவுள் உவந்து ஏற்கிறார்.
எபிரேயர் 13 : 17 (RCTA)
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதால், உங்கள் ஆன்ம நலனில் விழிப்பாய் இருக்கின்றனர். இப்பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியானதாய் இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள். மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது. எங்களுக்காக மன்றாடுங்கள்.
எபிரேயர் 13 : 18 (RCTA)
எங்கள் மனச்சாட்சி குற்றமற்றதென்றே நம்புகிறேன். எல்லாவற்றிலும் நேர்மையோடு நடக்க வேண்டுமென்பதே எம் விருப்பம்.
எபிரேயர் 13 : 19 (RCTA)
உங்களிடம் கூடிய விரைவில் நான் வந்து சேரும்படி நீங்கள் மன்றாட இன்னும் மிகுதியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
எபிரேயர் 13 : 20 (RCTA)
ஆடுகளின் மகத்துவமிக்க மேய்ப்பரான நம் ஆண்டவராகிய இயேசுவை, முடிவில்லா உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, இறந்தோரிடமிருந்து எழுப்பியவரும் சமாதானத்தின் ஊற்றுமாகிய கடவுள்,
எபிரேயர் 13 : 21 (RCTA)
தமது திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்ய உங்களுக்குத் தகுதி அளித்து, தமக்கு உகந்ததை இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மில் செய்தருள்வாராக. இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
எபிரேயர் 13 : 22 (RCTA)
சகோதரரே, நான் உங்களுக்குக் கூறும் இவ்வறிவுரையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
எபிரேயர் 13 : 23 (RCTA)
இன்னும் ஒரு செய்தி. நம் சகோதரர் தீமோத்தேயு விடுதலையாகி விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்தால் அவரோடு நான் உங்களைப் பார்க்க வருவேன்.
எபிரேயர் 13 : 24 (RCTA)
உங்கள் தலைவர்களுக்கும், இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இத்தாலிய நாட்டுச் சகோதரர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
எபிரேயர் 13 : 25 (RCTA)
இறை அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: