எபிரேயர் 12 : 1 (RCTA)
எனவே, எண்ணிக்கையில்லாச் சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க, நமக்குத் தடையாயிருக்கும் எந்தச் சுமையையும், நம்மை எளிதில் வயப்படுத்தும் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயர் 12 : 2 (RCTA)
விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும், அதை நிறைவுபெறச் செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். அவர் தம் முன்னே வைத்திருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல், சிலுவையைத் தாங்கினார். இப்பொழுது கடவுளது அரியணையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
எபிரேயர் 12 : 3 (RCTA)
பாவிகளால் தமக்கு உண்டான எவ்வளவோ எதிர்ப்பைத் தாங்கிக் கொண்ட அவரைச் சிந்தையில் இருத்துங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போகமாட்டீர்கள்.
எபிரேயர் 12 : 4 (RCTA)
பாவத்திற்கு எதிராகச் செய்யும் போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே!
எபிரேயர் 12 : 5 (RCTA)
தம் பிள்ளைகளிடம் பேசுவது போல் இறைவன் உங்களுக்குத் தந்த அறிவுரையை நீங்கள் மறந்து விட்டீர்களோ? "என் மகனே, ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்தும் போது, அதைப் பொருட்படுத்தாமலிராதே. அவர் தண்டிக்கும் போது, தளர்ந்து போகாதே.
எபிரேயர் 12 : 6 (RCTA)
ஏனெனில், ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."
எபிரேயர் 12 : 7 (RCTA)
திருத்தப்படுவதற்காகத் தான் நீங்கள் துன்புறுகிறீர்கள். கடவுள் உங்களைத் தம் மக்கள் என நடத்துகிறார்.
எபிரேயர் 12 : 8 (RCTA)
தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டோ? இறைவன் தம் பிள்ளைகள் எல்லாரையும் கண்டித்துத் திருத்தி வந்திருக்கிறார். நீங்கள் அவ்வாறு திருத்தப்படாவிடின், உண்மையான பிள்ளைகளல்ல, வேசிப் பிள்ளைகளே.
எபிரேயர் 12 : 9 (RCTA)
உடலை நமக்களித்த தந்தையர் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். அவர்களை நாம் மதித்து வந்தோம். அப்படியானால் ஆவியை நமக்களித்த தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து நடக்கவேண்டும் அன்றோ? அப்பொழுது தான் வாழ்வு பெறுவோம்.
எபிரேயர் 12 : 10 (RCTA)
மேலும் அவர்கள் தங்கள் விருப்பம்போல் கண்டித்துத் திருத்தினார்கள்; அது சொற்பக் காலத்துக்கே பயன்பட்டது. இறைவனோ நம்மைத் தம் பரிசுத்தத்தில் பங்கு பெறும்படி, நம் நன்மைக்காகவே, கண்டித்துத் திருத்துகிறார்.
எபிரேயர் 12 : 11 (RCTA)
கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத் தான் தோன்றும். ஆனால், அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
எபிரேயர் 12 : 12 (RCTA)
எனவே, 'சோர்வுற்ற கைகளையும், தளர்ந்து போன முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்.' 'நீங்கள் நடந்து செல்லும் பாதையை நேர்மையாக்குங்கள்.'
எபிரேயர் 12 : 13 (RCTA)
அப்போதுதான் ஊனமான உறுப்பு மூட்டு பிசகாது நலமடையும்.
எபிரேயர் 12 : 14 (RCTA)
எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான்.
எபிரேயர் 12 : 15 (RCTA)
உங்களுள் யாரும் கடவுளின் அருளை இழந்து போகாமலும், கசப்பான நச்சு வேர் எதுவும் உங்களுக்குள் முளைத்துக் கேடு விளைவிக்காதபடியும், அதனால் பலர் கெட்டுப் போகாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
எபிரேயர் 12 : 16 (RCTA)
உங்களுள் யாரும் காமுகராகவோ, ஏசாவைப் போல் உலகப் பற்றுள்ளவராகவோ இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசாவு ஒரு வேளை உணவுக்கு ஈடாகத் தன் தலைப்பேற்றுரிமையை விற்றுப்போட்டான்.
எபிரேயர் 12 : 17 (RCTA)
பின்னர் அவன் தனக்குரிய ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பியும் தள்ளி விடப்பட்டான். கண்ணீர் சிந்தி அதைக் கேட்டும், தந்தையின் மனத்தை மாற்றுவதற்கு வழியில்லாமல் போயிற்று. இது உங்களுக்குத் தெரியுமன்றோ?
எபிரேயர் 12 : 18 (RCTA)
நீங்கள் வந்தடைந்திருப்பது சீனாய் மலையன்று:
எபிரேயர் 12 : 19 (RCTA)
அங்கே எரிகின்ற நெருப்பும், இருண்ட மேகமும் காரிருளும் சூழ்ந்திருந்தன; சுழல் காற்று வீசியது; எக்காளம் முழங்கியது; பேசும் குரலொன்று ஒலித்தது; அதைக் கேட்டு நின்றவர்கள், அக்குரல் அதற்கு மேல் பேச வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்கள்.
எபிரேயர் 12 : 20 (RCTA)
ஏனெனில், "இம்மலையை ஒரு கால்நடை தொட்டால் கூட அதைக் கல்லாலெறிந்து கொன்றுவிட வேண்டும்" என்று அக்குரல் தந்த கட்டளையை அவர்களால் தாங்க முடியவில்லை.
எபிரேயர் 12 : 21 (RCTA)
அக்காட்சி எவ்வளவு அச்சம் விளைத்ததெனில் மோயீசனும், "நான் அச்சத்தால் நடுங்குகிறேன்" என்றார்.
எபிரேயர் 12 : 22 (RCTA)
நீங்கள் வந்தடைந்திருப்பதோ சீயோன் மலை, உயிருள்ள கடவுளின் நகர், வானக யெருசலேம். அங்கே எண்ணற்ற வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
எபிரேயர் 12 : 23 (RCTA)
வானகத்தில் பெயர் எழுதியுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை அங்கே விழாக் கூட்டமெனக் கூடியுள்ளது. நிறைவுபெற்ற நீதிமான்களின் ஆவிகளோடு சேர்ந்து அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
எபிரேயர் 12 : 24 (RCTA)
புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளரான இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்; ஆபேலின் இரத்தத்தை விட மேலான முறையில் கூக்குரலிடும் இரத்தத் தெளிப்பின் பயனைப் பெற வந்திருக்கிறீர்கள்.
எபிரேயர் 12 : 25 (RCTA)
எனவே, இறைவனின் குரலொலியைச் செவிமடுக்க மறுத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வுலகில் தேவ வார்த்தையைப் பேசியவருக்குச் செவிசாய்க்க மறுத்த அவர்கள் தப்பிக்க முடியவில்லையென்றால், விண்ணிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால் நாம் எப்படித்தான் தப்பமுடியும்?
எபிரேயர் 12 : 26 (RCTA)
யார் தம்முடைய குரலால் அன்று வையகத்தை அசைந்தாடச் செய்தாரோ, அவர் இன்று "இன்னுமொரு முறை வையகத்தை நடுக்கமுறச் செய்வேன். வையகத்தை மட்டுமன்று, வானகத்தையும் நடுக்கமுறச் செய்வேன்" என உறுதி கூறுகிறார்.
எபிரேயர் 12 : 27 (RCTA)
'இன்னுமொருமுறை' என்றது அசைபவை, படைக்கப் பட்டவையாதலால் மாற்றம் அடையும் என்பதைக் குறிக்கும். அப்போது தான் அசையாதவை நிலைநிற்கும்.
எபிரேயர் 12 : 28 (RCTA)
ஆதலால் அசையாத அரசைப் பெற்றுக் கொண்ட நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. இந்நன்றியுணர்ச்சியில் பயபக்தியோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு ஏற்ற முறையில் வழிபாடு செய்வோமாக.
எபிரேயர் 12 : 29 (RCTA)
ஏனெனில், நம் கடவுள் சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கிறார்.
❮
❯