எபிரேயர் 11 : 1 (RCTA)
விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி.
எபிரேயர் 11 : 2 (RCTA)
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர்.
எபிரேயர் 11 : 3 (RCTA)
உலகங்களெல்லாம் கடவுளின் திருச்சொல்லால் உருவாயின என்றும், ஆகவே காணாதவற்றினின்று காண்பவை உண்டாயின என்றும் விசுவாசத்தினாலேயே உணர்கிறோம்.
எபிரேயர் 11 : 4 (RCTA)
விசுவாசத்தினால் தான் ஆபேல் காயினை விட மேலான பலியைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலேயே, அவன் நல்லவன் எனக் கடவுளிடமிருந்து சான்று பெற்றான்; ஏனெனில், அவனுடைய காணிக்கைகள் ஏற்றவையெனக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்தும் அவ்விசுவாசத்தினால் இன்னும் பேசுகிறான்.
எபிரேயர் 11 : 5 (RCTA)
விசுவாசத்தினாலேயே ஏனோக் சாவைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை மேலே எடுத்துக் கொண்டதால் மறைந்து போய்விட்டார். மேலே எடுத்துக்கொள்ளப்படுமுன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார்.
எபிரேயர் 11 : 6 (RCTA)
விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.
எபிரேயர் 11 : 7 (RCTA)
விசுவாசத்தினாலே, தம் கண்ணுக்கு மறைவாயிருந்ததைக் குறித்து நோவா இறைவனால் எச்சரிக்கப்பெற்ற போது, தம் குடும்பத்தைக் காப்பாற்றப் பயபக்தியோடு பேழையை அமைத்தார். அதே விசுவாசத்தினால் உலகைக் கண்டனம் செய்து, விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்.
எபிரேயர் 11 : 8 (RCTA)
இறைவனின் அழைப்பை ஏற்ற ஆபிரகாமை கீழ்ப்படிந்து தம் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போனது விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 9 (RCTA)
போகவேண்டிய இடத்தை அறியாதிருந்தும் புறப்பட்டுப் போனார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறி, அதே வாக்குறுதியின் உடன் உரிமையாளர்களான ஈசாக், யாக்கோபுடன் கூடாரங்களில் குடியிருந்து, வேற்று நாட்டினர் போல் வாழ்ந்தது, விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 10 (RCTA)
ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ளதொரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதன் சிற்பியும் ஆக்குநரும் கடவுளே.
எபிரேயர் 11 : 11 (RCTA)
சாராள் வயதான காலத்திலும் ஒரு மகனை ஈன்றெடுக்க ஆற்றல் பெற்றது விசுவாசத்தினாலே தான்.
எபிரேயர் 11 : 12 (RCTA)
ஏனென்றால், வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என்று அவன் கருதினான். இவ்வாறு உயிரிழந்தவர் போலிருந்த ஒரே ஆள், விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் கணக்கற்ற மக்களுக்குத் தந்தையானார்.
எபிரேயர் 11 : 13 (RCTA)
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
எபிரேயர் 11 : 14 (RCTA)
இவ்வாறு ஒப்புக்கொள்பவர்களோ நம் தாய்நாட்டைத் தேடுவோர் எனக் காட்டுகின்றனர்.
எபிரேயர் 11 : 15 (RCTA)
தாங்கள் விட்டுவந்த நாட்டையே நினைவில் வைத்திருந்தால் திரும்பிச் செல்ல வாய்ப்பு இல்லாமலா இருந்திருக்கும்!
எபிரேயர் 11 : 16 (RCTA)
ஆனால், அவர்கள் உண்மையில் நாடியது ஒரு மேலான நாட்டை, அதாவது விண்ணக நாட்டையே. அதனால்தான் கடவுளும் தம்மை 'அவர்களுடைய கடவுள்' என அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. தாமே அவர்களுக்காக ஒரு நகரை அமைத்துள்ளார் அல்லரோ?
எபிரேயர் 11 : 17 (RCTA)
விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தாம் பரிசோதிக்கப்பட்ட பொழுது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தார்.
எபிரேயர் 11 : 18 (RCTA)
"உன் பெயர் நீடிக்க, ஈசாக்கின் வழியாய் உனக்கு மக்கள் பிறப்பார்கள்" என்று இறைவன் கூறியிருந்தார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்தும் ஆபிரகாம் தம் ஒரே மகனைப் பலியிடத் தயங்கவில்லை.
எபிரேயர் 11 : 19 (RCTA)
ஏனெனில், கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார். எனவே, தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். இது ஒரு முன்னடையாளமாயிற்று.
எபிரேயர் 11 : 20 (RCTA)
விசுவாசத்தினால் தான் ஈசாக்கு பிற்காலத்தில் நிகழ வேண்டியவற்றைக் குறிப்பிட்டு யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி அளித்தார்.
எபிரேயர் 11 : 21 (RCTA)
யாக்கோபு சாகும் பொழுது சூசையின் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஆசி அளித்ததும், தமது ஊன்றுகோலின் மீது சாய்ந்து கொண்டு இறைவனைத் தொழுததும் விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 22 (RCTA)
இறக்கும் தருவாயிலிருந்த சூசை இஸ்ராயேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறிப்பிட்டதும், தம் எலும்புகளை என்ன செய்யவேண்டுமென்று கற்பித்ததும் விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 23 (RCTA)
மோயீசன் பிறந்த பொழுது குழந்தை அழகாயிருப்பதைக் கண்டு, அதன் பெற்றோர் அரசன் ஆணைக்கு அஞ்சாமல், மூன்று மாதம் அதை மறைத்து வைத்தது விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 24 (RCTA)
மோயீசன் வளர்ந்த பின்னர், தாம் பார்வோன் மகளின் மகன் எனப்பட மறுத்ததும் விசுவாசத்தினால் தான்.
எபிரேயர் 11 : 25 (RCTA)
பாவ இன்பங்களைச் சொற்பக்காலம் துய்ப்பதை விட, கடவுளுடைய மக்களோடு துன்புறுவதையே அவர் விரும்பினார்.
எபிரேயர் 11 : 26 (RCTA)
இறைவனால் அபிஷுகம் பெற்றவர்கள் படவேண்டிய நிந்தையை, எகிப்தின் கருவூலங்களினும் மேலான செல்வமாகக் கருதினார். ஏனெனில் தமக்குக் கிடைக்கப்போகும் கைம்மாற்றைக் கண் முன் வைத்திருந்தார்.
எபிரேயர் 11 : 27 (RCTA)
அரசனின் கடுஞ்சினத்திற்கு அஞ்சாமல் அவர் எகிப்து நாட்டை விட்டுச் சென்றதும் விசுவாசத்தினாலேயே. கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்ணால் பார்ப்பவர் போல், தளராமல் நிலைத்து நின்றார்.
எபிரேயர் 11 : 28 (RCTA)
அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும், முதற்பேறானவர்களை அழிக்க வந்த தூதன் இஸ்ராயேலரைத் தொடாதபடி இரத்தத்தைக் கதவு நிலைகள் மேல் தெளித்ததும் விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 29 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் கட்டாந்தரையைக் கடப்பது போலச் செங்கடலைக் கடந்தனர். எகிப்தியரோ, அவ்வழியே கடக்க முயன்ற போது மூழ்கி விட்டனர்.
எபிரேயர் 11 : 30 (RCTA)
இஸ்ராயேலர் ஏழு நாள் வலம் வந்த பின்னர், யெரிக்கோவின் மதில்கள் விழுந்ததும் விசுவாசத்தினால் தான்.
எபிரேயர் 11 : 31 (RCTA)
விலைமகளான ராகாப் ஒற்றர்களை உபசரித்து ஏற்று, அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.
எபிரேயர் 11 : 32 (RCTA)
இன்னும் சொல்ல வேண்டுமா? கிதியோன், பாராக், சாம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைப் பற்றியும் இறைவாக்கினர்களைப் பற்றியும் கூற எனக்கு நேரமில்லை.
எபிரேயர் 11 : 33 (RCTA)
விசுவாசத்தினால் தான் அவர்கள் அரசுகளை எதிர்த்து வென்றனர்; நீதி வழங்கினர்; வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொண்டனர்;
எபிரேயர் 11 : 34 (RCTA)
சிங்கத்தின் வாயை அடைத்தனர்; தீயின் கொடுமையைத் தணித்தனர்; வாள்முனைக்குத் தப்பினர்; வலிமையற்றவராயிருந்தும் வலிமை பெற்றனர்; போரில் வீரம் காட்டினர்; மாற்றார் படைகளை முறியடித்தனர்.
எபிரேயர் 11 : 35 (RCTA)
இறந்த தம்மவர் உயிருடன் எழுந்து வரப் பெண்கள் கண்டார்கள். மேலான உயிர்த்தெழுதலை அடைந்து கொள்ளும் பொருட்டு, சிலர் விடுதலை பெற விரும்பாமல் வதைக்கப்பட்டு மடிந்தனர்.
எபிரேயர் 11 : 36 (RCTA)
வேறு சிலர் ஏளனத்துக்கும் சாட்டையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில் வாடினர்.
எபிரேயர் 11 : 37 (RCTA)
கல்லால் எறியப்பட்டனர்; வாளால் அறுக்கப்பட்டனர்; பட்டயத்துக்கு இரையாயினர்; ஆட்டுத் தோலையும் செம்மறியின் தோலையும் போர்த்தி அலைந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்காளாயினர்.
எபிரேயர் 11 : 38 (RCTA)
உலகமோ அவர்களைக் கொண்டிருக்க அருகதையற்றுப் போயிற்று. குகைகளிலும் நிலப் பொந்துகளிலும் பாலை வெளிகளிலும் மலைகளிலும் அலைந்தனர்.
எபிரேயர் 11 : 39 (RCTA)
இவர்களனைவரும் விசுவாசம் கொண்டிருந்ததினாலே நற்பெயர் பெற்றனர். ஆயினும் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.
எபிரேயர் 11 : 40 (RCTA)
ஏனெனில், நம்மோடு சேர்ந்தாலொழிய அவர்கள் நிறைவு பெறலாகாது என்று கடவுள் நம்மை மனத்திற்கொண்டு மேலானதொரு திட்டம் வகுத்திருந்தார்.
❮
❯