எபிரேயர் 10 : 1 (RCTA)
வரப்போகும் நன்மைகளின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை. அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. அதனால் தான், ஆண்டுதோறும் இடைவிடாமல் ஒப்புக்கொடுத்து வரும் அதே பலிகளால் இறைவனை அணுகி வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்கத் திருச்சட்டத்திற்கு வலிமையில்லை.
எபிரேயர் 10 : 2 (RCTA)
இருந்திருந்தால் பலிகளை ஒப்புக்கொடுப்பது நின்றிருக்குமன்றோ? ஏனெனில், பலிகளால் வழிபடுபவர்கள் ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூய்மை அடைந்தவர்களாய், பாவத்தினின்று விடுபட்ட மனச்சாட்சியைப் பெற்றிருப்பார்களன்றோ?
எபிரேயர் 10 : 3 (RCTA)
மாறாக, அந்தப் பலிகளினாலே பாவம் நீங்கவில்லை என்பது தான் ஆண்டுதோறும் நினைவூட்டப்படுகிறது.
எபிரேயர் 10 : 4 (RCTA)
காளைமாடுகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.
எபிரேயர் 10 : 5 (RCTA)
அதனால் தான் உலகிற்கு வரும் போது கிறிஸ்து: "பலியோ, காணிக்கையோ, நீர் விரும்பவில்லை. ஆனால், எனக்கு ஓர் உடலை அமைத்தளித்தீர்.
எபிரேயர் 10 : 6 (RCTA)
தகனப் பலிகளோ, பாவப் பரிகாரப் பலிகளோ உமக்கு உகந்தவையாய் இல்லை.
எபிரேயர் 10 : 7 (RCTA)
அப்பொழுது நான் கூறியது: இதோ! இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன், என்னைக் குறித்தே மறைநூல் சுருளில் எழுதியுள்ளது" என்கிறார்.
எபிரேயர் 10 : 8 (RCTA)
"திருச்சட்டப்படி ஒப்புக்கொடுக்கப்பட்ட போதிலும், பலிகள், காணிக்கைகள், தகனப் பலிகள், பாவப் பரிகாரப் பலிகள் இவற்றையெல்லாம் நீர் விரும்பவில்லை, இவை உமக்கு உகந்தவையாய் இல்லை" என்று முதலில் கூறுகிறார்.
எபிரேயர் 10 : 9 (RCTA)
பின்பு, 'இதோ, உமது திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை எடுத்து விடுகிறார்.
எபிரேயர் 10 : 10 (RCTA)
இந்தத் திருவுளத்தால் தான், ஒரே முறையில் எக்காலத்திற்குமே ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவினுடைய உடலின் பலியால் நாம் பரிசுத்தராக்கப்பட்டோம்.
எபிரேயர் 10 : 11 (RCTA)
ஒவ்வொரு குருவும் நாடோறும் இறைபணி ஆற்றுகையில், கையில் திரும்பத் திரும்ப அதே பலிகளை ஒப்புக்கொடுத்து வருகிறார். அவையோ பாவங்களை ஒரு போதும் போக்கி விட இயலாதவை.
எபிரேயர் 10 : 12 (RCTA)
ஆனால், இவர் என்றென்றைக்கும் பயன்தரும் ஒரு பலியைப் பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்து, 'கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.'
எபிரேயர் 10 : 13 (RCTA)
அங்கே, 'தம் பகைவர் தமக்குக் கால்மணையாக்கப்படும் வரை' காத்திருக்கிறார்.
எபிரேயர் 10 : 14 (RCTA)
தாம் பரிசுத்தராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.
எபிரேயர் 10 : 15 (RCTA)
இதைப் பற்றிப் பரிசுத்த ஆவியும் நமக்குச் சாட்சியம் அளிக்கின்றார்.
எபிரேயர் 10 : 16 (RCTA)
எவ்வாறெனில், "ஆண்டவர் கூறுகின்றார்: அந்நாட்களுக்குப் பின் அவர்களோடு நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே:
எபிரேயர் 10 : 17 (RCTA)
என் சட்டங்களை அவர்களுடைய உள்ளத்தில் பதிப்பிப்பேன். அவர்களுடைய மனத்தில் அவற்றைப் பொறித்து வைப்பேன்" என்று சொன்ன பின், "அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையேன்" என்று தொடர்ந்து சொல்கிறார்.
எபிரேயர் 10 : 18 (RCTA)
இவற்றிற்கு மன்னிப்புக் கிடைத்த பின், பாவப்பரிகாரப் பலிக்கு இடமேயில்லை.
எபிரேயர் 10 : 19 (RCTA)
ஆகையால் சகோதரர்களே, இயேசு தம் உடலாகிய திரைச்சீலையைக் கடந்து, புதியதும் உயிருள்ளதுமானதொரு பாதையை நமக்குத் திறந்து வைத்தார்.
எபிரேயர் 10 : 20 (RCTA)
அதன் வழியாய்த் தூயகம் நுழைய அவருடைய இரத்தத்தின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு.
எபிரேயர் 10 : 21 (RCTA)
கடவுளின் வீட்டின் மீது அதிகாரம் பெற்ற ஒரு தலைமைக் குருவும் நமக்கு இருக்கிறார்.
எபிரேயர் 10 : 22 (RCTA)
ஆகையால் கெட்ட மனச்சாட்சியிலிருந்து துப்புரவாக்கப்பட்ட உள்ளமும், தூய நீரில் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாய் நேர்மை உள்ளத்தோடும், முழு விசுவாச உறுதியோடும் அவரை அணுகிச் செல்வோமாக.
எபிரேயர் 10 : 23 (RCTA)
நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக.
எபிரேயர் 10 : 24 (RCTA)
நமக்கு வாக்களித்தவர் உண்மையுள்ளவர். அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.
எபிரேயர் 10 : 25 (RCTA)
சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதி நாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.
எபிரேயர் 10 : 26 (RCTA)
உண்மையை அறியும் பேறு பெற்ற பின்னரும், நாம் வேண்டுமென்றே பாவத்தில் நிலைத்திருந்தால், இனி வேறு எந்தப் பரிகாரப் பலியுமே இராது.
எபிரேயர் 10 : 27 (RCTA)
எஞ்சியிருப்பது அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய தீர்ப்பும், பகைவரை விழுங்கப் போகும் கோபக் கனலுமே.
எபிரேயர் 10 : 28 (RCTA)
மோயீசனுடைய சட்டத்தைப் புறக்கணித்தவன், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியத்தின் மேல் சாகத்தான் வேண்டும் என்றிருந்தது.
எபிரேயர் 10 : 29 (RCTA)
அப்படியென்றால் கடவுளின் மகனையே காலால் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தப்படுத்திய உடன்படிக்கை இரத்தத்தையே இழிவுபடுத்தியவன். அருள் தரும் ஆவியையே அவமதித்தவன், எவ்வளவு பெரிய தண்டனைக்குத் தகுதியுள்ளவன் ஆவான் என்று எண்ணிப்பாருங்கள்.
எபிரேயர் 10 : 30 (RCTA)
"பழி வாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன்" என்றும், "ஆண்டவர் தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்"
எபிரேயர் 10 : 31 (RCTA)
என்றும் உரைத்தவர் யாரென்பது தெரியுமன்றோ? உயிருள்ள கடவுளின் கையில் அகப்படுதல் பயங்கரமானது.
எபிரேயர் 10 : 32 (RCTA)
நீங்கள் ஒளிபெற்றபின் பாடுகள் நிறைந்த போராட்டத்தைத் தாங்கிக்கொண்ட முன்னைய நாட்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
எபிரேயர் 10 : 33 (RCTA)
அந்நாட்களிலே, நீங்கள் வசை மொழிக்கும் வேதனைக்கும் ஆளாகி, மக்கள் முன்னிலையில் நகைப்புக்கு உள்ளானீர்கள். இவ்வாறு துன்புற்றோருக்குப் பக்கத் துணையாயிருந்தீர்கள்.
எபிரேயர் 10 : 34 (RCTA)
மெய்தான், சிறையிடப்பட்டவர்களுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்; உங்கள் உடைமைகள் பறிமுதலான போதும், அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், மேலானவையும் நிலையுள்ளவையுமான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்று உணர்ந்தீர்கள்.
எபிரேயர் 10 : 35 (RCTA)
இவ்வுறுதியான நம்பிக்கையை இப்பொழுது இழந்து விடாதீர்கள். இதற்குப் பெரிய கைம்மாறு உண்டு.
எபிரேயர் 10 : 36 (RCTA)
நீங்கள் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவர் வாக்களித்ததைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.
எபிரேயர் 10 : 37 (RCTA)
ஏனெனில், "இன்னும் மிக மிகச் சொற்பக் காலமே இருக்கிறது. வரவிருப்பவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.
எபிரேயர் 10 : 38 (RCTA)
நீதி நெறியில் நடக்கும் என் அடியான் விசுவாசத்தால் வாழ்வு பெறுவான். எவனாவது பின் வாங்கினால் அவனில் நான் பூரிப்பு அடையேன்."
எபிரேயர் 10 : 39 (RCTA)
நாமோ அழிவுக்கேதுவான முறையில் பின்வாங்குபவர்களல்ல; ஆனால், நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்.
❮
❯