ஆகாய் 1 : 1 (RCTA)
தாரியுஸ் மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டில் ஆறாம் மாதத்தின் முதல் நாளன்று, யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனாகிய சொரொபாபெலுக்கும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவுக்கும் இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
ஆகாய் 1 : 2 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவருடைய இல்லத்தை மீண்டும் எழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்ந மக்கள் சொல்லுகிறார்கள்."
ஆகாய் 1 : 3 (RCTA)
அப்போது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் ஆண்டவருடைய வாக்கு அருளப்பட்டது:
ஆகாய் 1 : 4 (RCTA)
இந்த இல்லம் பாழாய்க் கிடக்கும் போது, நீங்கள் மட்டும் மாடமாளிகைகளில் குடியிருப்பதற்குரிய காலம் வந்து விட்டதோ?
ஆகாய் 1 : 5 (RCTA)
ஆதலால் இப்பொழுது சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஆகாய் 1 : 6 (RCTA)
நீங்கள் விதைத்ததோ மிகுதி, அறுத்ததோ கொஞ்சந்தான்; நீங்கள் உண்ணுகிறீர்கள், ஆனால் வயிறு நிரம்புகிறதில்லை; நீங்கள் நீர் அருந்துகிறீர்கள், ஆயினும் தாகம் தணிவதில்லை; நீங்கள் உடுத்திக் கொள்ளுகிறீர்கள், ஆயினும் குளிர் விட்டபாடில்லை; கூலி வாங்குகிறவனும் வாங்கிய கூலியைப் பொத்தலான பையிலேயே போட்டு வைக்கிறான்.
ஆகாய் 1 : 7 (RCTA)
உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ஆகாய் 1 : 8 (RCTA)
மலைகளுக்குப் போய், மரங்கள் கொண்டுவாருங்கள், கோயில் கட்டுங்கள்; அங்கே நாம் மகிழ்ச்சியுடன் குடி கொள்வோம், மகிமை பெறுவோம், என்கிறார் ஆண்டவர்.
ஆகாய் 1 : 9 (RCTA)
மிகுதியாய்க் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள், ஆனால் கொஞ்சந்தான் கிடைத்தது; நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த போது, அதையும் நாம் ஊதிவிட்டோம். ஏன் தெரியுமா? ஏனெனில் நமது இல்லம் பாழாகிக் கிடக்கும் போது, உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் வீட்டின் மேல் கருத்தாய் இருக்கிறான்.
ஆகாய் 1 : 10 (RCTA)
ஆதலால் தான் வானமும் உங்கள் மேல் மழை பெய்யாமல் நிறுத்திவிட்டது: நிலமும் தன் விளைவைக் கொடுக்க மறுத்தது.
ஆகாய் 1 : 11 (RCTA)
மேலும், நாட்டின் மீதும் மலைகள் மீதும் கோதுமை மீதும் புதிய திராட்சை இரசத்தின் மீதும் எண்ணெய் மீதும், நிலம் விளைவிப்பது அனைத்தின் மீதும், மனிதர் மீதும் கால்நடைகள் மீதும், உழைப்பின் பலன் எல்லாவற்றின் மேலும் வறட்சியை வரச்செய்திருக்கின்றோம்."
ஆகாய் 1 : 12 (RCTA)
அப்பொழுது, சலாத்தியேலின் மகன் சொரொபாபெலும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தவர் யாவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் வார்த்தைகளுக்கும் செவிமடுத்தனர்; மக்களோ ஆண்டவரின் திருமுன் அஞ்சினர்.
ஆகாய் 1 : 13 (RCTA)
அப்போது ஆண்டவரின் தூதுவரான ஆகாய் மக்களிடத்தில் பேசி, " நாம் உங்களோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்" என்னும் ஆண்டவருடைய தூதுரையை அவர்களுக்கு அறிவித்தார்.
ஆகாய் 1 : 14 (RCTA)
அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனான சொரொபாபெலின் உள்ளத்தையும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் உள்ளத்தையும், மக்களுள் எஞ்சியிருந்தவர்கள் அனைவருடையவும் உள்ளத்தையும் கிளர்ந்தெழும்படி செய்தார்; அவர்களும் கிளம்பித் தங்கள் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்கள்.
ஆகாய் 1 : 15 (RCTA)
(14) அன்று ஆறாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15